கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் மீது சௌதியில் விசாரணை

பொது இடத்தில குட்டை பாவாடை மற்றும் கைகளை மறைக்காத மேல் சட்டை அணிந்த நிலையில் இருக்கும் தனது காணொளியை இணையத்தில் பதிவிட்ட ஒரு இளம் பெண்ணைப் பற்றி சவுதி அரேபியா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

"குலூத்" என்று அறியப்பட்ட அந்த மாடலிங் செய்யும் பெண், உஷாய்கிர் பகுதியிலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் தான் நடந்து செல்லும் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.

அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதத்தைத் தொடங்கியது. அந்த பழைமைவாத இஸ்லாமிய நாட்டின் கடுமையான ஆடை விதிகளை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்திருந்தனர்.

பிற சவுதி நாட்டவர்களோ, அப்பெண்ணின் "துணிச்சலைப்" பாராட்டி, அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.

சவுதி அரேபியப் பெண்கள், "அபயாஸ்" எனப்படும் தலதலப்பான, முழு நீள அங்கிகளையே பொது இடங்களில் அணிய வேண்டும். அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் தலையை மறைத்து முக்காடும் அணிய வேண்டும். அவர்கள் வாகனங்கள் ஓட்டுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், தங்களுடன் தொடர்பில்லாத ஆண்களிடம் இருந்தும் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.

தொடக்கத்தில் ஸ்னாப்சாட்டில் (Snapchat) கடந்த வார இறுதியில் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், சவுதி தலைநகரான ரியாதின் வடக்கில் 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, நஜ் மாகாணத்தின் உஷாய்கிர் பாரம்பரிய கிராமத்தில் உள்ள ஒரு கோட்டையின் ஆள் நடமாட்டமற்ற ஒரு தெருவில் குலூத் நடந்து போவதைக் காட்டியது.

குலூத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர் போக்கில் ஆடை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் காணொளி குறித்து சவுதி அரபியர்கள் ட்விட்டரில் கூறியிருந்தனர்.

"ஹையா எனப்படும் மதக் காவல்துறையினர் கண்டிப்பாகத் திரும்பி வர வேண்டும்," என்று பத்திரிக்கையாளர் காலேத் ஜிதான் எழுதியிருந்தார்.

"பிரான்ஸ் நாட்டில் நிக்காப் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி அணியும் பெண்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. சவுதி அரேபிய குடியரசின் சட்டங்களின்படி பெண்கள் அபயாஸ் மற்றும் அடக்கமான உடைகள் அணிய வேண்டும்," என்று இன்னொரு ட்விட்டர் பயனாளி வாதிடுகிறார்.

"அவர் குண்டுகளை வெடிக்க செய்தார் அல்லது சிலரைக் கொலை செய்தார் என்று நினைத்தேன். ஆனால் அவ்விவாதம் அவர்கள் விரும்பாத பாவாடையைப் பற்றியது என்பதை பின்னர் அறிந்தேன்," என்று எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வயேல் அல்-கஸீம் பதிவிட்டுள்ளார். "அவர் கைது செய்யப்பட்டால் விஷன் 2030 எப்படி வெற்றிபெறும்," என்று 31 வயதான புதிய முடி இளவரசர் மொஹம்மது பின் சல்மான், கடந்த ஆண்டு அறிவித்த சீர்திருத்த திட்டங்கள் குறித்துக் கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலியானா மற்றும் மகள் இவான்கா சவுதி பயணத்தின்போது அபயாஸ் அல்லது நிக்காப் அணியாதது குறித்து பதிவிட்டு சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க அதிகாரிகள் மாகாண ஆளுநரையும் , காவல் துறையினரையும் சந்தித்ததாக திங்களன்று, ஒகாஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்