“பிரசார வீடியோவில் தோன்றிய” வடகொரிய எதிர்ப்பாளர் தென்கொரியாவுக்கு கடத்தப்பட்டதாக சொல்கிறார்

  • 19 ஜூலை 2017

வடகொரியாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவந்த பெண், அந்த நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டாரா என்ற புலனாய்வை தென் கொரிய உளவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை URIMINZOKKIRI
Image caption வடகொரிய பிரசார வீடியோவில் தோன்றும் பெண், சுய விருப்பத்திலேயே நாடு திரும்பியதாக கூறுகிறார்.

லிம் ஜி-ஹ்யுன் என்னும் வடகொரியப் பெண், 2014-இல் தென்கொரியாவுக்கு தப்பி வந்து, அங்கு தொலைகாட்சிப் பிரபலமானார்.

ஆனால், லிம் ஹி-ஹ்யுனைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண், ஞாயிறன்று வடகொரியா வெளியிட்டுள்ள ஒரு பிரசார வீடியோவில் தோன்றியதை அடுத்து, அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

தூண்டுதலின்பேரில் தென்கொரியாவுக்கு சென்று வடகொரியாவுக்கு எதிராக அவதூறு கூறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான லிம் ஹி-ஹ்யுன்

தனது சுயவிருப்பப்படியே, எல்லையை கடந்து வடகொரியாவுக்கு திரும்பி வந்திருப்பதாக லிம் தெரிவித்துள்ளார்.

தென்கொரிய தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிடி நிகழ்ச்சிகளில் லிம் ஹி-ஹ்யுன் பங்கேற்று பிரபலமானார்.

அந்த பிரசார வீடியோவில் இருக்கும் பெண் லிம் ஹி-ஹ்யுன் என்று அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யாவிட்டாலும், தற்போது அவர் வடகொரியாவில் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

வடகொரியாவின் உரிமிஜோகிரி என்ற வலைதளம், யூடியூப் வாயிலாக இந்த பிரசார வீடியோவை வெளியிட்டது.

அந்த வீடியோவில் தோன்றும் பெண், ஜியோன் ஹை-சுங் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

இந்த வீடியோவில் தோன்றும் பெண்ணை பேட்டி எடுத்த 'கிம் மன்-பொக்' வடகொரிய எதிர்ப்பாளராக இருந்து பிறகு நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவில் மிகவும் தனிமையாக உணர்ந்தேன்

"நன்றாக உண்ணலாம், நிறைய சம்பாதிக்கலாம் என்று கற்பனையாக ஆசைக்காட்டப்பட்டதால் தூண்டப்பட்டு, தென்கொரியாவிற்கு சென்றதாகவும், தாயகத்திற்கு எதிராக அவதூறு பேசுமாறு அங்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்" அவர் சொல்கிறார்.

படத்தின் காப்புரிமை URIMINZOKKIRI
Image caption வீடியோவில் வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து மாறிய மற்றொருவருடன்

பணத்தின் அடிப்படையில் அனைத்தையும் தென்கொரியா தீர்மானிப்பதைப் பற்றி வீடியோவில் விவரிக்கும் அந்தப் பெண், தனது அடிப்படை தேவைகளை நிறைவேற்ற போராடியது பற்றியும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வடகொரியாவை குறைகூறுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

வடகொரியாவுக்கு கடந்த மாதம் திரும்பிய பிறகு, பெற்றோருடன் தற்போது வசித்து வருவதாக அவர் சொல்கிறார்.

"தென்கொரியாவில் மிகவும் தனிமையாக உணர்ந்தேன், பெற்றோரை பிரிந்து மிகவும் வருத்தப்பட்டேன்" என்று அந்தப் பெண் கூறுகிறார்.

ஏப்ரல் மாதத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய லிம் ஹி-ஹ்யுன், "இதுதான் என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான பிறந்தநாள்" என்று தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதை ஜூங்காங் இபோ நாளிதழ் சுட்டிக்காட்டுகிறது.

லிம் ஹி-ஹ்யுனின் ரசிகர் மன்றம் கலைக்கப்படுவதாக ஞாயிறன்று அவரது ரசிகர்கள் அறிவித்தனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரிய ஏவுகணைகளை அழிக்கவல்ல அமெரிக்க ஏவுகணை அமைப்புமுறை

வடகொரியாவுக்குள் எப்படி லிம் ஹி-ஹ்யுன் மறுபடியும் சென்றார் என்பது பற்றி அதிகாரிகள் புலனாய்வு மேற்கொண்டுள்ளனர்.

சீனா - வடகொரியா எல்லை அருகே, குடும்ப உறுப்பினர்களை கடத்தும் முயற்சியின்போது, அவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சில வடகொரிய எதிர்ப்பாளர்கள் ஊகங்களை வெளியிட்டுள்ளதாக 'தி கொரியா டைம்ஸ்' கூறுகிறது.

போலி பிரசார வீடியோக்கள் வடகொரியாவில் பரப்பப்படுவது வழக்கமானது என்று கூறும் பிபிசியின் சோல் செய்தியாளர் கரேன் அலென், சோல் அதிகாரிகள் இந்த வீடியோ விவகாரம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதை உறுதி செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான வட கொரியர்கள், தாயகத்தில் இருந்து தென்கொரியாவிற்கு தப்பிச் சென்றுவிட்டனர்.

2012ஆம் ஆண்டில் இருந்து 25 பேர் மட்டுமே மீண்டும் வடகொரியா திரும்பியிருப்பதாக சியோலின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் பிபிசியிடம் கூறியது. 'தென்கொரிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும், வடகொரியாவில் இருக்கும் குடும்பத்தினரை பிரிவது அல்லது பொருத்தமான வேலையை கண்டறிவது கடினமாக இருப்பதாகவும்' வடகொரிய எதிர்ப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

துண்டுப் பிரசுரம் கொடுத்த மாணவி குண்டர் சட்டத்தில் கைதானதற்கு கட்சிகள் கண்டனம்

சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா? கேள்வி எழுப்பியதால் டிஐஜி ரூபா பணியிட மாற்றமா?

67 வயது பெண்ணின் கண்ணில் 27 காண்டாக்ட் லென்ஸ்கள்: அறுவை சிகிச்சையில் நீக்கம்

குறுஞ்செய்திகளை அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்