பிரிட்டன்: 21 வயதில் மருத்துவராகி இந்திய மாணவர் சாதனை

பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இள வயது மருத்துவரான இந்திய மாணவர். படத்தின் காப்புரிமை DOSHI FAMILY
Image caption 2012-இல் மருத்துவப் படிப்பைத் தொடங்கியபோது அர்பன் தோஷிக்கு 17 வயதே ஆகியிருந்தது.

ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மாணவராகக் கருதப்படுகிறார்.

தனது 21 வயது, 334 நாட்களில், திங்களன்று, அர்பன் தோஷி மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.

தன்னுடைய 17-ஆம் வயதில், பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அவர் வசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இளங்கலைத் தேர்வில் வெற்றி பெற்றபின் மருத்துவப் படிப்பில் சேர அவர் அனுமதிக்கப்பட்டார்.

2010-ஆம் ஆண்டு தனக்கு 21 வயது 352 நாட்கள் ஆகியிருந்தபோது மருத்துவராகப் பட்டம் பெற்ற ரேச்சல் ஃபே ஹில் என்னும் பெண்தான் இதற்கு முன்னதாக மிகவும் இளம் வயதில் மருத்துவர் பட்டம் பெற்றவராக இருந்தார்.

குறைந்த வயதே ஆகியிருந்தபோதும் பிரிட்டனில் கல்லூரி வாழ்க்கையை தகவமைத்துக் கொள்வதில் தனக்கு ஏதும் சிரமங்கள் இருக்கவில்லை என்று தோஷி கூறினார்.

"நான் எப்போது ஒரு மருத்துவராகவே விரும்பினேன். இளம் வயது முதலே மனித உடல் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து அறிய மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன். பிறருக்கு உதவக்கூடிய நிலையில் இருப்பதும் நல்லது," என்று அவர் கூறினார்.

பெருமைப்படும் பெற்றோர்

பொறியாளராக உள்ள அவரின் தந்தை, ஓர் அணுக்கரு இணைவுத் திட்டத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்ததபின்பு, தோஷி 2009-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரான்சில் உள்ள எக்ஸாங் ப்ரொவாங்ஸ் ( Aix-en-Provence) நகருக்குக் குடிபெயர்ந்தார்.

அவரின் 16-ஆம் வயதில் பிரிட்டனின் A-Grade தேர்வுக்கு நிகரான, பிரான்சின் இன்டர்நேஷனல் பேச்சுலரேட் (International Baccalaureate) தேர்வில் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், கணிதவியல், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றார்.

அத்தேர்வில், மொத்தமுள்ள 45 மதிப்பெண்களில் 41 மதிப்பெண் பெற்ற பின்னர், ஷெஃப்பீல்ட் பல்கலைக்கழகம் அவர் மருத்துவப் படிப்பிற்காக 13,000 பவுண்டுகளை கல்வி உதவித் தொகையாக வழங்கியது.

யார்க் பயிற்சி மருத்துவமனையில், இளநிலை மருத்துவராக இரண்டு ஆண்டு பயிற்சியைத் தொடங்கவுள்ள அவர், பிற்காலத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெறுவதில் நம்பிக்கையுடன் உள்ளார்.

தற்போது இந்தியாவிற்கு நாடு திரும்பியுள்ள தனது பெற்றோர், தான் பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மருத்துவர் ஆனவர் என்பதை இன்னும் அறியவில்லை என்கிறார்.

"அவர்கள் என்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகின்றனர். அவர்களின் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுளேன்," என்கிறார் தோஷி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்