ஜெய்ஷ்–இ–முகமது தீவிரவாதக் குழு: முக்கிய தகவல்கள்

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த மூன்று நபர்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதையடுத்து அந்த இயக்கத்தின் பெயர் செய்திகளில் மீண்டும் அடிபட்டு வருகிறது.

படக்குறிப்பு,

இந்தியாவில் நடைபெற்ற பல தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தான் காரணம் என இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தனது இருப்பை மீண்டும் தக்கவைக்க ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் எடுத்த முயற்சிக்கு இது `பெரும் பின்னடைவு` என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில், ரசாயன ஆயுதங்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் உள்ளிட்ட புதிய பாணியிலான ஆயுதங்களை பயன்படுத்தி இந்தியா முழுவதும் தாக்குதல்களை நடத்துவோம் என்று அந்தக் குழு வெளியிட்டுள்ள ஒலி வடிவ (ஆடியோ) செய்தியால் பாதுகாப்பு அமைப்புகள் கவலையடைந்துள்ளன.

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள உரி ராணுவ தளத்தில் நடைபெற்ற தாக்குதலில் 18 படையினர் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தான் காரணம் என இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமது குழுவானது ஒரு `பயங்கரவாத` அமைப்பு என இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளன.

முக்கிய தகவல்கள் :

ஜூலை மாதம் 15-ம் தேதி காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள ட்ரால் எனும் இடத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ` ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டது பள்ளத்தாக்கில் அந்த அமைப்பின் நடவடிக்கைகளை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிக்கு பெரும் பின்னடைவு` என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது குழு பொறுப்பேற்றுக் கொண்டது. ` அல்-உமர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய குழுக்கள் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை நடத்தின. இனிவரும் காலங்களிலும் இதே போன்று தாக்குதலை நடத்துவோம்` என அல்-உமர் இயக்கத்தின் தலைவர் முஸ்தாக் ஜர்கர் கூறியதை மேற்கோள் காட்டி `தி காஷ்மீர் மானிட்டர்` எனும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைக் குறிவைத்து ஜெய்ஷ்-இ-முகமது ஆயுதக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள ஒலி நாடாவால் கவலைகள் எழுந்துள்ளன. மோடி சமீபத்தில் இஸ்ரேலுக்கு சென்றது, பசு பாதுகாப்புக் குழுவினரால் முஸ்லீம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது, மற்றும் காஷ்மீர் விவகாரங்கள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இஸ்லாமியர்களை `தூண்டுவதாக` ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

படக்குறிப்பு,

மோதி மற்றும் யோகி ஆதித்யநாத் மீது ஜெய்ஷ்-இ-முகமது குறி?

உரி தாக்குதலோடு சேர்த்து 2016-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற தாக்குதல், மற்றும் 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல் போன்றவைக்கும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2002-ம் ஆண்டில் இருந்தே ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அந்தக் குழுவின் தலைவர் மெளலான மசூத் அசார் பாகிஸ்தானில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பஹவல்பூரில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அசாரை தங்களிடம் ஒப்படைக்க இந்தியா அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் மறுத்து வந்திருக்கிறது.

1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காட்மண்டுவில் இருந்து இந்திய விமானத்தை கடத்திய பின்னர்தான் இந்தக் குழு முக்கியத்துவம் பெற்றது. பயணிகளை விடுவிப்பதற்காக, இந்திய அதிகாரிகளின் பிடியில் இருந்த ஒரு தீவிரவாதி ஆஃப்கானிஸ்தானில் உள்ள கந்தஹரில் விடுதலை செய்யப்பட்டார்.

அவர்தான் அசார்

அவர் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குழுவை நிறுவினார். காஷ்மீரில் ஹர்கட்-உல் முஜைதீன் ஆயுதக் குழுவில் உறுப்பினராக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் 1994-ம் ஆண்டு இந்திய அதிகாரிகளால் அசார் கைது செய்யப்பட்டார்.

2000-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் தாக்குதலையடுத்து, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குழுதான் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பதன்கோட்டில் நடைபெற்ற தாக்குதலையடுத்து முல்டான் மற்றும் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது குழுவின் அலுவலகங்களில் பாகிஸ்தான் அரசு சோதனை நடத்தியது. தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட இஸ்லாமிய மதப் பள்ளிகள் மூடப்பட்டன.

அசார் மற்றும் அவரது சகோதரர் தடுத்துவைக்கப்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவித்தன.

ஜே.இ.எம்மின் தலைவர் அஸார் மீது ஐநா தடை விதிக்க இந்தியா எடுத்த முயற்சியை தடுத்ததற்காக, சீனாவுக்கு, தன்னுடைய பத்திரிகையான ` அல்-கலாம்` மூலம் ஜே.இ.எம் நன்றி தெரிவித்தது. ஐநாவின் கறுப்புப் பட்டியலில் அஸார் சேர்க்கப்பட்டிருந்தால் அது அவருடைய அசையாச் சொத்துகள் மற்றும் அவர் பயணங்கள் போன்றவை முடக்கப்பட்டிருக்கும்.

ஜே.இ.எம் குழுவின் கருத்து என்ன?

காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது ஆயுதக் குழுவை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையடுத்து, அந்தக் குழுவின் செய்தித்தொடர்பாளர், முகமது ஹசன், ` அவர்கள் ஒரு புனிதமான காரணத்திறகாக வீரமாகப் போராடி தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்` என்று கூறியதாக `தி கிரேட்டர் காஷ்மீர்` நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் `சாடி`(saadi) என்ற அசாரின் புனைபெயரில் வெளியிடப்பட்டுள்ள ஒலி நாடாவில், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளுக்கு மாறாக வாகனங்கள், மின்சாரம், பெட்ரோல், உரம், மணல் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவைகளைப் `போருக்கான புதிய ஆயுதங்களாகப்` பயன்படுத்த அந்தக் குழுவின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளதாக பிரபலமான `இந்தியா டுடே` வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

படக்குறிப்பு,

பதன்கோட் தாக்குதலில் 7 இந்திய படையினர் கொல்லப்பட்டனர்

பிரதமர் மோடியின் இஸ்ரேல் விஜயம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தியிருக்கும் அசார், இந்துக்களும் யூதர்களும் தனது `முதல் எதிரிகள்` என்று தெரிவித்துள்ளதாக, ஏபிபி செய்தி நிறுவனத்தின் வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. வட இந்தியாவில் ஒரு ரயிலில் முஸ்லீம் இளைஞர் கொல்லப்பட்ட நிகழ்வையும் அவர் விமர்சித்துள்ளார்.

உரி தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, ஜெய்ஷ்-இ-முகமது ஆயுதக் குழு வெளியிட்ட வீடியோ ஒன்றில், இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள பாதுகாப்புப் படைக்கு, `காட்டிக் கொடுப்பவர்கள்` `பயங்கரமான விளைவுகளை` சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

பதன்கோட் தாக்குதலுக்கு பின் தங்களது ஜிகாதிகளை கையாள முடியாத இந்திய பாதுகாப்புப் படையின் இயலாமையை கேலி செய்வது போல். அல்-கலாம் ஊடகத்தில் , ஒரு ஒலிப் பேழையையும் அந்தக் குழு வெளியிட்டது.

மற்றவர்களின் கருத்து என்ன?

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் டிஜிபி எஸ்.பி.வைத், ஜூன் மாதத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தான் காரணம் என குற்றம் சாட்டினார். ` தாக்குதல் பற்றிய தகவல்கள் எங்களிடம் இருக்கின்றன, இவற்றை நடத்தியது ஜெய்ஷ் குழு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்` என்று பரவலாக வாசிக்கப்பட்டும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் அவர் தெரிவித்திருந்தார்.

தேடப்படும் பாகிஸ்தானியர் ஒருவர் இந்தக் குழுவிற்கு ஆட்களை சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக, தெற்கு காஷ்மீரின் காவல்துறை கூறுகிறது.

`குண்டெறிந்துவிட்டு தப்பியோடுவது`தான் காஷ்மீரில் அதன் புதிய தாக்குதல் யுக்தியாக இருக்க முடியும் என்று `ஃபர்ஸ்ட் போஸ்ட்` வலைதளம் தெரிவித்துள்ளது.

`பாகிஸ்தானை காப்பாற்றும் நோக்கத்திற்காக`, அசாரை `பயங்கரவாதி` என்று ஐநா அறிவிக்க சீனா மீண்டும் மீண்டும் தடையாக இருப்பதாக `ராஷ்ட்ரிய சஹாரா` என்ற இந்தி நாளிதழ் தெரிவித்துள்ளது.

``யுக்தி சார்ந்தும் பொருளாதார அளவிலும் பாகிஸ்தானுடன் ஒரு வகையான உறவை வளர்த்துக் கொண்டுவரும் நிலையில், சீனா அனைத்து நிலைகளிலும் பாகிஸ்தானை தான் ஆதரிப்பதாகக் காட்டிக் கொள்வது தேவையானதாகக் கருதுகிறது `` என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்