பேஸ்பால் விளையாடும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கைகள் பெற்ற சிறுவன்

இரண்டு கைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு வரலாறு படைத்த அமெரிக்க சிறுவன் தற்போது பேஸ்பால் மட்டையைச் சுழற்றுவதாக, அவனது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

பேஸ்பால் விளையாடும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் கைகள் பெற்ற சிறுவன்

பட மூலாதாரம், CHILDREN'S HOSPITAL OF PHILADELPHIA

படக்குறிப்பு,

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் புதிய கைகள் பெற்ற சிறுவன் சியோன்.

தற்போது 10 வயதாகும் சியோன் ஹார்வேவுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கைகள் பொருத்தப்பட்டன. அவனின் முன்னேற்றம் குறித்து வியப்புக்குள்ளாகியிருப்பதாகவும், மிகவும் பெருமைப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சியோனால் தற்போது எழுதவும், உண்ணவும், உடுத்தவும் முடிவதோடு மட்டுமல்லாமல் பேஸ்பால் மட்டையை இறுக்கப் பற்றிக்கொள்ளவும் முடிகிறது.

அவனுடைய கைகள் ஒரு உடலுறுப்புக் கொடையாளரிடமிருந்து வந்திருந்தாலும், அவனுடைய மூளை அவற்றைத் தனக்குச் சொந்தமானதாவே ஏற்றுக்கொண்டது என்று மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

சியோன் தொடர்ந்து முன்னேற்றங்களைக் கண்டு வருவதாக அவனுக்குச் சிகிச்சை அளிக்கும் ஃபிலடெல்ஃபியா குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த குழுவிலுள்ள ஒருவரான மருத்துவர் சான்ட்ரா அமரல் பிபிசியிடம் தெரிவித்தார்.

"அவனால் மிகுந்த ஒருங்கிணைவுடன் மட்டையைச் சுழற்ற முடிகிறது. அத்துடன் அவன் பெயரையும் மிகவும் தெளிவாக எழுத முடிகிறது," என்று கூறும் அவர், "சியோனின் உணரும் தன்மை தொடர்ந்து முன்னேறி வருகிறது. அது அற்புதமான ஒன்று," என்றும் கூறுகிறார்.

"இப்போது அவனால் அவனது தாயின் கன்னத்தைத் தொடவும், அதை உணரவும் முடியும்," என்று அவர் கூறியுள்ளார்.

சியோனின் மூளை மறு இணைப்பு செய்து கொண்டு அவனது புதிய கைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாக மருத்துவர் அமரல் தெரிவித்துள்ளார்.

அச்சிறுவனின் அசாத்தியமான கதை குறித்து அந்த மருத்துவக் குழு தி லான்செட் சைல்டு அண்ட் அடலசென்ட் ஹெல்த் ஜோர்னல் (The Lancet Child and Adolescent Health journal) எனும் மருத்துவ ஆய்விதழில் மருத்துவக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சியோனின் புதிய கைகள்

சீயோன் இரண்டு கைகளுடன்தான் பிறந்தான், ஆனால் அவனுக்கு இரண்டு வயதாகியிருந்தபோது மருத்துவர்கள் அவற்றை அகற்ற வேண்டியிருந்தது.

அவனது சொந்த வார்த்தைகளில்,"எனக்கு இரண்டு வயதாகியிருந்தபோது, நான் உடல் நலமில்லாமல் இருந்ததால், என் கைகளை நான் வெட்டிவிட வேண்டியிருந்தது."

சியோனுக்கு செப்ஸிஸ் என்னும் உயிராபத்தை விளைவிக்கக்கூடிய தொற்று இருந்தது. மருத்துவர்கள் மணிக்கட்டுக்குக் கீழ் அவன் கைகளையும், முட்டிக்குக் கீழ் அவனது கால்களையும், அவை செயலிழந்து, இறந்து வந்ததால் அகற்றினர். அவனது சிறுநீரகங்களும் செயலிழந்தன.

இரண்டு ஆண்டுகள் டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பின்னர், அவனுக்கு நான்கு வயாதாகி இருந்தபோது அவனின் தாய், பேட்டி ரே, கொடையளித்த சிறுநீரகம் அவனுக்குப் பொருத்தப்பட்டது.

பால்டிமோரைச் சேர்ந்த அச்சிறுவன் புதிய கைகளை பெறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இது நிகழ்ந்தது.

ஆபத்தான செயல்முறை

ஜூன் 2015-இல் சியோனுக்கு நடந்த அறுவை சிகிச்சை பெரிய விடயமாக இருந்தது. இது உலகின் முதல் இரு கைகளையும் மாற்றும் அறுவை சிகிச்சையாக இல்லாதபோதிலும், அதைச் செய்துகொண்ட மிகவும் இளம் வயது நபர் சியோன் ஆவான். அத்தகைய முதல் அறுவைசிகிச்சை 1998-இல் நடந்தது.

சியோனின் ஆளுமை மற்றும் மன உறுதியுடன் இணைத்து அவன் கதையைக் கூறும் அவன் மருத்துவர்கள் அவையே அவனைச் சிறந்த நபராக்கியது என்கின்றனர்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, உடல் புதிய உறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கு எதிரான மருந்துகளை ஆயுள்முழுதும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் அந்த அறுவை சிகிச்சையால் உண்டாகும் நன்மைகள் அதில் உள்ள ஆபத்துகளை விட அதிகமாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே சிறுநீரகத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த சியோனின் உடல்நிலையை, 18 மாதங்கள் மிகவும் நெருக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டபின்பு, இரண்டு கைகளைப் பொருத்தும் அறுவை சிகிச்சை அவன் உடலுக்கு நன்மை பயக்கும் என்று மருத்துவக்குழு முடிவு செய்தது.

அதன் பின்னர் சரியான வயது, தோல் நிறம் மற்றும் பொருத்தமான ரத்த வகை ஆகியவற்றைக் கொண்டுள்ள உடலுறுப்புக் கொடையாளருக்காக அவர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

பட மூலாதாரம், CHILDREN'S HOSPITAL OF PHILADELPHIA

மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் ஒரு கொடையாளரைக் கண்டறிந்தனர்.

பத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் உட்பட 40 மருத்துவப் பணியாளர்களைக் கொண்ட ஒரு குழு இரவு முழுதும் மட்டுமல்லாமல் முன் காலை நேரத்திலும் சியோனுக்குப் புதிய கைகளை பொருத்துவதற்காக அறுவைசிகிச்சை செய்தது.

அந்தக் கைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக, நுண்ணிய ரத்த நாளங்களை அவற்றுடன் இணைப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

"இந்த முயற்சி சிகிச்சை பெறுபவரின் வாழ்நாள் முழுமைக்கும் செயல்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்பினோம்," என்று அந்த மருத்துவமனையின் கை மாற்றும் திட்டத்தின் இணை இயக்குனர் பெஞ்சமின் சாங் கூறினார்.

இப்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சியோன் நன்றாக இருக்கிறான்.

புதிய உறுப்புகள் பொறுத்தப்பட்ட முதல் ஆண்டில், சில முறை அவற்றை ஏற்றுக்கொள்ள அவன் உடல் மறுக்கத் தொடங்கியிருப்பதாக மருத்துவர்கள் பயப்பட்டனர். நல்லபடியாக, அவனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் செய்யப்பட்ட மாற்றங்கள் அதைத் தடுக்க உதவியது.

சியோன் மீண்டு வந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மிகவும் நம்பிக்கைக்குரிய விடயமாக மருத்துவர்கள் கூறுவது "உடலின் பிற பாகங்களுக்கு மூளையின் கட்டளையை எடுத்துச்செல்லும் நுண்ணிய நரம்புகள் வளர்ச்சியடையும், இரண்டு மற்றும் எட்டு வயதுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கைகள் இல்லாமல் சியோன் வளர்ந்தாலும்," புதிய கைகளுக்கு அவன் மூளை ஏற்றுக்கொண்டதாகும்.

சியோனின் கடந்த ஆண்டைப்பற்றிப் பேசும் தலைமை மருத்துவர் ஸ்காட் லெவின், "அவன் மூளை கைகளுடன் தொடர்புகொள்கிறது. அவன் கைகளை அசைக்க வேண்டுமென்று மூளை கூறுகிறது. அதைக் கேட்டு அவன் கைகளும் அசைகின்றன. இது மிகவும் குறிப்பிடத்தகுந்தது," என்கிறார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :