ஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்: ராபர்ட் ஓ நீல்

''ஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்''

பட மூலாதாரம், Getty Images

2011 மே மாதம் இரண்டாம் தேதியன்று பாகிஸ்தானின் ஜலாலாபாத், அபோட்டாபாதில் ரகசியமாக மறைந்து வாழ்ந்த ஒசாமா பின்லேடனை, அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர்.

ஒசாமா பின்லேடனை சுட்டது யார், ஒசாமா மீது எத்தனை குண்டுகள் பாய்ந்தன என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. எனினும், அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை அதிகாரி ராபர்ட் ஓ நீல் எழுதியுள்ள புத்தகத்தில், 'தன்னால் சுடப்பட்ட மூன்று குண்டுகளால்தான் ஒசாமா பின்லேடன் உயிரிழந்ததாக' குறிப்பிட்டிருக்கிறார்.

பின்லேடன் மீதான அதிரடித் தாக்குதலில் ஈடுபட்ட 400 பேர் கொண்ட அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை கமாண்டோக்களில் ராபர்டும் ஒருவர். அவர் எழுதியுள்ள 'த ஆபரேட்டர்' புத்தகத்தில் ஒசாமா குறிவைக்கப்பட்டது தொடர்பான பல முக்கிய நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்

பட மூலாதாரம், AFP

பிபிசியின் அவுட்லுக் நிகழ்ச்சியில் ராபர்ட் ஓ நீலுடன் உரையாடினார் அனு ஆனந்த். அவர்களின் உரையாடல் கேள்வி பதிலாக…

2001 செப்டம்பர் 11 ஆம் நாளன்று நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?

2001 இல் உலக வர்த்தக மையத் தாக்குதலின்போது, ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படைப்பிரிவில் நானும் இடம்பெற்றிருந்தேன். தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்தபோது, நான் மின்னஞ்சல் ஒன்றை தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை, மற்றவர்களைப் போலவே நானும் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஒசாமா பின்லேடன் இருந்ததும் சற்று நேரத்தில் தெரியவந்தது. இது அல்-கொய்தாவின் வேலை என்று புரிந்ததும், நாங்கள் ஒரு பெரிய யுத்தத்திற்கு தயாராக வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையில் ஒசாமா பின்லேடனின் கதையின் இறுதி அத்தியாயத்தை முடித்துவைத்தோம்.

பட மூலாதாரம், AFP

2011 மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் பற்றி சொல்ல முடியுமா?

இந்தத் திட்டத்திற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம். பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்திருந்தாலும், என்ன செய்யவேண்டும், எதுபோன்ற நடவடிக்கைகளில் பங்கெடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. இந்த நடவடிக்கை பற்றிய எந்தவொரு குறிப்போ, தகவலோ எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் எந்தவித நடவடிக்கையாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்த்து. நாடு திரும்புவோமா இல்லை சிக்குவோமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால், வீரர்களாகிய நாங்கள் எதற்கும் தயாராகவே இருந்தோம்.

உயிரோடு திரும்ப முடியுமா என்ற சந்தேகம் தோன்றக் காரணம்?

பாகிஸ்தானிடம் இருந்த நவீன வான் பாதுகாப்பு அமைப்பு, சிறந்த ரேடார் அமைப்பு, மிகச்சிறந்த ராணுவ பலம்தான் அதற்கு காரணம். அவற்றைக் கொண்டு பாகிஸ்தான் எங்கள் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தமுடியும். எங்கள் ஹெலிகாப்டரில் எரிபொருள் தீர்ந்துபோய்விட்டால், நாங்கள் பாகிஸ்தானில் தரை இறங்க வேண்டியிருக்கும். எதுவும், எப்போதும் நடக்கலாம் என்ற நிலையில், எதையும் எதிர்கொள்ள தயாராக இருந்தோம், சவால்களை ஏற்றுக்கொண்டோம்.

அதிரடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன், உங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி எத்தகையது? வழங்கப்பட்ட உத்தரவை எப்படி வெற்றிகரமாக நிறைவேற்றினீர்கள்?

பயிற்சி மிகவும் விரிவானதாக இருந்தது. ஆனால் எத்தனை சிறப்பான பயிற்சி எடுத்திருந்தாலும், நிதர்சனத்தில் அது எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதோ, நாம் எதிர்பார்ப்பது போல் எதிர்நடவடிக்கை இருக்கும் என்பதையோ அறுதியிட்டு சொல்ல முடியாது. சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் செயல்பட வேண்டும்.

திரும்புவதே கேள்விக்குறியாக இருந்த நிலையில், இலக்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு, வீடு திரும்பியதும் என்ன தோன்றியது?

நடவடிக்கை எடுக்கப்பட்ட காலகட்டத்தில், நானோ அல்லது எங்கள் குழுவில் இருந்த வேறு யாரும் பேசும்போதும், குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போதும், 'குட்நைட்' என்று சொல்வதைத் தவிர்த்து, 'குட் பை, என்றே சொல்வோம்.

இந்த நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்த எந்தவொரு தகவலும் எங்கள் குழுவினரின் குடும்பத்தினருக்கு சொல்லக்கூடாது. நடவடிக்கை தொடங்குவதற்குமுன், குடும்பத்தினருடன் உணவு அருந்த வெளியே சென்றிருந்தபோது என் மகள் விளையாடிக் கொண்டிருந்தாள். 'இதுவே குழந்தையின் விளையாட்டை பார்க்கும் கடைசித் தருணமோ?' என்று நினைத்துக் கொண்டேன்.

உங்கள் மனைவிக்கோ, மூன்று மகள்களுக்கோ இந்த நடவடிக்கை பற்றி எந்த தகவலையுமே சொல்லவில்லையா?

இல்லை. யாருக்கும் எதுவும் சொல்லவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அதிரடி நடவடிக்கையை பார்க்கும் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

2011 மே இரண்டாம் தேதியன்று பாகிஸ்தானின் அபோட்டாபாதில் இந்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றிய பல்வேறு விவாதங்கள் எழுந்தபோதிலும், அதிகாரிகள் யாரும் வாயையே திறக்கவில்லை.

அதிரடி நடவடிக்கையின்போது என்ன நடந்தது? முதலில் ஆஃப்கானிஸ்தான் சென்றடைந்தீர்கள், பிறகு என்ன நடந்தது?

நாங்கள் ஆஃப்கானிஸ்தானில் இருந்தோம். தொலைபேசி மூலமாகவே தகவல்களைப் பெற்றோம். நாளை தாக்குதல், தயாராக இருங்கள் என்று தகவல் கிடைத்தது. எங்களிடம் பேசிய அட்மிரல், சில திரைப்படங்களை மேற்கோள் காட்டினார். எங்கள் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசினோம்.

பிறகு 'ஆபரேஷனுக்காக' இரண்டு ஹெலிகாப்டர்களில் கிளம்பினோம். இரண்டு ஹெலிகாப்டர்கள் எங்களை பின்தொடர, பேக்கப் ஹெலிகாப்டர்கள் இரண்டு அவற்றைப் பின்தொடர்ந்தன. வான்தளத்தை சென்று அடைந்தோம். பிறகு எல்லையில் இருந்து ஓர் ஆற்றின் அருகே இடப்புறமாக திரும்பி, சற்று தொலைவு சென்று வலப்புறமாக திரும்பியதும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இருந்தோம். இந்த பயணத்திற்கு 90 நிமிடங்கள் ஆனது.

இரண்டு ஹெலிகாப்டர்களில் 23 வீரர்கள் சென்றீர்களா?

முக்கிய நடவடிக்கையில் இருந்தவர்கள் ஒரு ஹெலிகாப்டரிலும், பயணத்தின்போது தேவைப்படும் எரிபொருளைக் கொண்டு வர மற்றொரு ஹெலிக்காப்டரும் என நியமிக்கப்பட்டிருந்த்து. 90 நிமிட பயணத்திற்கு பிறகு, ரிசார்ட் ஒன்றும், கோல்ஃப் மைதானமும் இருந்த நகரில் இறங்கினோம். கட்டடத்தின் மேல்பகுதியில் எங்களை ஹெலிகாப்டர் இறக்கியது.

நாங்கள் இறங்கியதும், அங்கிருந்த கதவுகளை வெடிகுண்டால் தகர்க்க முயற்சி செய்தோம். ஆனால், அவை போலியான கதவுகள், பிறகு மற்றொரு கதவை தகர்க்க நினைத்தபோது, அதை திறக்கும்படி உத்தரவு வந்தது. உத்தரவை செயல்படுத்தி உள்ளே சென்றோம், ஒசாமாவை பார்த்துவிட்டோம்.

எங்கள் குழுவினர் உள்ளே வருவதை ஒசாமா பின்லேடன் பார்த்தார். அங்கிருந்த பெண்களையும், குழந்தைகளையும் ஒன்றாக சேர்த்தார். எந்த சமயத்திலும் வெடிகுண்டு வெடிக்கலாம், நாங்கள் அனைவருமே கொல்லப்படும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் நாங்கள் துரிதமாக 'ஆபரேஷனை' மேற்கொண்டோம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஒசாமா பின்லேடன் இறந்ததும், அந்த வீட்டின் முன் கூடிய மக்கள்

அதன் பிறகு நடந்தது என்ன?

ஒசாமா இரண்டாவது மாடியில் இருப்பதாக ஒரு பெண் எங்களிடம் சொன்னார். அங்கு ஒசாமா பின்லேடனை பாதுகாக்க அவரது மகனும் கூடவே இருந்தார். என்னுடன் இருந்த பல கமாண்டோக்கள் இடப்புறமும், வலப்புறமும் பாதையை ஏற்படுத்திக் கொண்டே சென்றார்கள். எனக்கு முன் ஒரு காமாண்டோ சென்றார், அங்கு சிலர் இருந்தனர். முன்புறம் இருந்த திரையை அகற்றியதும், இடுப்பில் கைவைத்தபடி ஒசாமா பின்லேடன் நின்றுக்கொண்டிருந்தார்.

அந்தக் காட்சி சில நொடிப்பொழுதே நீடித்திருக்கும் என்பதை புரிந்துகொள்கிறோம். பின்லேடனை எத்தனை குண்டுகள் தாக்கின?

பின்லேடன் மீது மூன்று முறை சுட்டேன். அவர் நின்று கொண்டிருந்தபோது இரண்டு முறையும், கீழே விழுந்ததும் மூன்றாவது முறையாகவும் சுட்டேன். முன்புறத்தில் அவரது மனைவியும், எனக்கு இடப்புறத்தில் பின்லேடனின் மகனும் நின்றார்கள். இருவரையும் படுக்கையில் தள்ளிவிட்டேன். அதற்குள் இதர கமாண்டோக்களும் அங்கு வந்துவிட்டார்கள். இப்போது என்ன செய்யட்டும் என்று மகனிடம் கேட்டபோது அவன் சிரிக்கத் தொடங்கிவிட்டான். பிறகு நாங்கள் அனைவரும் அந்த அறையிலும், பிற இடங்களிலும் தேடுதலைத் தொடங்கினோம். அங்கிருந்த 'ஹார்ட் டிரைவ்' மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களை சேகரித்தோம். என்னுடன் வேறு மூன்று பேரும் அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்தோம். பிறகு அங்கிருந்து வெளியேறுவதற்காக, பிற கமாண்டோக்களை அழைக்கத் தொடங்கினோம். இந்த ஆபரேஷனில் எனக்கு முன்னால் சென்ற வீரர் வேறொருக் குழுவைச் சேர்ந்தவர். ஒசாமா பின்லேடனை சுட்டது யார் என்று அவரும், மற்றவர்களும் என்னிடம் கேட்டார்கள். என்னுடைய குண்டுகளுக்கு ஒசாமா பலியானார் என்று சொன்னேன். எனது குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எனக்கு முன்னால் சென்ற வீரர் சொன்னார்.

அபோட்டாபாதில் உங்கள் ஹெலிகாப்டர்களில் ஒன்று விபத்துக்குள்ளாகிவிட்டது. நீங்கள் அனைவரும் எப்படி வெளியேறினீர்கள்?

எங்களை பின்தொடர்ந்த பெரிய ஹெலிகாப்டர் 45 நிமிடங்களில் வந்துவிட்டது. அதில் இருந்த ஒருவரை தொடர்புகொண்டு விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்தவர்களை அழைத்துச் செல்லச் சொன்னோம். ஒசாமா பின்லேடனின் சடலத்தையும் எடுத்துவந்தோம். ஆஃப்கானிஸ்தானை நோக்கி மேற்கொள்ளவிருக்கும் 90 நிமிட பயணம் முடிந்தால்தான், எங்களின் பாதுகாப்பு உறுதிப்படும் என்பதையும் அறிந்திருந்தோம்.

எங்கள் கைகளில் கட்டியிருந்த கடிகாரத்தில் 'ஸ்டாப்வாட்ச்' ஆன் செய்யப்பட்டிருந்தது. அனைவரும் மெளனமாக இருந்த நிலையில், 90 நிமிடங்கள் யுகங்களாக நீண்டது. ஆஃப்கானிஸ்தான் எல்லைக்குள் வந்துவிட்டோம் என்று விமான ஓட்டி சொன்னதும் பாதுகாப்பாக உணர்ந்தோம்.

ஆஃப்கானிஸ்தான் வந்தடைந்த பிறகு என்ன நடந்தது?

ஒசாமாவுடைய சடலத்தின் உயரத்தை அளவிடவேண்டும் என்று அமெரிக்க அதிபர் விரும்புவதாக எங்களிடம் கூறப்பட்டது. உயரத்தை அளக்கும் 'டேப்' எங்களிடம் அப்போது இல்லை. சடலத்தின் அருகில் ஒரு ஸ்னைப்பர் துப்பாக்கியை வைத்து, சடலத்தின் உயரத்தை அனுமானமாக அளவிட்டோம். அதன்பிறகு சடலம் மற்றொரு விமானதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அபோட்டாபாதில் ஒசாமா பின்லேடனின் பதுங்கிடத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள், ஒசாமா பற்றி விசாரணை மேற்கொண்டிருந்த எஃப்.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒசாமாவின் சடலம் அமெரிக்க கடற்படை கப்பல் மூலம் பாரசீக வளைகுடாவுக்கு கொண்டுச்செல்லப்பட்டது.

எனது தொலைபேசி தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. வர்ஜினியா, சேன்டியாகோ மற்றும் வாஷிங்டனில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கின. 'உன் நண்பன்தான் ஒசாமா பின்லேடனை கொன்றான்' என்று வெள்ளை மாளிகையில் பணிபுரியும் எனது நண்பனிடம் சொல்லப்பட்டதாம். ஆனால் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் எங்களைப் போன்ற கமாண்டோக்களுக்கு இயல்பானதே. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களைப் பற்றி பெருமையாக பேசுவதற்குவும், என்றென்றும் நினைவு வைத்துக் கொள்வதற்கும் தேவையான விசயம் கிடைத்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அபோட்டாபாதில் பின்லேடனின் மரணத்திற்கு பிறகு அங்கு கூடிய பாகிஸ்தானி காவல்துறையினர்

இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிறகு மக்களின் ஆதர்ச நாயகனாக உயர்ந்துவிட்டீர்களா?

கண்டிப்பாக இல்லை. என்னுடைய சில நண்பர்களின் குடும்பத்தினர் 9/11 தாக்குதலில் உயிரிழந்துவிட்டார்கள். நண்பர்கள் என்னுடன் தொலைபேசியில் பேசினால்கூட, எனக்கு அவர்களுடைய சோகமான முகம்தான் நினைவுக்குவரும்.

நீங்கள் நேவி சீலை விட்டு விலகிய நிலையில், இப்போது புத்தகத்தை எழுவதற்கான முடிவை ஏன் எடுத்தீர்கள்? இது அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படையின், 'ரகசியம் காக்கும்' நிபந்தனையை மீறியதாக கருதப்படுகிறது. மேலும் இந்த புத்தகத்தை பொருளாதார ஆதாயங்களுக்காகவே நீங்கள் எழுதுவதாக கமாண்டர் ஒருவர் வெளிப்படையாக கடிதம் எழுதி விமர்சித்திருக்கிறாரே?

இந்த புத்தகம், ஒசாமா பின்லேடனை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு எழுதப்படவில்லை. மாறாக, இது ஒரு மனிதனின் கதை, 'நீச்சலடிக்கக்கூட தெரியாத ஒருவன் தற்செயலாக 'நேவி சீலில்' சேர்கிறான். தன்னுடைய கடின உழைப்பினால் மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கையில் பங்கேற்கிறான். ஈடுபாட்டுடன் செய்யப்படும் எதுவும் பெரிய வெற்றியைத் தரும் என்று உணர்த்துகிறது. நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், இதுவரை உள்நாட்டுப் போர் குறித்த பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: