சிகிச்சையின் தாக்கம்: எய்ட்ஸ் மரணங்கள் பாதியாக குறைவு

எய்ட்ஸ் மரணங்கள் பாதியாக குறைவு

பட மூலாதாரம், Getty Images

எய்ட்ஸுடன் தொடர்புடைய மரணங்கள் ஒரு தசாப்தத்தில் பாதியாகக் குறைந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உலகில், மரணங்கள் ஏற்படுவதற்கான முதல் 10 காரணிகளில், எய்ட்ஸும் ஒன்றாக உள்ளது.

2005-ம் ஆண்டு எய்ட்ஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.9 மில்லயான உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1 மில்லியனாக குறைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் எச்.ஐ.வி / எய்ட்ஸ்(யூஎன் எய்ட்ஸ்) தொடர்பான கூட்டு திட்டத்தின் அறிக்கை கூறியுள்ளது.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் முதல் முறையாக மருந்துகளை உட்கொண்டு சிகிச்சை பெறுவதால், இறப்பு விகிதம் ``மிகவும் குறைந்துள்ளது`` என இந்த அறிக்கை கூறுகிறது.

ஒரு எச்.ஐ.வி தொற்றினை குணப்படுத்த முடியாது என்றாலும், ஆன்டிரெட்ரோவைரல் தெரபி எனும் சிகிச்சையின் தினசரி மருந்துகளால் எய்ட்ஸை கட்டுப்படுத்த முடியும்.

இதனை விரைவில் கண்டறியாவிட்டால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை அழித்து எய்ட்ஸ் நோயை ஏற்படுத்துகிறது. இந்தக் கட்டத்தில் மக்கள் காசநோய் போன்ற மற்ற " சூழ்நிலை நோய்த்தொற்றுக்களால்" இறந்து போகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

உலகளவில், 36.7 மில்லியன் மக்கள் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 சதவிகிதம் பேர் தெரபி சிகிச்சை பெற்று சாதாரண மனித ஆயுட்காலத்தை ஏறக்குறைய வாழ்கின்றனர்.

``2015-ஆம் ஆண்டு , 15 மில்லியன் மக்களுக்கு சிசிச்சை அளித்து இலக்கை நாங்கள் அடைந்துள்ளோம். இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரித்து 2020-ம் ஆண்டு 30 மில்லியன் மக்களுக்குச் சிகிச்சை அளிக்க இலக்கு வைத்துள்ளோம்`` என யு.என் எய்ட்ஸின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ஸிடிபே கூறினார்.

``தேவைப்படும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க நாங்கள் தொடந்து நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறோம். ஒருவரையும் விட்டுவிடக் கூடாது என உறுதி பூண்டுள்ளோம்`` என்கிறார்.

கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் அதிகளவு எய்ட்ஸ் நோய்கள் ஏற்படுகின்றன. 2010 முதல் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு புதிய எச்.ஐ.வி தொற்றுக்களைத் தடுத்துள்ளதாக யூஎன் எய்ட்ஸ் கூறுகிறது.

கடந்த தசாப்தத்தில், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலமும் 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்த நிறுவனம் 90-90-90 இலக்குகள் என தொடர்ச்சியான இலக்குகளை வைத்துள்ளது.

2020-ல் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 90% மக்களைக் கண்டறிவது, இதில் 90% பேருக்கு தெரபி சிகிச்சை அளிப்பது, இதில் 90 சதவிகிதம் பேரின் தொற்றை ஒடுக்குவது என இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

2016ல் இந்த சதவிகிதம் முறையே 70%, 77% மற்றும் 82% என்ற விகிதத்தில் இருந்தது.

``சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் இடையே எய்ட்ஸ் நோய் பரவுவதால், தடுப்பு நடவடிக்கைகள் பின்னோக்கி தள்ளப்படுகிறது`` என்கிறார் ஸிடிபே.

வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இப்பகுதிகளில் தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என இந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :