வட கொரியா செல்ல தனது பிரஜைகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா

வட கொரியா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

30 நாள் கெடுவுக்கு பிறகு வட கொரியாவிற்கு செல்லும் அமெரிக்க குடிமக்களின் பாஸ்போர்ட், அரசாங்கத்தால் செல்லாததாக ஆக்கப்படும்

தனது குடிமக்கள் வட கொரியா செல்வதற்கு அமெரிக்கா தடை விதிக்க உள்ளதாக வட கொரியாவிற்கு சுற்றுலா சேவையை இயக்கி வரும் இரண்டு பயண முகமை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இத்தடை குறித்த அறிவிப்பு ஜூலை 27-ஆம் தேதி வெளியாகலாம் என்றும், முப்பது நாட்களுக்குப் பின்னர் இது அமலுக்கு வரும் என்றும் கொரியா டூர்ஸ் மற்றும் யங் பயோனியர் டூர்ஸ் நிறுவனங்கள் கூறியுள்ளன.

வட கொரியாவில் அமெரிக்க விவகாரங்களை கையாளுகின்ற ஸ்வீடன் தூதரகம், இரண்டு பயண முகமை நிறுவனங்களிடம் இதனை தெரிவித்துள்ளது.

தடை குறித்த தகவல்களை அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான மோசமான உறவுகள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியரின் மரணம் ஆகியவற்றின் காரணமாக இதற்கான சூழ்நிலைகள் அதிகரித்துள்ளன.

யங் பயோனியர் டூர்ஸ் நிறுவனத்தின் மூலம் வார்ம்பியர் வட கொரியா சென்றார். பிரசார பதாகையை திருடிய குற்றச்சாட்டில், 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட வார்ம்பியருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் கோமா நிலையில் அமெரிக்காவிற்குத் திரும்பிய வார்ம்பியர், ஊர் திரும்பிய ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.

செய்தி எப்படி வெளிச்சத்திற்கு வந்தது?

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே ராஜீய உறவுகள் இல்லாத நிலையில், வட கொரியாவில் அமெரிக்காவின் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் ஸ்வீடன் தூதரகம், எதிர்வர இருக்கும் தடை குறித்து தங்களிடம் தெரிவித்ததாக இரண்டு பயண முகமை நிறுவனங்களும் கூறியுள்ளன.

அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக வட கொரியாவில் இருந்து புறப்படுமாறு தூதரகம் அறிவுறுத்தியதாக யங் பயோனியர் டூர்ஸின், ரோவன் பியர்ட் பிபிசியிடம் கூறினார்.

வட கொரியாவில் இருக்கும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையினை பெற தூதரகம் முயற்சித்து வருவதாக அவர் கூறினார்.

அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக இதனை உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்க குடிமக்கள் வடகொரியாவிற்கு பயணம் செய்யக்கூடாது என மே 9-ம் தேதி அமெரிக்கா கடுமையான எச்சரிக்கையினை விடுத்த நிலையில், அந்நாடு மக்களுக்குத் தொடர் எச்சரிக்கைகளைக் கொடுத்து வருகிறது.

தடை எம்மாதிரியாக இருக்கும்?

ஜூலை 27-ம் தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் தடை அமல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக யங் பயோனியர் டூர்ஸின் அறிக்கை கூறுகிறது.

``30 நாள் கெடுவுக்கு பிறகு வட கொரியாவிற்கு செல்லும் அமெரிக்க குடிமக்களின் பாஸ்போர்ட், அரசாங்கத்தால் செல்லாததாக ஆக்கப்படும்``

தற்போது வட கொரியாவில் இருக்கும் அமெரிக்க சுற்றுலா பயணிகளும், மனிதாபிமான வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் சுலபமாக 30 நாட்கள் கெடுவிற்குள் நாடு திரும்பலாம் என பியர்ட் கூறுகிறார்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், வட கொரியாவிற்கு புவியியல் பயண கட்டுப்பாட்டினை விதிக்க முடிவெடுத்துள்ளார் என அமெரிக்க அதிகாரிகள் கூறுவதாக அசோசியேடட் பிரஸ் கூறுகிறது. அதாவது, வட கொரியாவிற்கு நுழைவதற்கு அமெரிக்க பாஸ்போர்ட் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.

தற்போது ஏன்?

வட கொரியாவிற்கு தடை விதிக்க முன்னதாக அமெரிக்க எடுத்து வந்த முயற்சிகள், வார்ம்பியர் மரணத்திற்குப் பிறகு மேலும் அதிகரித்தது.

அமெரிக்க சுற்றுலா பயணிகளிடம் வட கொரியா வெளிநாட்டு பணத்தை ஈட்டுவதைத் தடுக்கும் விதமாக, `வட கொரியா சுற்றுலா கட்டுப்பாட்டு மசோதா` வை கடந்த மே மாதம் இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தினர்.

வெளிநாட்டு விவகாரங்களுக்கான துணைக்குழு, ஜூலை 27-ம் தேதி இந்த வரைவு சட்டத்தை ஏற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இது செனட் சபையின் ஒப்புதலுக்காக இன்னும் அனுப்பப்படவில்லை. எனவே, இது குறித்து ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

பிரசார பதாகையை திருடிய குற்றச்சாட்டில், 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட வார்ம்பியருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

வட கொரியாவில் உள்ள அமெரிக்கர்கள் மோசமாக நடத்தப்படுவது ஒருபுறம் இருந்தாலும், வட கொரியாவின் அணுசக்தி திட்டங்கள் இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

இந்த மாதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்ததாக வட கொரியா அறிவித்தது.

இதன் வரம்பு குறித்த விவாதங்கள் இருந்தாலும், இது அமெரிக்காவின் அலாஸ்காவை அடையும் திறன் கொண்டது என சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து வட கொரியாவை எச்சரிக்கும் விதமாக, அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கூட்டு பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியது.

எத்தனை அமெரிக்கர்கள் பாதிப்படைவார்கள்?

அமெரிக்கர்களைப் பயணிகளுக்காக வட கொரியா 2010-ஆம் ஆண்டில் தான் தனது விதிகளைத் தளர்த்தியது.

எத்தனை அமெரிக்க சுற்றுலா பயணிகள் உள்ளனர் என்பது குறித்த பதிவு அரசிடம் இல்லை.

வருடத்திற்கு, 1000 பயணிகள் வரை செல்லலாம் என பயண முகமை நிறுவனங்கள் கூறுகின்றன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :