`அது `ரேப்' என்று சொல்ல முடியாவிட்டாலும், குறைத்து மதிப்பிட முடியாத வன்கொடுமை'

  • பூமிகா ராய்
  • பிபிசி
காதலர்கள்

பட மூலாதாரம், JAY DIRECTO/AFP/Getty Images

''சிறுவயது கதைகள், உறவினர்கள், அண்டை வீட்டினருடன் பேசி மகிழ்ந்த விசயங்கள், கேலி பேச்சுக்கள், வேடிக்கை விளையாட்டுகள் பற்றி மற்றவர்கள் பேசும்போது மனதில் இனம் புரியாத பீதி ஏற்படும். பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருங்கள் என்று கத்தவேண்டும் என்று தோன்றும். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நான் மட்டுமே துரதிருஷ்டசாலி, இனிமையான குழந்தைப் பருவமே இல்லாமல் போய்விட்டது என்று தாழ்வு மனப்பான்மையால் குறுகிப் போவேன்''

(தவறான தொடுதல்கள் பற்றி பெண்கள் தங்கள் நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் மூன்றாம் பகுதி.)

இப்படிச் சொல்லும் தீபாவின் வார்த்தைகளே அவரது துயரத்தின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. 26 வயது தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஆறு வயதில் நடைபெற்ற சம்பவத்தை இருபது ஆண்டுகளுக்கு பிறகும் நினைவில் வைத்திருக்கிறார்.

''அவன் பக்கத்து வீட்டில் வசித்தவன். நெரிசலான குடியிருப்புப் பகுதியில் இருந்த நாங்கள், அக்கம்-பக்கத்தில் குடியிருப்பவர்களை உறவினர்களை விட அதிகமாகவே நினைப்போம். என் அம்மாவை அவன் அண்ணி என்று கூப்பிடுவான். இரவில் படுப்பதற்கு மட்டும்தான் வீட்டிற்கு வருவோம், எந்த வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாலும், அங்கேயே சாப்பாடு கிடைத்துவிடும். நம் வீடு, பக்கத்து வீடு என்ற வித்தியாசமே கிடையாது. அளவுகடந்த நம்பிக்கை கேள்விகளையும் சந்தேகங்களையும் மழுங்கடித்துவிடுகிறது, அனைவரையும் நம்பச் செய்கிறது.''

பட மூலாதாரம், AFP

சைக்கிளில் வைத்து ரவுண்ட் அடிக்கிறேன் என்று அவன் என்னை கூட்டிக் சென்றபோது தொடங்கியது பாலியல் ரீதியான தொடுகைகள் என்று சொல்கிறார் தீபா. ''என்னை மடியில் உட்கார வைப்பதோ, கன்னத்தை கிள்ளுவதோ முத்தம் கொடுப்பதோ தவறாக தோன்றியதே இல்லை. இரண்டு வீட்டு பெரியவர்கள் முன்பும் அவன் வழக்கமாக செய்வதுதான் இது. அவர்களுக்கே தவறாக தோன்றாத ஒரு விசயம், எனக்கோ, என்னைவிட சில வயதுகளே அதிகமான அவனுக்கும் தவறாக தெரியாததில் ஆச்சர்யம் இல்லை. குழந்தையை கொஞ்சுவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான்.''

தீபா வருத்தத்துடன் சொல்கிறார், ''ஆனால் என்னிடம் அவன் தவறாக நடந்துக் கொண்டான். யாரும் இல்லாமல் தனியாக இருக்கும்போது மிகவும் தவறாக நடந்துக் கொண்டான் என்பது வளர்ந்த பிறகுதான் புரிந்தது. அதை 'ரேப்' என்று சொல்ல முடியாவிட்டாலும், அதைவிட குறைவாக மதிப்பிட முடியாத அளவிலான வன்கொடுமைதான்.

எனக்கு அது பிடிக்காவிட்டாலும், நான் அழுதாலும் தவறாக எதுவுமே நடக்கவில்லை என்றும், தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்தும் எப்படியாவது சமாதானப்படுத்திவிடுவான். எல்லாரும் அப்படித்தான் நடந்துக் கொள்வார்கள் என்றும் சொல்வான். நண்பர்கள் என்றால் இப்படித்தான், 'நெருக்கமான நண்பர்கள்' என்று இதைத்தான் சொல்வார்கள் என்றும் சொல்வான்.'

பட மூலாதாரம், Hannah Peters/Getty Images

'அவன் என் உடலை தவறாக பயன்படுத்துவான், இதைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் சொல்வான், 'சைக்கிளில் வைத்து ரவுண்ட்' என்ற வார்த்தை என்னை அமைதியாக்கிவிடும்.'

இது நீண்டநாட்களாக தொடர்ந்தாலும், 'நெருங்கிய நண்பன்' சொன்னதை நம்பிய தீபா, இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

இது எனது வாழ்க்கையில் ஒரு இயல்பான நிகழ்வாகிவிட்டது. அவனிடம் இருந்து விலக முயன்றாலும், எதாவது ஒரு காரணம் சொல்லி என்னுடனே இருப்பான். அவனுடைய அண்ணன் ஒருநாள் அவர்களது வீட்டில் தனியாக இருந்தார்.

அவரும் என்னுடன் நன்றாகவே பேசுவார், விளையாடுவார். 'நெருங்கிய நண்பன்' போலவே அவன் அண்ணனும் நண்பர் தானே? அவருடனும் அப்படித்தான் விளையாடவேண்டும் என்று எனக்கு ஏன் எதற்கு தோன்றியது என்றே தெரியவில்லை. அவன் முன் இருப்பது போலவே உள்ளாடையை கழற்றிவிட்டு அவர் முன் நின்றேன். ஆனால், அவரோ, என்னை கடுமையாக திட்டி, துரத்திவிட்டார். அப்போதுதான் 'நெருங்கிய நண்பன்' என்னிடம் நடந்துகொள்வது தவறா? என்று தோன்றியது.'

பட மூலாதாரம், Hannah Peters/Getty Images

'நெருங்கிய நண்பன்' குடும்பம் சில நாட்களில் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள். தீபா அதன்பிறகு நிம்மதியாக இருந்தாராம்.

'நம்பிக்கை மீது ஏற்பட்ட அவநம்பிக்கை'

'நெருங்கிய நண்பன்' வீட்டில் இருந்த அனைவரும் தன்மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்று கூறும் தீபா, அனைவரின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாக சொல்கிறார். எனவே 'நெருங்கிய நண்பன்' தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி யாரிடமாவது சொல்லியிருந்தாலும், அது எடுபட்டிருக்குமா, தவறு தன்மீதே திருப்பப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் தற்போதும் தனக்கு இருப்பதாகவே நம்புகிறார் தீபா.

'தவறு நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்ட பிறகுகூட, சகோதரன், சகோதரிகள், அம்மா, அப்பா, என குடும்பத்தில் யாரிடமும் இதைப் பற்றி சொல்ல தைரியம் வரவில்லை, இனி மேலும்கூட, சிறுவயது நினைவுகளை அவர்களிடம் பகிர்ந்துக் கொள்வேனா என்றும் தெரியவில்லை. குற்றம் செய்தவனைவிட, பாதிக்கப்பட்ட நானே இலக்கு வைக்கப்படுவேன் என்று தோன்றுவதால், யாரிடமும் நம்பிக்கை இல்லை, அவநம்பிக்கையே ஏற்படுகிறது' என்று சொல்கிறார் தீபா.

அதற்குபிறகு தனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என்றும், அதற்கு காரணம் யாரையும் முழுமையாக நம்ப தான் விரும்பவில்லை என்று கூறும் தீபா, ஏமற்றப்படுவேன் என்ற அச்சத்தினால் தனிமையிலேயே இருப்பதாகவும் வருத்தப்படுகிறார்.

மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் உள்ளுக்குள் இருந்து எதிர்பாராத நேரத்தில் வெளிப்படும் சீற்றம் பிறரை தன்னிடம் இருந்து விலக்கிவிடுவதையும் உணர்ந்திருப்பதாக தீபா சொல்கிறார்.

'எய்ட்ஸ்' வந்திருக்குமோ என்ற பயம் திடீரென்று வந்துவிட்டதாம். அதனால், அதற்கான பரிசோதனைகளை செய்தபிறகு பாதிப்பில்லை என்று தெரிந்த பிறகே மனம் நிம்மதியானதாம்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

உருவகப்படம்

'திருமணத்திலும் சிக்கல்'

திருமணப் பேச்சு எழுந்தபோது, அதற்கு தீபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாராம். யாருக்கும் எதுவுமே தெரியாத நிலையில், குடும்பத்தினரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டாலும், சிறுவயதில் நடந்த விசயங்கள் எப்போதாவது தெரியவந்தால் என்ன ஆகும் என்ற அச்சம் இருந்தது.

ஆனால், எதையும் மறைக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். வாழ்க்கை முழுவதும் குற்ற உணர்வுடன் போராடத் தயாராக இல்லை என்பதால், கணவரிடம் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். என் கணவர் விவேகமானவர்.

'உன் சிறு வயதில், விவரம் தெரியாத வயதில் நடந்த சம்பவங்களுக்கு எந்தவிதத்திலும் நீ பொறுப்பில்லை, இயல்பாக இரு, எந்தவித குற்ற உணர்வும் தேவையில்லை' என்று சொல்லி தேற்றினார் என் கணவர்.

மனதிற்குள் நடுக்கம் இருந்தாலும், குற்ற உணர்ச்சி இருந்தாலும், மற்றவர்கள் முன் இயல்பாய் இருப்பதுபோல் நடிப்பதுதான் பெரிய சவாலாக இருந்தது என்கிறார் தீபா. ஆனால் தனக்கு உலகிலேயே சிறந்த மனிதன் கணவனாக கிடைத்ததாக ஆனந்தமடைகிறார்.

ஆனால், சில நேரங்களில் தவறு எதுவும் நடக்காவிட்டாலும், அப்படி நடக்கிறதோ என்ற அச்சத்தால், இப்போதும் சில சமயத்தில் அசாதாரணமாக நடந்துக் கொள்வதாக சொல்கிறார் தீபா. இதை சொல்வதும், கேட்பதும் எளிது, ஆனால் அனுபவித்தவர்களுக்குத்தான் வலியை உணரமுடியும் என்கிறார் தீபா.

பட மூலாதாரம், AFP

'குடும்பத்தினரே தடுக்கமுடியும்'

சிறு குழந்தைகள் சந்திக்கும் பாலியல் சீண்டல்களை குடும்பத்தினரால்தான் தடுக்கமுடியும் என்று சொல்லும் தீபா, மனதில் படுவதை பயமில்லாமல் பேசுவதற்கு குழந்தைகளை ஊக்குவிக்கவேண்டும். எதையும் மறைக்காமல் சொல்லிவிடும் இயல்பு கொண்ட குழந்தை, வீட்டினரிடம் சொல்லிவிடும் என்ற அச்சத்தால் யாரும் தவறாக நடந்து கொள்ளமாட்டார்கள். இதுபோன்ற சம்பவங்களில் அச்சப்படுபவர்களே அதிகமாக இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்கிறார் தீபா.

குழந்தைகள் விளையாடுவதை பெரியவர்கள் தொடர்ந்து கண்காணித்தால் இதுபோன்ற வன்கொடுமைகள் தவிர்க்கப்படும் என்கிறார் தீபா. மருத்துவர்களிடம் ஆலோசனை எடுத்துக் கொண்டாரா என்று கேட்டதற்கு இல்லை என்பதே அவரது பதிலாக இருக்கிறது.

மனநல ஆலோசகரிடம் சென்றால், ஏன் எதற்கு என்று அனைவருக்கும், குறிப்பாக குடும்பத்தினருக்கு பதில் சொல்லவேண்டும். நமக்கு நடந்ததை வெளியில் சொன்னால் பச்சாதாபத்தோடு கேட்கும் அனைவரும், பிறகு நாளடைவில் நம்மை கேலிப் பொருளாக்கிவிடுவார்கள். இப்போது கூட எனது பெயரை மறைத்துக் கொண்டுதான், அறியாத வயதில் எனக்கு ஏற்பட்ட கொடுமையை பகிர்ந்துக் கொள்ளமுடிகிறது.

குழந்தைகள் பலவற்றை வெளிப்படையாக சொல்வதில்லை. அவர்களுக்கு சரி-தவறு பற்றிய புரிதல் இருக்காது. ஆனால், அவர்கள் சொல்வதை பெரியவர்கள் கூர்ந்து கவனித்தால், தவறு நடந்திருப்பதை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம், அது அந்த குழந்தையின் வாழ்க்கை முழுவதும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.

எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. ஆனால், எனக்கு குழந்தைகள் பிறந்தால், அவர்களை நான் கவனமாக வளர்ப்பேன், எனக்கு நடந்தது போன்ற எந்தவொரு கொடுமையும் நடக்காமல் பார்த்துக்கொள்வேன். குழந்தை சொல்லும் எல்லாவற்றையும் நம்புவேன், என்னிடம் எதைவேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேச ஊக்குவிப்பேன்' என்று உறுதியுடன் சொல்கிறார் தீபா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :