ஜெருசலேம் புனித தலத்தில் மெட்டல் டிடெக்டர்களுக்கு பதிலாக மாற்று யோசனை கோரும் ராணுவ தளபதி

ஜெருசலேம் புனித தலத்தில் மெட்டல் டிடெக்டர்களுக்கு பதிலாக மாற்று யோசனை கோரும் ராணுவ தளபதி

பட மூலாதாரம், MARCO LONGARI

ஜெருசலேத்தில் உள்ள புனித தலம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலோகங்களை கண்டறியும் மெட்டல் டிடெக்டர்களுக்கு மாற்று வழிகள் குறித்து யோசிக்க இஸ்ரேல் விரும்புவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராணுவ தளபதி யோவ் மோர்டெக்காய் இதற்கான மாற்று வழிகளை கூற முன்வருமாறு இஸ்லாமிய சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் புனித தலத்தின் அருகில் இரு இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதை அடுத்து மெட்டல் டிடெக்டர்கள் நிர்மாணிக்கப்பட்டன.

இந்நடவடிக்கை பாலத்தீனியர்களை கோப மூட்டியுள்ள நிலையில், புனிதத்தலத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இஸ்ரேல் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த இரு தினங்களாக இந்த பகுதியையோட்டிய பதற்றம் அதிகரித்து வருகிறது.

முஸ்லீம்களுக்கு ஹராம் அல்-ஷரீஃப் என்றும், யூதர்களுக்கு டெம்பிள் மவுண்ட் என்றும் இந்த புனித தலம் அறியப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

''இந்த பிரச்சனைக்கு பிற பாதுகாப்பு தீர்வுகளை ஜோர்டனும், அரபு நாடுகளும் வலியுறுத்தும் என்பதை நாங்கள் நம்புகிறோம்,'' என்று மெட்டல் டிடெக்டர் விவகாரத்தில் பிபிசியிடம் பேசிய ராணுவ தளபதி மோர்டெக்காய் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,''மின்னணு, இணையம் அல்லது நவீன தொழில்நுட்பம் ஏதுவாக இருந்தாலும் தீர்வு ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராகவே இருக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பு தீர்வு ஒன்று வேண்டுமே தவிர அரசியலோ அல்லது மதம் சார்ந்ததோ இல்லை'' என்றார்.

காணொளிக் குறிப்பு,

இஸ்ரேல்-பாலத்தீன பிரச்சினையை தீர்க்க டிரம்ப் முயற்சி

நேற்றைய தினம் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் மற்றும் பாலத்தீனியர்கள் இடையே புதியதோர் மோதல் சம்பவம் வெடித்தது. கடந்த இரு தினங்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது நான்கு பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளியன்று, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு நதிக்கரையில் உள்ள ரமல்லாவில் உள்ள ஓர் குடியேற்ற பகுதியில் இஸ்ரேலிய பொதுமக்களில் மூன்று பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.

வன்முறையை கலையும் வழிகள் குறித்து விவாதிக்க வரும் திங்களன்று ஐ.நாவின் பாதுகாப்பு சபை கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்: