வெனிசுவேலா: அரசுக்கு எதிராக வயலின் இசைத்தவர் காயம்

வெனிசுவேலா நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வயலின் இசைத்துப் பிரபலபடைந்த உய்லி ஆர்டீகா என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தலைநகர் காரகாசில் ஜூன் மாதம் தெருவில் வயலின் இசைத்துக்கொண்டிருந்து உய்லி ஆர்ட்டீகா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

தலைநகர் காரகாசில் ஜூன் மாதம் தெருவில் வயலின் இசைத்துக்கொண்டிருந்து உய்லி ஆர்ட்டீகா

போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தலைநகர் காரகாசில் அண்மையில் நடந்த மோதலில் அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டது.

ஆர்டீகா காயமடைந்தபோது எடுக்கப்பட்டு, ராய்ட்டர் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோவில் போலீசார் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசுவதாகத் தெரிகிறது. சில போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்று கற்களையும், எரிவாயுக் குவளைகளையும் போலீஸ் மீது வீசுவதாகவும் அந்த வீடியோ காட்டுகிறது.

பிறகு மருத்துவமனை படுக்கையில் ஆர்ட்டீகா வயலின் இசைப்பதைப் போல படமெடுக்கப்பட்டது. தமது வீங்கிய, பேண்டேஜ் போடப்பட்ட முகத்தைக் காட்டும் வீடியோ ஒன்றை ஆர்ட்டீகாவே டிவிட்டரில் வெளியிட்டார். "ரப்பர் குண்டுகளோ, கொத்துக் குண்டுகளோ எங்களைத் தடுத்து நிறுத்தாது," என்று அந்தப் பதிவில் அவர் எழுதியிருந்தார்.

எதிர்க் கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ள, நாட்டின் காங்கிரஸ் சபை புதிய நீதிபதிகளை நியமித்தது. இந்த நீதிபதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அரசியல் கட்சிகளின் கூட்டணி ஒன்று சனிக்கிழமை உச்சநீதிமன்றம் நோக்கிய பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

ஏற்கெனவே பொறுப்பில் உள்ள நீதிபதிகளை நீக்கிவிட்டுப் புதியவர்கள் வருவதை ஏற்கமுடியாது என்றும், காங்கிரஸ் சபையின் செயல் சட்டவிரோதமானது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

வெனிசுவேலாவில் அரசியல் பதற்றநிலை தீவிரமடைந்ததை அடுத்து, ஏப்ரல் மாதம் முதல் போராட்டம் தொடர்பான வன்முறைகளில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வரும் லா ரெசிஸ்டென்சியா ('எதிர்ப்பு' என்று பொருள்) என்னும் இளைஞர் இயக்கத்தின் உறுப்பினராகத் தாம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் ஆர்ட்டீகா.

வயலின் உடைப்பால் பிரபலம்

இவரது வயலின் போலீசாரால் உடைக்கப்பட்டதாகவும், அதனால் இவர் அழுவதாகவும் காட்டும் விடியோ கடந்த மே மாதம் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டபிறகு இவர் பிரபலமடைந்தார். நலம் விரும்பி ஒருவர் வேறொரு வயலின் வாங்கித் தந்த பிறகு இவர் மீண்டும் வீதியில் இசைக்கத் தொடங்கினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெனிசுவேலா அரசுக்கு எதிராக ஜுன் மாதம் நடந்த போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஆர்ட்டீகா, பிரதிநிதி ஜேமி ராஸ்கினை சந்திப்பதற்காக அமெரிக்க காங்கிரசுக்கும் அழைக்கப்பட்டார்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

கோப்புப் படம்

சாவேஸ் ஆதரவில் இருந்த இசைக்குழுவின் உறுப்பினர்

வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேசின் ஆதரவோடு செயல்பட்ட எல் சிஸ்டெமா ஆர்க்கெஸ்ட்ரா என்னும் அரசு சார்ந்த இசைத் திட்டத்தின் உறுப்பினராக இருந்தவர் இவர் என்னும் செய்தி பிறகு வெளியானது.

வறுமை நிலையில் இருந்த இளைஞர்களுக்கு கல்வியும் ஊக்கமும் அளிப்பதற்காக 1970-ல் எல் சிஸ்டமா தொடங்கப்பட்டது.

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்கவும், வெனிசுவேலா மக்கள் பலரை ஏழ்மை நிலையில் இருந்து வெளிக்கொண்டுவரவும் வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தியதற்காக முன்னாள் அதிபர் சாவேசை அரசின் ஆதரவாளர்கள் புகழ்கின்றனர்.

ஆனால், 2013-ல் சாவேஸ் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த மதுரோவின் தலைமையிலான சோஷியலிஸ்ட் கட்சி, வெனிசுவேலாவின் ஜனநாயக நிறுவனங்களை சீரழித்துவிட்டதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைத் தவறாகக் கையாண்டதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :