ஃபுகுஷிமா அணு உலையில் உருகிய அணு எரிபொருளை படம் பிடித்த ரோபோ

ஜப்பானில் விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு உலையில், உருகிய அணுஎரி பொருள் படிமங்களின் காட்சிகள் என நம்பப்படும் முதல் புகைப்படத்தை நீருக்கு அடியில் இயங்கும் ரோபோ படம் பிடித்துள்ளது என அதை இயக்கி வரும் `டெப்கோ` என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபுகுஷிமா அணு உலை விபத்து: உருகிய எரிப்பொருளை கண்டுபிடித்த ரோபோ

பட மூலாதாரம், AFP

திடமான எரிமலை குழம்பு போன்ற பாறைகள் ஃபுகுஷிமாவின் மூன்றாம் அலகு அணு உலைகளின் அடியில் காணப்படுகின்றன.

உறுதி செய்யப்பட்டால், சுத்தம் செய்யும் நடவடிக்கையில் இது மைல் கல்லாக இருக்கும் என டெப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டு இந்த அணு உலையை சுனாமி தாக்கியது. செர்னோபில் அணு உலை விபத்திற்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரிய அணு உலை விபத்து இதுவாகும்.

சுனாமிக்கு பிறகு மூன்று அணு உலைகளிலும் வெள்ளம் சூழ்ந்து செயல்படாமல் போனபோது கதிரியக்க வெளியேற்றம் எற்படலாம் என்ற அச்சத்தால் 2 லட்சத்திற்கும் மேலான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.

சேதமடைந்த அணு உலையின் பகுதிகள் சிலவற்றில் அதிகமான முறையில் கதிரியக்கம் கலந்துள்ளது; அதை சுத்தம் செய்யும் முக்கிய முயற்சியில் ரோபோடிக் தொழில்நுட்பத்தை ஈடுபடுத்தி வருகின்றனர்.

சேதமடைந்த அணு உலைகளில் இருக்கும் எரிப்பொருள் கழிவுகளை பிரித்தெடுப்பதே முக்கிய நடவடிக்கையாகும். அதற்கு பல தசாப்தங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள் 2011ம் ஆண்டு விபத்து ஏற்பட்ட அன்றிலிருந்து உருகிய எரிப்பொருளாக இருக்கலாம் என்கிறது டோக்கியோ மின்னனு மின்சார நிறுவனமான(டெப்கோ).

பட மூலாதாரம், AFP

"உருகிய உலோகம் மற்றும் உலையின் எரிப்பொருள் கலவையாக அந்த திடப்பொருள் இருப்பதற்கு அதிகமான சாத்தியம் உள்ளது" என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தரையோடு அமைந்துள்ள அணு உலையின் கீழ் இருக்கும் வாயு வைத்திருக்கும் பகுதியோடு, ஒட்டப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு தண்டு இயக்கத்தை சுற்றி பனி கீச்சுகள் போன்று சூழ்ந்துள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன் சுனாமிக்குப் பிறகு வாயு பாத்திர பகுதியில் உள்ள எரிபொருள் உருகி எரிந்துவிட்டதாக ஜப்பான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வாயு வைத்திருக்கும் பகுதியை தாங்கி நின்ற தண்டின் சுவருக்கு அருகில் பொருட்கள் உருகி திரவ நிலைக்கு உள்ளாகியிருந்தது.

பட மூலாதாரம், AFP

இந்த எரிப்பொருள் கழிவுகளை ஆராய்வதற்கு மேலும் காலங்கள் தேவை என அந்த டெப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபுகுஷிமாவின் மூன்றாம் அணு உலையின், முதன்மை பகுதிக்கு அடியில் இந்த படிமங்கள் இருந்தன.

`லிட்டில் சன் ஃபிஷ்` என்று பெயர் சூட்டப்பட்டுள்ள ரிமோட்டால் இயக்கப்படும் நீருக்கு அடியில் இயங்கும் ரோபோவால் மூன்று நாட்கள் ஆய்வு நடத்திய பிறகு இவை கண்டுபிடிக்கப்பட்டன.

2011ம் ஆண்டு பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமியால் 18,500 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள். அப்போதுதான் ஃபுகுஷிமா அணு உலையும் உருகத் துவங்கியது.

இந்த அணு உலை விபத்தில் நேரடியாக யாரும் இறக்கவில்லை. ஆனால் அணு உலைக்கு அருகில் இருந்த மருத்தவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டபோது 40 நோயாளிகள் மரணமடைந்தது அல்லது காயமடைந்ததற்கு கவனக்குறைவு காரணம் என்று கூறி, டெப்கோ நிறுவனத்தின் மூன்று உயரதிகாரிகள் வழக்கு விசாரணையைச் சந்தித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :