ஆப்கனுக்கான அமெரிக்கப்படைகளை அதிகரிப்பது தீர்வாகுமா?

அமெரிக்காவின் நீண்டபோரான ஆப்கானிஸ்தானில் அதன் இராணுவம் நிலைகொண்டிருப்பதை அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்னமும் முடிவு எடுக்கவில்லை.

அதிபர் பதவிக்கு வந்து ஆறு மாதம் ஆன நிலையிலும் டொனால்ட் ட்ரம்பால் இதில் இறுதி முடிவை எடுக்க முடியவில்லை.

ஆப்கானில் இருக்கும் அமெரிக்கப்படைகளின் எண்ணிக்கையை அவர் கணிசமாக உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காயிரம் அமெரிக்க படையினரை அவர் கூடுதலாக ஆப்கானுக்கு அனுப்பக்கூடும் என்று கூறப்படுகிறது.

அப்படி அவர் உயர்த்தினால் ஆப்கானில் இருக்கும் அந்நிய இராணுவத்தினரின் எண்ணிக்கை 20,000 ஆக அதிகரிக்கும்.

ஆனால் 2010ஆம் ஆண்டு 130,000 வெளிநாட்டு இராணுவத்தினர் ஆப்கனில் இருந்தபோதே அவர்களால் தாலிபனை வீழ்த்த முடியவில்லை.

பதினாறு ஆண்டுகளாக நீடிக்கும் போரின் முடிவில் இன்றைய நிலையில் ஆப்கானின் 10 % நிலத்தை தாலிபன் கட்டுப்படுத்துகிறது.

அதுதவிர அதன் மூன்றில் ஒருபகுதி நிலத்தில் ஆப்கன் இராணுவத்தோடு தாலிபன் தொடர்ந்து மோதுகிறது. ஐஎஸ் அமைப்பும் அல்கயீதாவும் கூட இங்கே இருக்கின்றன.

எனவே வெளிநாட்டு இராணுவம் பின்வாங்கினால் ஆயுதக்குழுக்கள் வலுவடையும். அதனாலேயே ஆப்கன் படைகளை வலுவாக்குவதே ஒரே வழி என அமெரிக்கப் படை முடிவெடுத்துள்ளது.

தாலிபனை பேச்சுவார்த்தைக்கு வரவைக்கும் அளவுக்கு ஆப்கன் படைகள் வலுவடையவேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

அது வெற்றியல்ல என்றாலும் அதற்கான மாற்றைவிட இது மேலானது.

இதை அதிபர் ட்ரம்ப் ஆதரிப்பாரா என்பதே இப்போதுள்ள ஒரே கேள்வி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :