`அந்த அருவருக்கத்தக்க சம்பவத்தால் அன்பு, உறவு என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது'

`அந்த அறுவறுக்கத்தக்க சம்பவத்தால் அன்பு, உறவு என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது'

பட மூலாதாரம், MANAN VATSYAYANA/AFP/GETTY IMAGES

ரோஷ்னி, 22 வயது (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

(தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பெண்கள் பகிர்ந்து கொள்ளும் தொடரின் நான்காம் பகுதி.)

குழந்தைப் பருவம் விளையாட்டுத்தனமும், குறும்பும் நிறைந்தது. சிரித்து கலகலப்பாக இருக்கவேண்டிய அந்தப் பருவத்தில் சந்தித்த ஓர் அசம்பாவிதம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

பல ஆண்டுகள் ஆனபோதிலும், அந்த அருவருக்கத்தக்க சம்பவத்தால் ஏற்பட்ட மனத்தடைகளில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறேன். விளைவு? அன்பு, உறவுகள், திருமணம் என்ற வார்த்தைகளே அலர்ஜியாகிவிட்டது.

எனக்கு 11-12 வயது இருக்கும்போது, வெளியூரில் இருந்து படிப்பதற்காக வந்த அவன், பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தான்.

என் குடும்பத்தினருக்கு அவன் மீது நல்ல அபிப்ராயம், அவனை முழுமையாக நம்பினார்கள். நானும், என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியும் அவனிடம் டியூஷன் படித்தோம். டெஸ்டில் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற என்னை, ஒரு நீண்ட பதிலை மனப்பாடம் செய்யச் சொன்னான். ஆனால் தம்பிக்கு கொடுத்த பதிலோ சுலபமானது.

பதிலை, தம்பி விரைவில் மனப்பாடம் செய்து சொல்லிவிட்டான். தம்பியை வீட்டுக்கு அனுப்பிய அவன், ரோஷ்னி பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்த பிறகுதான் வருவாள் என்று வீட்டில் சொல்லச் சொன்னான்.

பிறகு, நாங்கள் இருவர் மட்டுமே அறையில் இருந்தோம். மனப்பாடம் செய்வதில் மும்முரமாக இருந்த நான், தலை நிமிர்ந்தபோது, அதிர்ந்து போனேன். தனது 'பேண்ட்டின் ஜிப்பை நீக்கி, அந்தரங்க உறுப்பை காட்டினான், என் உடலின் பல பாகங்களை வேண்டுமென்றே தொட்டான், சீண்டினான். எனக்கு பிடிக்கவில்லை`.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

பயந்துபோய், அழத் தொடங்கிவிட்டேன். என்னை சமதானப்படுத்த சாம-தான-தண்டம் என பலமுறைகளையும் பயன்படுத்தினான் அந்த மிருகம். 'வீட்டில் இதைப்பற்றி எதாவது சொன்னால், மதிப்பெண் குறைவாக வாங்கியதால், திட்டினேன், அதனால் பழிபோடுகிறாள் ரோஷ்னி என்று சொல்லுவேன், பிறகு செமையாக அடிவிழும்' என்று பயமுறுத்தினான்.

நான் தொடர்ந்து அழுது கொண்டேயிருந்தேன். கட்டுப்படுத்தவே முடியவில்லை. என்னை வீட்டில் கொண்டுபோய் விட்ட அவன், 'மதிப்பெண் குறைவாக வாங்கியதால், திட்டியதாகவும், பதிலை மனப்பாடம் செய்யச் சொன்னபோது, அதையும் சரியாக செய்யாததால், கடுமையாக திட்டியதால் தொடர்ந்து அழுகிறாள்' என்று சொல்லிவிட்டான்.

பட மூலாதாரம், AFP

அதிர்ச்சியும், அழுகையும் சேர்ந்து எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. நலம் விசாரிப்பதற்காக வருவதுபோன்று, தினமும் வீட்டுக்கு வந்து, அவனது கயமைத்தனம் வெளிப்பட்டதா என்று நோட்டமிடுவான். ஆனால் நான் யாரிடமும் எதையும் சொல்லவில்லை.

எனக்கு மனரீதியாக பெரும் உளைச்சல் ஏற்பட்டது. என்னுடைய சொந்த அண்ணன் முன் வருவதைக்கூட தவிர்த்தேன். நான் பெரியவளான பிறகே, எனக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் புரிந்தது.

சில நாட்களில் அவன் வீட்டைக் காலி செய்துவிட்டு, வேறு ஊருக்கு போய்விட்டான். ஆனால், இப்போதும் அவன் நினைவு வந்தால், வருத்தமும், ஆத்திரமும் வருகிறது.

சுமன், 33 வயது (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

பட மூலாதாரம், MONEY SHARMA/AFP/GETTY IMAGES

நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, நடந்த சம்பவம் இது. வழக்கம்போல, பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு சென்றிருந்தோம்.

கிராமத்தில் பாட்டி தனியாக வசிப்பவர் என்பதால் நான்கு சகோதர, சகோதரிகள் குடும்பமாக அங்கு சென்றால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும், அங்கு செல்வது அனைவருக்கும் பிடித்தமானது.

பாட்டி வீட்டுக்கு அருகிலேயே சிறிய தாத்தாவின் வீடு இருந்தது. அவர்கள் வீட்டுக்கு சென்று, அங்குள்ள பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவோம், தொலைக்காட்சி பார்ப்போம், வேடிக்கையாக பொழுதுபோகும்.

ஒரு நாள் இரவு நேரம், மின்சாரம் இல்லை, காற்று அனல் அடித்தது. உள்ளே படுக்கவே முடியவில்லை. வெளியில் விரித்துப் படுக்கலாம் என்றால் அனைவருக்கும் தேவையான அளவு பாய்கள் இல்லை. எனவே, சின்ன தாத்தா வீட்டில் படுக்கச் சொல்லி அங்கு அனுப்பினார்கள். அன்று அவர்கள் வீட்டில் வேறு யாருமே இல்லை.

என்னை பாயில் படுத்துக்கொள்ள சொன்ன அவர், புத்தகப்பிரியையான எனக்கு சில புத்தகங்களை கொடுத்து, உரக்க படிக்கச் சொன்னார்.

பட மூலாதாரம், MONEY SHARMA/AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

அந்த கதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி, அங்கிருந்து படிக்கச் சொன்னார். நான் உரக்கப் படிப்பதில் திறமையானவள் என்பதை காண்பிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் உடனே படிக்கத் தொடங்கிவிட்டேன்.

படிக்கும்போது, 'பிரா' என்ற வார்த்தை வந்தது. அப்போது அவர், "பிரா என்றால் என்ன தெரியுமா? உன் அம்மா போடுகிறாளா?" என்று கேட்டுக்கொண்டே, கைகளை என் மேல்சட்டைக்குள் விட்டு தடவத் தொடங்கிவிட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், ஏதோ தவறு என்று மட்டும் உள்ளுணர்வு சொன்னது. புத்தகத்தை தூக்கி வீசிய நான், அவரது கையைத் தட்டிவிட்டு, எழுந்து ஓடினேன். என்னை பின்தொடர்ந்து அவரும் ஓடிவந்தார்.

ஓடிவருவதற்கு தைரியம் இருந்த எனக்கு, இதைப் பற்றி வேறு யாரிடமும் சொல்ல தைரியம் இல்லை. அவர் அனைவராலும் மதிக்கப்பட்ட தாத்தா ஆயிற்றே! எனக்கு விவரம் தெரிந்த பிறகு, 'இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை தங்கையும் புரிந்து கொள்ளட்டும்' என்பதற்காக அவளிடம் இதைப் பற்றி சொல்லிவிட்டேன்.

தனது சித்தப்பாவின் உண்மை ஸ்வரூபத்தைப் பற்றி அம்மாவிடம் நான் சொல்லவேயில்லை. ஏன் தெரியுமா? 'நான் அழுதுகொண்டு ஓடிவந்த அந்த இரவுவேளையில், எதற்காக அழுகிறாய் சுமன்?' என்று என் அம்மா ஒரு வார்த்தைக்கூட கேட்கவேயில்லை!

சௌதியில் சர்ச்சையை ஏற்படுத்திய குட்டைப் பாவாடைப் பெண்

காணொளிக் குறிப்பு,

கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் மீது சௌதியில் விசாரணை

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :