ஸ்காட்லாந்தின் கடல்பகுதியில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை
- ரோஜர் ஹராபின்
- பிபிசி சுற்றுச்சூழல் ஆய்வாளர், நார்வே

உலகின் முழு அளவிலான முதல் மிதக்கும் காற்றாலை அமைப்பு, ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையை அலங்கரிக்கிறது.
காற்றிலிருக்கும் மின்சாரத்தை தண்ணீரின் மூலமாக பெற வழிவகுக்கும் இந்த புரட்சிகர தொழில்நுட்பமானது, தற்போதைய வழக்கமான முறையை விட தண்ணீரில் மிகவும் ஆழமாக சென்று கீழ்-நிலை விசையாழிகள் (டர்பைன்கள்) மூலம் செயல்படும்.
20 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கக்கூடிய சோதனை முயற்சியான இந்த பீட்டர்ஹெட் காற்றாலை அமைப்பு, ஹைவிண்ட் (Hywind) என்றும் அறியப்படுகிறது.
மின்சாரம் தயாரிக்க தற்போது பயன்பாட்டில் இருக்கும் விசையாழிகளுக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ மிதவை காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தயாரிப்பாளர் ஸ்டேடாய்ல் சொல்கிறார்.
இந்தத் தொழில்நுட்பமானது, பெருமளவில் வெற்றியடையும் அதிலும் குறிப்பாக, ஜப்பான், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை போன்ற ஆழமான கடற்பகுதிகளில் பெரிய அளவில் வெற்றியடையும் என்று நம்பப்படுகிறது.
"திறந்த கடல் சூழலில் இந்த தொழில்நுட்பம் சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்தும் திட்டம் இது; மிதவை காற்றாலை மின்சார உற்பத்தி ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும், செலவினங்களைக் குறைக்க உதவும் என்றும் நம்புவதாக ஹைவைண்ட் திட்ட இயக்குனர் லீஃப் டெல்ப் கூறுகிறார்."
பெரிய அளவிலான விசையாழிகள் தற்போது இடம் மாற்றப்படுகிறது
இதுவரை, மிகப்பெரிய விசையாழி ஒன்று ஏற்கனவே இடம் மாற்றப்பட்ட நிலையில், மேலும் நான்கு விசையாழிகள் நார்வே துறைமுகத்தில் தயாராக இருக்கின்றன.
இந்த மாதக்கடைசியில் அவை அனைத்தும், அபெர்டீன்ஷைரில் உள்ள பீட்டர்ஹெட்டில் இருந்து 15 மைல்கள் (25 கிமீ) வரை இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு அவை பெரிய மீன்பிடி மிதவைகளைப் போல நிமிர்ந்து நிற்கும்.
விசையாழிகளை உருவாக்குவது தற்போது மிகந்த பொருட்செலவு பிடிப்பதாக இருந்தாலும், ஏற்கனவே வழக்கமான காற்றாலை விசையாழிகளின் விலை வியத்தகு முறையில் குறைந்திருப்பதால், உற்பத்தியாளர்கள் அவற்றை வாங்கியிருப்பதை சுட்டிக்காட்டும் அவர், அதேபோல எதிர்காலத்தில் இவற்றின் விலையும் குறையும் என்று ஸ்டாடாயில் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
"மிதவை காற்றாலைகள் இறுதியில் மானியம் இல்லாமலேயே போட்டியிட முடியும் என்று நம்புகிறேன். ஆனால் அவற்றை பெருமளவில் கட்டமைக்கவேண்டும் என்கிறார்" டெல்ப்.
எவ்வளவு பெரியது? பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் பரிமாணங்கள் அதிர்ச்சியூட்டுகிறது:
இந்த விசையாழிகள் தண்ணீரில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் செயல்படக்கூடியவை
- இதன் கோபுரத்தின் விசிறிகள் 175 மீட்டர் (575அடி) உயரம் கொண்டவை, பிக்பென் டவரைவிட உயரமானவை.
- ஒவ்வொரு கோபுரமும் 11,500 டன் எடை கொண்ட்து.
- விசிறிகளுக்கு பின்னால் இருக்கும் பெட்டியில், இரண்டு இரட்டை மாடி பேருந்துகளை வைக்கலாம்.
- ஒவ்வொரு விசிறியும் 75 மீட்டர் -அதாவது ஒரு ஏர்பஸ் அளவில் இறக்கைகள் நீண்டிருக்கக்கூடியவை
- விசையாழிகள் தண்ணீரில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் செயல்படக்கூடியவை.
- கோபுரங்களின் விசிறிகள் புத்தாக்கத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்துமாறு அமைக்கப்பட்டுள்ளன.
- விசிறிகளை கட்டுப்படுத்தும் மேம்பட்ட மென்பொருள் காற்று, அலை மற்றும் நீரோட்டங்களுக்கு ஏற்றவாறு விசிறிகளை திசைதிருப்பி கோபுரத்தை நிமிர்த்துகிறது என்கிறார் ஸ்டாடாயில்.
நார்வேயில், கோடைக்காலத்தின் ஓர் இரவில் 11,500 டன் எடை கொண்ட முதல் விசையாழியை இடம் மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
படகுகளை இழுப்பதற்கு தடிமனான கயிறுகளை பொருத்திய குழுவினர், தடைகளை கண்டறிய ரிமோட்டால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்தினார்கள்.
இறுதியில் மாபெரும் விசையாழி, 78 மீட்டர் நீளமுள்ள குழாய் மீது மிதக்கத் தொடங்கியது. அதன் அடிப்பாகத்தில் இரும்பு தாது நிரப்பப்பட்டு, தண்ணீரில் நேராக நிமிர்ந்து நின்றது.
விலை வீழ்ச்சி
காற்றாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை குறையும் என்று அனைவரும் கணித்திருந்தார்கள். இருந்தாலும், 2012 ஆம் ஆண்டிலிருந்து 32% என்ற அளவில் எதிர்பாராத அளவு துரிதமான வீழ்ச்சியை அடைந்தது சாதனை ஏற்படுத்தியது காற்றலை மின்சாரத்தின் உற்பத்தி விலை.
அரசின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எட்டிவிட்டது. இனி மற்றொரு மிகப்பெரிய விலை வீழ்ச்சியை கடலில் நிர்ணயிக்கப்படும் மிதவை காற்றாலை ஏற்படுத்தும், இது புதிய அணுசக்தி மின்சாரத்தைக் காட்டிலும் மிக மலிவானதாக இருக்கும்.
ஹைவைண்ட் திட்டம், அபுதாபியைச் சேர்ந்த 'மஸ்டர்' என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. பிரிட்டன் அரசின், 'புதுப்பிக்கத்தக்க கடமைப் பத்திரச் சான்றிதழின்' கீழ், 190 மில்லியன் பவுண்டுகள் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள 'The bird charity RSPB' இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதற்கு காரணம், இந்த தொழில்நுட்பம் பிடிக்காத்து அல்ல, இந்தப் பகுதியில் ஏற்கனவே பல கடல் காற்றாலை விசையாழிகள் அமைக்கப்பட்டுவிட்டது என்பதுதான்.
தடிமனான தாம்புக் கயிறுகள் கடல் நீருக்கடியில் இருந்து கோபுரங்களை இணைக்கும்
ஆயிரக்கணக்கான கடல் பறவைகள் கடல் காற்றாலை பண்ணைகளால் கொல்லப்படலாம் என்று கூறினாலும், கடலில் பறவை சடலங்களைக் கணக்கிடஇயலாது என்பதால் மதிப்பீடுகள் பெருமளவில் நிச்சயமற்றவை என்பதை ஒப்புக்கொள்கிறது பறவைகளுக்கான அறக்கட்டளை 'The bird charity RSPB'.
"மிதக்கும் காற்றாலை தொழில்நுட்பத்தில் நாங்கள் இயல்பாகவே மிக்க ஆர்வம் கொண்டவர்கள், ஏனெனில் அது கடற்பறவைகளின் தங்குமிடங்களில் இருந்து விசையாழிகளை தூரத்தில் வைக்க அனுமதியளிப்பதோடு, காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும் உதவுகிறது" என்று RSPBஇன் எய்டன் ஸ்மித் பிபிசி நியூஸ்க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
"ஏற்கனவே பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஹைவிண்ட் திட்டம் மேலும் பிரச்சனைகளை அதிகரிக்கும் என்பதால் இதை எதிர்க்கிறோம்"
மிதக்கும் விசையாழிகள் புதிய ஆற்றலை உருவாக்கும் என்றாலும், மாசு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதாக வாக்களித்திருக்கும் நாடுகள், கூடுதல் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது உடனடித் தேவை என்று காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் விஞ்ஞானிகள் (IPCC) அறிவுறுத்துகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்