விந்தணுக்கள் குறைவது நீடித்தால் மனித இனமே அழிந்து போகும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • பல்லப் கோஷ்,
  • பிபிசி செய்தியாளர்

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது.

கிட்டத்தட்ட 200 ஆய்வுகளின் முடிவுகளுக்கு பிறகு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சியடையும் ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கை தற்போது பாதியாக குறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனினும், மனித இனப்பெருக்கம் (மனிதர்களில் இனப்பெருக்க செயல்முறை) குறித்த இந்த அறிக்கை மீது சில நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

ஆனால், ஆராய்ச்சியின் முடிவுகள் மிகவும் கவலையளிப்பதாக கூறும் ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் ஹகாயி லெவின், அவை எதிர்வரும் ஆண்டுகளில் உண்மையாகலாம் என்று கூறுகிறார்.

ஆராய்ச்சியின் தரம்

ஆராய்ச்சி மிக விரிவாக மேற்கொள்ளப்பட்டது. அளவீட்டின் அடிப்படையிலும் மிகப்பெரியது. 1973 முதல் 2011-ஆம் ஆண்டுவரை வரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொற்று நோய் நிபுணரான (அபெடிமியோலாஜிஸ்ட்) டாக்டர் ஹகாயி லெவின், இதே போக்கு தொடர்ந்தால், மனித இனம் அழிந்து போகும் வாய்ப்பு அதிகமாகும் என்கிறார்.

வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் நடக்கப்போகும் அசம்பாவிதங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்கிறார்.

இந்த ஆய்வில் இணைந்து பணிபுரியாத விஞ்ஞானிகள்கூட, இந்த ஆய்வின் தரம் பற்றி சிலாகித்து பேசுகின்றனர். ஆனால், இந்த ஆய்வின் முடிவை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது அவசரகதியில் எடுத்த முடிவாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் அமெரிக்காவில் வசிக்கும் ஆண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் டாக்டர் லெவின், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லை என்கிறார்.

ஆனால் இந்த நாடுகளில் இதுவரை பெரிய அளவிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படாத்தை ஆராய்ச்சியாளர்கள்' சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும் ஆண்களுக்கு, இந்தப் பிரச்சனை தற்போது இல்லாவிட்டாலும், அவர்களும் என்றாவது ஒருநாள் இந்தப் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று டாக்டர் லெவின் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :