'கணவனின் பாலியல் விருப்பத்தை நிராகரிப்பது குற்றம்': மலேசிய எம்.பியின் கருத்தால் சர்ச்சை

கணவனின் பாலியல் விருப்பத்தை மனைவி புறக்கணிப்பது, "மனோரீதியான, உணர்வுரீதியான துன்புறுத்தலின் ஒரு வடிவம்" என்று கூறிய மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து நாட்டில் பலத்த சர்ச்சையை எழுப்பிவிட்டது.

Woman in Malaysia

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மலேசியா எம்.பியின் கருத்தால் சர்ச்சை

குடும்ப வன்முறை தொடர்பாக மலேசிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, ஆளும் கட்சியான பாரிசான் நேசனல் கூட்டணியின் எம்.பி, சே மொஹமத் ஜுல்கிஃப்லை ஜுசோ இவ்வாறு கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

குடும்ப வன்முறை தொடர்பான நாட்டின் நடப்பு சட்டங்களை திருத்த மலேசிய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

டெரெங்கானு என்ற தொகுதி உறுப்பினரான 58 வயதான சே மொஹமத் ஜுல்கிஃப்லை ஜுசோ, 'ஆண்கள் உடல்ரீதியான வன்முறையைவிட உணர்வுரீதியான வன்முறைக்கு ஆளாவதாக' கூறினார்.

"பெண்களைவிட ஆண்கள் வலிமையானவர்கள் என்று கூறப்பட்டாலும், சில நேரங்களில் பெண்கள், கணவரை மிகவும் மோசமாக வருத்தப்படவோ அல்லது துன்புறுத்தவோ செய்கிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"பொதுவாக கணவர்களை மனைவி சபிப்பது என்பது உணர்வுபூர்வமான துன்புறுத்தல்; கணவரை அவமதிப்பதோடு, அவர்களின் பாலியல் தேவைகளையும் மனைவிகள் நிராகரிக்கின்றனர். இவை அனைத்துமே மனோரீதியான, உணர்வுரீதியான துன்புறுத்தல்" என்கிறார் அவர்.

நாடாளுமன்றத்தில் குடும்ப வன்முறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விவாதத்தின்போது, இந்தக் கருத்துகளை நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படுத்தினர்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடான மலேஷியாவில், ஷரியா நீதிமன்றத்தில் இருந்து அனுமதிபெற்று, ஆண்கள் நான்கு மனைவிகளுடன் வாழலாம்.

முஸ்லிம் ஆண் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள அனுமதி மறுப்பதும் குற்றம் என்று தனது உரையில் ஜுசோ தெரிவித்தார்.

'அந்த வழியில் செயல்படமுடியாது'

பெண்கள் உரிமை ஆர்வலரும், மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹம்மதின் மகளுமான மரீனா மஹாதிரின் கண்டனம் உட்பட, பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சீற்றத்தையும் ஜுசோ எதிர்கொண்டிருக்கிறார்.

"ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதால் அவளுடைய உடலுக்கான உரிமை உங்களுக்கு சொந்தம் என்பது மிகவும் பழமையான கருத்து. இது இனிமேலும் செல்லாது" என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மரீனா மஹாதிர் கூறியிருக்கிறார்.

"உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு. உடலுறவுக்கு பெண் மறுத்தால் அது தவறு என்று சொல்வது அபத்தம்" என்கிறார் மரீனா மஹாதிர்.

இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கும் மரீனா மஹாதிர், "இன்னமும் நாடுகளை ஆள ஆண்களை அனுமதித்திருக்கிறோம்?" என்று கேட்டிருக்கிறார்.

"பாலியல் வன்கொடுமை செய்தவர்களே, பாதிக்கப்பட்டவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம்" என்று ஜூசே ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட கருத்தும் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், Getty Images

புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் வெளியிடப்பட்ட கருத்துக்குப் பிறகு, ஜூசே மீதான சீற்றம் ஆன்லைனிலும் பொங்கி வழிகிறது.

"அடிப்படைவாத மனோநிலை" என்று பல ஃபேஸ்புக் பயனாளிகள் விமர்சித்துள்ளனர்.

"நாட்டின் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் முதலில் சமூக மனப்போக்கையும், ஊழலையும் சரி செய்யட்டும். பிறகு பாலியல் ஆலோசகர்களாக மாறாட்டும், மலேஷியா கேலிச் சித்திரமாக மாறிவிட்டது" என்று லபுவான் தீவைச் சேர்ந்த ஷர்கவி லு கருத்து பதிவிட்டிருக்கிறார்.

"பெண்கள் பாலியல் கைப்பொம்மையல்ல" என்கிறார் கோபெனதன் மாதவன். "அவர்களை மதிக்கவேண்டும், உணர்வுகளை புரிந்துக்கொள்ளவேண்டும். நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்வது ஒரு நோயாளி மனோநிலை. பெண்களும் அதே நடைமுறையை பின்பற்றலாமா? "

அரசின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பலரில் ஒருவரான ரச்சேல் க்கூ "நம்முடைய நாட்டை ஆள்வதற்கான பிரதிநிதிகளாக இத்தகைய அநாகரிகவாதிகளை நாம் ஏன் தேர்ந்தெடுக்கிறோம்?" என்று கேள்வி எழுப்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :