ஓசை லயத்தை கொண்டு சக யானையை இனம் காணும் ஆண் யானை சீல்கள்

சீல்கள்

பட மூலாதாரம், ARI FRIEDLAENDER

படக்குறிப்பு,

ஆண் யானை சீல்களின் எடை இரண்டு டன்னுக்கும் அதிகமாக இருக்கும்

ஆண் 'யானை சீல்கள்' இன்னொரு யானை சீல் எழுப்பும் ஓசை லயத்தை இனம் காண்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண் யானை சீல்கள் எழுப்பும் சத்தத்தை பகுத்து பொருள் தேடிய அமெரிக்க விஞ்ஞானிகள், இவ்விலங்குகளின் சமூக வாழ்வில் குரல்வழித் தகவல்தொடர்பு முக்கிய பங்காற்றுவதைக் கண்டறிந்தனர்.

ஆழ்ந்த லயமான அழைப்பை தங்கள் அடையாளமாக அவை வெளிப்படுத்துவதை இந்த ஆய்வு காட்டியது.

மனிதர்கள் அல்லாத பாலூட்டி இனம் ஒன்று தமது அன்றாட வாழ்வில் குரலைப் பயன்படுத்துவது பற்றிய முதல் எடுத்துக்காட்டு இது என்று 'கரண்ட் பயாலஜி' என்னும் சஞ்சிகையில் அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

பாடும் யானைகள்

குறிப்பிட்ட பாடல் ஒன்றை அதன் தனித்துவமான லயத்தின் மூலம் மனிதர்கள் அடையாளம் காண்பதைப் போலவே, ஒரு சீல் எழுப்பும் ஓசைத் துடிப்பின் அமைப்பை வைத்து அதனை இன்னொரு ஆண் சீல் அடையாளம் காணும்.

லயோன் மற்றும் செயின்ட் எட்டினி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரான கட்டுரையின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் நிக்கோலஸ் மாத்தேவோன் இவற்றின் குரலை 'பிரித்தறியக் கூடியவை' என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் குரல்கள் மிக லயமானவை என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"சீல்கள் கூட்டத்தில் ஒன்றை மற்றொன்று யாரெனத் தெரிந்துவைத்திருக்கின்றன. அவை பிற ஆண்களின் குரலை இனம் காண்கின்றன," என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்த கடற்கரையில் நான்காயிரத்துக்கும் அதிகமான சீல்கள் நெருக்கமாக இருந்தன. இது போன்ற நெருக்கமாக வாழும் பெரிய கூட்டத்தில் ஒன்று மற்றொன்றை அறிந்திருப்பது மிக அவசியமானது.

சீல்களின் சமூக வலையமைப்பு

ஆண் யானை சீல்களின் சமூக வாழ்க்கை கொஞ்சம் சிக்கலானது என்கிறார் சக கட்டுரையாளர் கரோலின் கேசி. கலிஃபோர்னியா சான்டா குரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் இவர்.

பட மூலாதாரம், COLLEEN REICHMUTH

படக்குறிப்பு,

இந்த அதிகாரம் மிக்க சீல்கள் கடற்கரை நாயகர்கள் என அழைக்கப்படுகின்றன

ஒரு ஆண் யானை சீல் தமது சொந்த சமூக வலையமைப்புக்குள் 20-30 பிற சீல்களுடன் கலந்து பழகும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களையும் அடிபணிந்துபோகும் ஆண்களையும் பிரித்தறிவது முக்கியமானது. இந்த இடத்தில் ஒரு தவறான புரிதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். கடந்த ஆண்டு ஒரு ஆண் யானை சீல் தலையில் கடிபட்டு இறந்துபோனது என்று கேசி தெரிவித்தார்.

எனவே, ஓர் ஆண் யானை சீலின் லயமான ஓசை அதன் தனித்த அடையாளமாக செயல்பட்டு, இடத்தை விட்டு ஓடவேண்டுமா என்பதைத் தீர்மானிக்க மற்ற ஆண்களுக்கு உதவுகிறது.

கடற்கரை நாயகர்கள்

கலிஃபோர்னியாவில் உள்ள அனோ நுய்வோ தேசியப் பூங்காவில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட யானை சீல்களை இந்த ஆய்வுக் குழு ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்தது.

ஆதிக்கம் செலுத்தும் ஆண் யானை சீல்களின் குரலோசைகளைப் பதிவு செய்து அவற்றை அடிபணியும் ஆண்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் போட்டுக்காட்டியது ஆய்வுக் குழு.

எதிர்பார்த்ததைப்போலவே, அதிகாரம் மிக்க சீல்களின் ஓசையைக் கேட்ட அதிகாரம் குறைந்த சீல்கள் ஓட்டம் பிடித்தன. இந்த அதிகாரம் மிக்க சீல்கள் கடற்கரை நாயகர்கள் என அழைக்கப்படுகின்றன.

பதிவு செய்த இந்த ஓசையில் ஆய்வாளர்கள் செயற்கையாக மாறுதல்களை செய்து ஒலிபரப்பியபோது அடிபணியும் ஆண்கள் அந்த ஓசையை இனம்காணவும் இல்லை எதிர்வினையாற்றவும் இல்லை. ஓர் ஓசையை இனம் காணாவிட்டால் அவை பொறுத்திருந்து பார்க்கும். இது அவற்றின் உத்தி என்கிறார் மாத்தேவோன்.

சும்மா இருப்பது சோம்பேறித்தனம் போலத் தெரியக்கூடும். ஆனால், இந்த திறமையான உத்தி அவற்றின் உயிரைக் காக்கக்கூடியது.

பட மூலாதாரம், COLLEEN REICHMUTH

படக்குறிப்பு,

இனப்பெருக்க காலத்தின் போது ஆண் யானை சீல்கள் தனது 40% எடையை இழக்கிறது.

இனப்பெருக்கக் காலத்தில் கடலைவிட்டு வெளியே வந்து உணவோ, தண்ணீரோ இல்லாமல் 100 நாள்கள் கூட்டத்தோடு தங்கக்கூடியவை யானை சீல்கள். ஒரு குரலின் லயத்தை இனம் காணாவிட்டால் அவை நகர்வதே இல்லை. இந்த அணுகுமுறை மூலம் அவை ஆற்றல் விரயத்தைத் தவிர்க்கின்றன.

இயலிடச் சூழலில் இவ்விலங்குகளின் இயற்கையான நடத்தையை இந்த ஆய்வு படம் பிடித்திருப்பதாகவும், இவை உயிர் பிழைத்திருக்க லய ஓசைகளை எழுப்புவதும் அவற்றை இனம்காண்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆய்வு காட்டுவதாகவும் பேராசிரியர் பேட்ரீசியா கிரே என்பவர் தெரிவித்துள்ளார். கிரீன்ஸ்பாரோவில் உள்ள நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர் இந்த ஆய்வில் பங்கேற்கவில்லை.

ஓர் உயிரினம் எப்படி லய ஓசைகளைப் பயன்படுத்துகிறது என்று புரிந்துகொள்வது, அவை பிற விலங்குகளையும், அவற்றின் சுற்றுப்புறத்தையும் எப்படிப் பார்க்கின்றன என்பது குறித்தும், இப் பண்புகள் மனிதனின் பார்வையோடு எப்படித் தொடர்புடையவை என்பது குறித்தும் விடை காண உதவும் என்று தெரிவித்துள்ளார் கிரே.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :