‘பாலியல் ரீதியாக துன்புறுத்தியது சகோதரனே’ - அதிரவைக்கும் ஆணின் கதை

தவறான தொடுதல்

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு,

அதுல் குமார் சிங்

தவறான தொடுதல் காரணமாக, சிறு வயதில் பாதிக்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடரின் ஆறாவது பகுதி. இளைஞர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறோம். தனது பெயரை வெளிப்படையாக தெரிவிக்கலாம் என்று தைரியமாக சொல்கிறார் அதுல்குமார்.

என் பெயர் அதுல்குமார். முதன்முதலாக இந்த விசயத்தை வெளிப்படையாக பேசுகிறேன். ஆனால், மனதில் படிந்துவிட்ட கசப்பான நினைவுகளை மாற்றுவதற்கு பலகாலம் ஆனது. பல ஆண்டு மனப்போராட்டத்திற்கு பின்னர், 2016-ஆம் ஆண்டில்தான் மிகுந்த மனதைரியத்துடன் அவனுடைய முகத்தை நேரடியாக, பார்த்தேன்.

என்னை பயமுயறுத்திக் கொண்டே இருப்பான். நான் செல்லும் வழியில் இருப்பான் என்று தோன்றினால், வேறு வழியாக சென்றுவிடுவேன். வீட்டுக்கு வந்திருப்பது தெரிந்தால், வீட்டிற்கு போகவே பிடிக்காது. குடும்பத்தினர் முன் பார்த்தால், மரியாதை காட்டவேண்டும், அதை நான் மனதார வெறுத்தேன். அவனைப் பற்றி மனதில் வெறுப்புணர்வே மண்டிக்கிடந்தது.

ஒளிந்து விளையாடும் விளையாட்டு

படக்குறிப்பு,

கோப்புப்படம்

நான் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவன். வீட்டில் எப்போதும் வேடிக்கையும், விளையாட்டுமாக இருக்கும். பெரியவர்கள் பல விசயங்களை கற்றுக் கொடுத்தாலும், முக்கியமான ஒரு விசயத்தை சொல்லிக் கொடுக்கவில்லை. நான் சிறுவனாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. எப்போது நடந்தது என்று நினைவில்லை என்றாலும், நான் பள்ளிக்குச் செல்லவே தொடங்காத பருவத்தில் சித்ரவதை ஆரம்பித்தது.

எனக்கு ஒன்றுவிட்ட சகோதாரர்கள் இருவர். ஒருவர். ஒருவன் கூட்டுக்குடும்பமாக எங்கள் வீட்டிலேயே இருந்தான். மற்றொருவன் எங்கள் தெருவிலேயே வேறொரு வீட்டில் குடியிருந்தான்.

ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் விளையாட்டின் போக்கு மாறியது. கடைசியில் ஒளிந்து விளையாடத் தொடங்கினோம்.

நானும், ஒன்றுவிட்ட அண்ணனும் மொட்டை மாடியில் இருந்த ஒரு அறையில் சென்று ஒளிந்துக் கொண்டோம். அங்கு ஒரு படுக்கை, தலையணை, போர்வை எல்லாம் இருந்த்து. யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க, கனமான போர்வைக்குள் ஒளிந்துக்கொண்டோம்.

தம்பி வருவான், எங்களை கண்டுபிடித்துவிடுவான் என்று நான் விளையாட்டு நினைப்பில் மூழ்கியிருந்தேன்.

சிறிது நேரத்தில் அண்ணன், என் மேல் படுத்துக்கொண்டு என்னவோ செய்தான். கண்டபடி தொட்டான். அவனை தள்ளிவிட முயன்றேன், அவன் வலுவாக பிடித்துக் கொண்டிருந்தான். பிடியில் இருந்து விலக எனக்கு பலம் போதவில்லை.

சிறிது நேரத்தில் அவன் எழுந்து போய்விட்டான். நான் வாந்தியெடுக்கத் தொடங்கினேன். முகமெல்லாம் சிவந்துவிட்டது.

வாயை மூடச் சொல்லி கன்னத்தில் விழுந்தது பளார்

பட மூலாதாரம், Getty Images

நான் படியில் இருந்து இறங்கிவரும்போது, இயல்பாகவேயில்லை. என்ன நடந்தது என்றே எனக்கு புரியவில்லை. ஆனால், அடிப்பதற்கான புது வழி இது என்றே தோன்றியது.

வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அண்ணன் அடித்துவிட்டான் என்பதை சொல்லவேண்டும் என்று அத்தையிடம் விரிவாக சொல்ல முயன்றேன். பளார் என்று கன்னத்தில் அறைவிட்டு, 'கண்டபடி உளறாதே, ஒருவர் மற்றவர் மீது கோள்மூட்டுவதே வேலையாகிவிட்டது' என்று திட்டினார்கள். அதிர்ந்து போய்விட்டேன். வேறு யாரிடம் சொன்னாலும் மற்றொரு கன்னமும் பழுத்துவிடும் என்று பயந்தேன்.

ஆனால், சித்திரவதை அத்துடன் முடியவில்லை. அண்ணன் மற்றொரு சகோதரனிடமும் இதைப் பற்றி சொல்லியிருப்பான் போல. ஏனெனில் அவனும் அடுத்த சில நாட்களில் என்னிடம் மூத்த சகோதரனைப் போலவே நடந்துக்கொண்டான்.

அவனிடம் இருந்து தப்பிப்பது சுலபமாகவே இருந்தது. அவன் எங்கள் வீட்டிற்கு அருகில்தான் இருந்தான். ஆனால் வீட்டில் என்னுடனேயே எப்போதும் இருந்த மூத்தவனின் கையில் தனியாக சிக்கும் வாய்ப்புகள் இருந்தன.

ஒருநாள் அவன் என் ஆடைகளை களைந்து துன்புறுத்திக் கொண்டிருந்தபோது, அதிருஷ்டவசமாக மாமா அங்கு வந்துவிட்டார். அவனை கன்னாபின்னாவென்று திட்ட்த் தொடங்கிவிட்டார்.

மாமாவின் கைங்கர்யம்

மாமா என்ன சொன்னார், என்ன செய்தார் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. அதற்கு பிறகு எனக்கு நடந்த கொடுமைகள் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் எனது தன்மானமும், நம்பிக்கையும் அடிபட்டுவிட்டது. மற்றவர்கள் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டது.

இப்போது நான் கிராமத்தில் இல்லை, தொலைவில் உள்ள நகரில் வசிக்கிறேன். கல்லூரி படிப்பு முடிக்கும்வரை சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் மனதில் இருந்தது. இதுபோன்ற மனவேதனைக்கு பலர் ஆளாகியிருப்பதை தெரிந்துக்கொண்டேன்.

சிறுபிள்ளைகளுக்கு நேரிடும் வன்கொடுமை, மனப்பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படவேண்டும் என்றுதான் இதை பகிர்ந்துக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு நல்ல விசயங்கள் செய்வதை மட்டும் கற்றுக்கொடுக்காதீர்கள், எதை செய்யக்கூடாது என்பதற்கான அறிவுறுத்தல்களையும் ஊட்டி வளருங்கள்.

நெருப்பைத் தொட்டால் சுடும், பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது, "தவறான தொடுகை மற்றவர்களை பெரிய அளவில் பாதிக்கும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது".

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :