அரசியல் சிக்கலை உண்டாக்கும் சீனா - ஹாங்காங் ரயில்பாதை திட்டம்

  • 29 ஜூலை 2017
ரயில் பாதைத் திட்டம்: சீனாவின் சட்டங்கள் ஹாங்காங்கில் அமலாகுமா? படத்தின் காப்புரிமை Reuters
Image caption சீனாவுடன் ஹாங்காங்கை துரிதமாக இணைக்கும் ரயில் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த அறிவிப்பு.

சீனாவின் சட்டங்களை, தன்னாட்சிப் பிரதேசமாக உள்ள தங்கள் பெரு நிலப்பரப்பில் அமல்படுத்தப்படுவதை முதல் முதலாக அனுமதிக்கும் சர்ச்சரிக்குரிய திட்டத்தை ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ள, காங்சோ-ஷென்ஜென்-ஹாங்காங் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு ரயில் பாதைத் திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின்படி சீனா மற்றும் ஹாங்காங் பிரதேசங்களின் எல்லைகளைக் கடப்பதற்காக அனுமதியைப் பெறுவதற்கான அலுவல்களை, ஹாங்காங்கின் மேற்கு கொவ்லூன் பகுதியில் உள்ள ஒரே வளாகத்தில், பயணிகள் செய்து முடிக்க முடியும்.

அந்த அலுவலகம் ஹாங்காங் மண்ணில் இருந்தாலும், பிரதான நிலப்பரப்பான சீனாவின் சட்டதிட்டங்களே அதன் முனையத்தின் சில பகுதிகளில் அமலில் இருக்கும்.

அந்நடைமுறை பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்று ஹாங்காங் அரசு கூறினாலும், இது ஹாங்காங்கின் சட்டங்களுக்கு எதிரானது என்று அதை எதிர்ப்பவர்கள் கூறியுள்ளனர்.

ஹாங்காங்கிலிருந்து சீன பெருநிலப்பரப்புக்கு எப்படிப் பயணிக்கின்றனர்?

தரை வழியாகப் பயணிப்பவர்களுக்கு, இரண்டு நாடுகளுக்கு இடையேயான எல்லையைக் கடக்கும்போது பின்பற்றப்படும் நடைமுறைகளைப் போன்ற நடைமுறைகளே அமலில் உள்ளன.

மிகவும் பரபரப்பான எல்லைகளைக் கடக்கும் இடங்களில், பயணிகள் முதலில் ஒரு நிலப்பரப்பின் எல்லையில் உள்ள குடியேற்ற மற்றும் சுங்க அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றபின்பு, நடந்தோ சிறிது தூரம் பயணித்தோ சென்று எல்லையின் இன்னொரு பகுதியிலுள்ள அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும்.

ஹாங்காங்கின் குடியேற்ற நடைமுறைகள், பிரச்சனைக்கு உள்ளாகாத ஹாங்காங் பிரதேசத்திலும், சீனாவின் குடியேற்ற நடைமுறைகள் ஷென்ஜென் நகரிலும் கையாளப்படுகின்றன.

இப்போது இதில் என்ன மாற்றம்?

ஹாங்காங் அதிகாரிகள் இதை ஒரே இடத்தில் அனுமதி பெறுவதற்கான வழி என்று கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மேற்கு கொவ்லூனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் நிலையம்.

தற்போது எந்த நகருக்குப் பயணிப்பதாக இருந்தாலும், மேற்கு கொவ்லூன் முனையத்தின் கட்டடத்தில் ஒரே கூரையின் கீழ், ஹாங்காங் மற்றும் சீனாவிற்கான பயண அனுமதிக்கான நடைமுறைகளை, தேசிய அதிவிரைவு ரயில் தொடரின் ரயில்களில் ஏறுவதற்கு முன் பயணிகள் செய்து முடிக்க முடியும்.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையேயுள்ள நடைமுறை போன்றும், யூரோஸ்டார் ரயில் சேவை மூலம் பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு இடையுள்ள ஏற்பாட்டைப் போன்றதாக இது இருக்கும் என்று ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடைமுறை எப்படி வேலை செய்யும்?

"மெயின் லேண்ட் போர்ட் ஏரியா" (Mainland Port Area) என்று அழைக்கப்படும் ஹாங்காங்கிலுள்ள பகுதியை சீனா குத்தகைக்கு எடுக்கும். சீனாவின் குடியேற்ற மற்றும் சுங்க அலுவலகங்கள் மட்டுமல்லாமல், ரயில் பயணிகளுக்கான காத்திருப்பு அறை, நடை மேடை ஆகியவையும் அங்கு அமைந்திருக்கும்.

அந்த இடம் ஹாங்காங் மண்ணில் இருந்தாலும், அங்கு சீனாவின் குடிமை மற்றும் குற்றவியல் சட்டங்களே முழுமையாக அமலில் இருக்கும்.

அது ஹாங்காங் பிரதேசத்திற்கு வெளியில் இருக்கும் இடமாகக் கருதப்படும் என்று ஹாங்காங் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அங்கு நோயுற்ற பயணிகளைத் தனிமைப்படுத்தும் இடம், குடியேற்றம், சுங்கம், நிர்வாகம் மற்றும் காவல் ஆகியவற்றுக்கான அதிகாரிகள் இருப்பார்கள்.

மக்கள் ஏன் கவலைப்படுகிறார்கள்?

"ஒரு நாடு, இரு அமைப்புகள்" என்னும் திட்டத்தின்படி, சீன பெருநிலப்பரப்பில் இருந்து வேறுபட்டு ஹாங்காங்கிற்கு தனி சட்ட அமைப்பு உள்ளது.

இரு பிரதேசங்களின் அடிப்படை சட்டங்களின்படி, சீன நிலப்பரப்பில் வாழ்பவர்களைவிட போராடுவதற்கு அதிக அளவிலான உரிமை போன்றவற்றை ஹாங்காங் மக்கள் கூடுதலாகப் பெற்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஹாங்காங்கிற்கு கூடுதல் அல்லது முழுமையான சுதந்திரம் கோருபவர்கள் தங்கள் அரசியலில் சீனா குறுக்கிடுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

பிரதான நிலப்பரப்பான சீனாவில் உள்ள அதிகாரிகளின் அதிகார வரம்பும் இங்கு இல்லை.

ஹாங்காங்கில் சட்டபூர்வமானதாக இருந்தாலும், சீன சட்டங்களுக்கு எதிரானதாக இருந்தால் ஹாங்காங் மண்ணில் நடக்கும் சம்பவங்களுக்கு, ஹாங்காங் மக்களே கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

சீன அரசை விமர்சிக்கும் புத்தகங்களை விற்றவர்கள் காணாமல் போனது, பதவியேற்பின்போது சீனாவுக்கு எதிராகப் போராடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது போன்ற ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனாவின் தலையீடு, சமீபத்திய ஆண்டுகளில், அதிகரித்து வருவது போன்ற கவலைகளை இது மென்மேலும் கூட்டுகிறது.

சீனாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள பேஸ்புக், டிவிட்டர் போன்ற மேற்கத்திய சமூக வலைத்தளங்கள் அப்பகுதியிலும் தடை செய்யப்படுமா என்பது தற்போது தெளிவாக தெரியவில்லை.

இந்த ஹாங்காங் அரசின் சட்ட முன்மொழிவு, உள்ளூர் சட்டங்களில் மாற்றங்கள் அல்லது இணைப்புகள் செய்யப்படுவதன் மூலம் அங்கு அது அமல்படுத்தப்படும் முன்பு, சீன அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஜனநாயகத்துக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தைத் தடுக்க முயற்சி செய்யப் போவதாகக் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்