ராணுவத்தினருக்கு வயாகரா வாங்க கோடிகளைக் கொட்டிய அமெரிக்கா

  • 7 ஆகஸ்ட் 2017
அமெரிக்கா படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விரைப்புத் தன்மைக்கு பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளது

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் இனிமேல் பணியாற்ற முடியாது என டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், திருநங்கைகளின் உடல்நலத்திற்காக செலவிடப்படும் தொகையை விட மற்றொரு விடயத்திற்காக செலவிடப்படும் தொகை அதிக அளவில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

அமெரிக்க ராணுவத்தினரின் விரைப்புத் தன்மை குறைபாட்டை சரிசெய்ய பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளதாக மிலிட்டரி டைம்ஸ் செய்தித்தாளின் புள்ளிவிவரம் கூறுகிறது.

மாறாக, ரேண்ட் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் நிபுணர்கள் குழு, திருநங்கைகளின் பாலின மாற்றம் தொடர்பான சிகிச்சைகள் அமெரிக்க ராணுவத்தின் தற்போதைய செயல்திறன் பட்ஜெட்டில் ஆண்டுக்கு 8.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரிக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு துறை விரைப்புத்தன்மை மருந்துகளுக்காக ஏன் அதிக அளவில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது.

ஓய்வு பெற்ற முதியவர்களுக்கா?

அமெரிக்க சுகாதார அமைப்பின் 2014 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிலிட்டரி டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்ட அறிக்கையை இங்கு சுட்டிக்காட்டுவது மிகவும் முக்கியமானது.

அந்த ஆண்டில் மட்டும் 84.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில், 2011ஆம் ஆண்டில் இருந்து வயாகரா, சியாலிஸ் உள்ளிட்ட வேறு சில மருந்துகளுக்காக 294 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் மிலிட்டரி டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இது சில ஃபைட்டர் ஜெட் விமானக்களுக்கு ஈடான செலவு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

2104 ஆம் ஆண்டில் நிரப்பப்பட்டுள்ள 1.18 மில்லியன் மருந்து சீட்டுகளில் வயாகராவே பெரும் இடத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆனால், அதை பயன்படுத்தியவர்கள் யார்? என்ற கேள்விக்கான பதில் என்பது செலவினத்தை விளக்கும் விதமாக இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தற்போது பணியில் உள்ள ராணுவத்தினரில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இந்த மருந்துகளை வாங்கியுள்ளனர்.

பணியில் இருக்கும் ராணுவத்தினர் சிலருக்கு அது சென்றுள்ளது என்பதும் உண்மைதான்.

ஆனால், அதிகளவிலான மருந்துகள் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் உள்ளிட்ட மருந்துகளை பெறுவதற்கான தகுதியுள்ள நபர்களுக்கே சென்றுள்ளது.

உணர்ச்சிகளை தூண்டும் விரைப்புத் தன்மையை அதிகரிக்கும் மருந்துகள் பொதுவாக வயதான நபர்கள் பயன்படுத்தும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. பென்டகனுடைய சுகாதார திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதையும் இது விளக்குகிறது.

மிலிட்டரி டைம்ஸ் அறிக்கையின்படி, தற்போது பணியில் உள்ள ராணுவத்தினரில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இந்த மருந்துகளை வாங்கியுள்ளனர். ஆனால், இராக் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

உளவியல் பிரச்சனைகள்

2004 ஆம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை பணியில் இருந்த வீரர்கள் ஒரு லட்சத்து 248 பேருக்கு விரைப்புக் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது என கடந்த 2014ஆம் ஆண்டு ஆயுதப் படைகளின் சுகாதார கண்காணிப்பு கிளை நடத்திய ஆய்வில், தெரியவந்துள்ளது.

இதில் பாதி பேருக்கு விரைப்புக் குறைப்பாடு ஏற்பட உளவியல் பிரச்சனைகளே காரணங்கள் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் போரில் பங்குபெற்ற முன்னாள் படை வீரர்களில் ஐந்தில் ஒருவர் மன உளைச்சல் அல்லது பெரிய அளாவிலான உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2008 இல் வெளிவந்துள்ள ரேண்ட் கார்ப்ரேஷன் அறிக்கை கூறுகிறது.

களத்தில் செயல்படாத மற்ற ராணுவ வீரர்களும் விரைப்புத் தன்மை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறுதியாக, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட பொதுவான காரணங்களும் விறைப்புத் தன்மை குறைப்பாட்டை உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன.

2007 ஆம் ஆண்டு 18 சதவீத அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு விரைப்புத் தன்மை நோய்த்தாக்கம் காணப்படும் என்று கணக்கிடப்பட்டது.

இறுதியாக அமெரிக்க ராணுவ வீரர்களின் உடல் நலத்திற்காக குறிப்பாக விரைப்புத் தன்மை குறைபாட்டை போக்க வயாகரா போன்ற மருந்துகளுக்கு அமெரிக்க ராணுவம் அதிக அளவில் செலவு செய்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

பிற செய்திகள்:

இலங்கை: கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி சவால்

நலன்களை பாதுகாக்காத சட்ட மசோதா: திருநங்கைகள் குமுறல்

தூணில் மோதிய கேபிள் கார்: அந்தரத்தில் தொங்கிய பயணிகள்

குஜராத்தின் கூவத்தூராக மாறிய பெங்களூரு உல்லாச விடுதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :