பெண்ணின் கழுத்தை சுற்றி, மூக்கை கடித்த மலைப்பாம்பு: மீண்டது எப்படி?

  • 30 ஜூலை 2017
போவா மலைப்பாம்பு படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES
Image caption போவா மலைப்பாம்பு

அமெரிக்காவின் அவசர சேவை எண்ணான '911' க்கு தொலைப்பேசியில் அழைத்து பயத்துடன் பேசிய ஒரு பெண்,`` போவா மலைப் பாம்பு எனது முகத்தைச் சுற்றியுள்ளது. தயவு செய்து காப்பாற்றுங்கள்`` என கெஞ்சியுள்ளார்.

இதனையடுத்து ஓகையோ மாகாணத்தின் தீயணைப்பு வீரர்கள் அப்பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர்.

``மேடம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. போவா மலைப்பாம்பு உங்களது முகத்தை சுற்றியிருக்கிறதா?`` என அவரச சேவை மையத்தின் சேவையாளர் கேட்டுள்ளார்.

5 அடி மற்றும் 5 இன்ச் நீளமுள்ள இந்தப் பாம்பு, பெண்ணைச் சூழ்ந்திருந்ததுடன் அவரது மூக்கையும் கடித்துள்ளது என்று திகிலுடன் அப்பெண் விவரித்துள்ளார்.

அப்பெண்ணின் கழுத்தினை போவா பாம்பு சூழ்ந்திருந்த நிலையில், ஷெஃபீல்டு லேக் நகர சாலையில் போராடிக்கொண்டிருந்த அவரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் அனுப்பிவைக்கப்பட்டது.

``மலைப்பாம்பு, அப்பெண்ணில் கழுத்தினை சூழ்ந்திருந்து அவரது மூக்கைக் கடித்தது. அதற்கு மேல் அந்தப் பாம்பை விடவில்லை`` என தீயணைப்பு தலைமை அதிகாரி டிம் கார்டு குரோனிக்கிள் டெலிகிராமிடம் கூறியுள்ளார்.

``அப்பெண்ணைக் காப்பற்ற, வீரர்கள் பாம்பின் கழுத்தினை வெட்ட வேண்டியிருந்தது`` என்று அவர் மேலும் தெரிவித்தார்.

``இங்கு எல்லா இடங்களிலும் ரத்தமாக இருக்கிறது`` என 45 வயதான அப்பெண் அவரச சேவை மையத்தின் சேவையாளரிடம் கூறியுள்ளார்.

போவா மலைப்பாம்புகள் தனது இரையினை சூழ்ந்து, அழுத்தமாக இறுக்கும். இதனால் இதனிடம் பிடிபட்டவரின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்தமும், ஆக்சிஜன் செல்லாமல் தடைப்படும்.

பாதிக்கப்பட்ட இப்பெண் தான்11 பாம்புகளை வளர்ப்பதாகக் கூறியுள்ளார். இச்சம்பவம் நடந்த பிறகு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களால் உயிருக்கு ஆபத்தில்லை என கூறப்படுகிறது.

ஷெஃபீல்டு லேக் சிட்டி ஹாலுக்கு அருகில் இருக்கும் குப்பை தொட்டியில், இறந்துபோன இப்பாம்பை அவரச சேவை ஊழியர்கள் வீசியதாக டிம் கார்டு கூறுகிறார்.

இச்சம்பவம் நடந்த பிறகு, அங்கு சென்ற உள்ளூர் செய்தியாளர் கண்ணாடி கூண்டுகள் காலியாக இருப்பதை கண்டுள்ளார். மேலும், அங்குச் சிறிய குளம் போல ரத்தம் தேங்கியிருப்பதையும் பார்த்துள்ளார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்