``அளவாக மது குடித்தால் நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து குறையும்``- சொல்கிறது புதிய ஆய்வு

  • 31 ஜூலை 2017
மது குடித்தால் சக்கரை நோய் வரும் வாய்ப்பு குறையும் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிகளவு மது குடிப்பதற்கு ஆதரவாக இந்த முடிவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்

மதுவே அருந்தாதவர்களை விட வாரத்திற்கு முன்று முதல் நான்கு முறை மிதமாக மது அருந்துபவர்களுக்கு டயாபடீஸ் 2 வகை நோய் உருவாகும் ஆபத்து குறைவாக உள்ளது என டென்மார்க் நாட்டு ஆய்வு கண்டறிந்துள்ளது.

ரத்தத்தில் சக்கரையின் அளவை நிர்வகிக்க உதவுவதில் `வைன்` முக்கிய பங்கு வகிப்பதுடன், உடலுக்குக் குறிப்பிட்ட நன்மைகளையும் வைன் தருகிறது எனவும் டயபடோலோஜியாவில் வெளியான ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வுக்காக மது அருந்தும் எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களிடம், அவர்கள் எவ்வளவு மது அருந்துகிறார்கள் மற்றும் எப்போதேல்லாம் அருந்துகிறார்கள் என்பது குறித்து கணக்கெடுப்பு ஒன்றினை எடுத்துள்ளனர்.

ஆனால், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகளவு குடிப்பதற்கு ஆதரவாக இந்த முடிவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம், சில புற்றுநோய்கள், இதயம் மற்றும் கல்லீரல் நோய் உட்படப் பல ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு மது அருந்துவது வழிவகுக்கிறது என இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.

சிறந்த விளைவு

``எவ்வளவு மது அருந்தப்பட்டது என்பதை விட, குறிப்பிட்ட இடைவெளியின் மிதமாக அளவில் மது அருந்துவது தனித்த விளைவுகளைக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்`` என இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய, தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார தேசிய நிறுவனத்தின் பேராசிரியர் ஜன்னே டொல்ஸ்ட்ரப் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதே சமயம், சில புற்றுநோய்கள், இதயம் மற்றும் கல்லீரல் நோய் உட்படப் பல ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு மது அருந்துவது வழிவகுக்கிறது

``மதுவை மொத்தமாக ஒரே நேரத்தில் அருந்துவதை விட, அதை நான்கு முறையாகப் பிரித்து அருந்துவது உடலுக்கு நன்மை தருவதை கண்டறிந்துள்ளோம்``

வாரத்திற்கு ஒரு முறை மது அருந்துவபர்களை விட, வாரத்திற்கு முன்று முதல் நான்கு முறை மிதமாக மது அருந்தும் பெண்களுக்கு சக்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 32 சதவிகிதமும், ஆண்களுக்கு 27 சதவிகிதமும் குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அனைத்து வகையான மதுக்களும் இதே விளைவுகளை ஏற்படுத்தாது என கண்டுபிடிப்புகள் பரிந்துரைக்கின்றன.

வாரத்திற்கு ஒரு பியர் அருந்தும் ஆண்களை விட, வாரத்திற்கு ஒன்று முதல் ஆறு பியர் அருந்தும் ஆண்களுக்கு சக்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 21% குறைவாக உள்ளது. ஆனால், பியர் பெண்களுக்கு உடல் நிலையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதே சமயம், பெண்கள் அதிகளவு மது(ஸ்பிரிட்) அருந்துவது, சக்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஆனால், ஸ்பிரிட் ஆண்களின் உடல்நிலையில் எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற ஆய்வுகளைப் போலவே இந்த ஆய்வும், அதிகளவு மது அருந்துவதற்கும் சக்கரை நோய்க்குமான தொடர் குறித்துக் கண்டுபிடிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிகளவு மது அருந்துவதற்கும், சக்கரை நோய்க்குமான தொடர் குறித்து இந்த ஆய்வு கண்டுபிடிக்கவில்லை

``தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இரண்டாம் ரக சக்கரை நோய் உருவாகும் வாய்ப்பு குறையும் என்பது, ஒரு நபருக்கும் மற்றோரு நபருக்கும் இடையே வித்தியாசப்படலாம்`` எனவே மக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ப்ரிட்டனின் சக்கரை நோய் ஆராய்ச்சிக்கான தொடர்பு தலைவர் டாக்டர் எமிலி பர்ன்ஸ் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் சுவாரஸ்யமானதாக இருந்தாலும், அதிகளவு குடிப்பதற்கு ஆதரவாக இந்த முடிவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என டாக்டர் எமிலி தெரிவித்துள்ளார்.

சில நாட்கள் மது அருந்தாமல் இருப்பதுடன், வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்களில் ஆண்களும் பெண்கள் 14 யூனிட்களுக்கும் அதிமாக மதுக்களை அருந்தக் கூடாது. அல்லது 10 சிறிய கோப்பையிலான வைன்களை அருந்தலாம் என மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வாரத்திற்கு சில முறை மிதமாக மது அருந்துவது, மாரடைப்பு, ஸ்ரோக் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கிறது என கண்டறிந்துள்ளனர்.

உதவிகரமாக இல்லை

``மது அருந்துதல், சக்கரை நோயில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து மட்டும் பேசுவது மக்களுக்கு உதவும் விதமாக இல்லை. மது அருந்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல எண்ணிக்கையிலான நோய்கள் ஏற்படுகின்றன. எவ்வளவு குடித்திருக்கிறோம் என்பதை மக்கள் நினைக்கும் போது, இந்த நோய்கள் குறித்தும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்`` என போதை மருந்துகள், மது, புகையிலைக்கான இங்கிலாந்து பொது சுகாதார இயக்குநர் ரோசான்னா ஓ'கார்னர் கூறுகிறார்.

மேலும், வாரத்திற்கு சில முறை மிதமாக மது அருந்துவது, மாரடைப்பு, ஸ்ரோக் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கிறது என பேராசிரியர் டொல்ஸ்ட்ரப் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் குறைவோ அதிகமோ, மது அருந்துதல் கல்லீரல் நோய், கணைய அழற்சி உள்ளிட்ட இரைப்பை நோய்கள் ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

`` மது, உடலின் வெவ்வேறு 50 விளைவுகளுடன் தொடர்புடையது. எனவே `மது அருந்துங்கள்` என நாங்கள் சொல்லவில்லை`` என பேராசிரியர் டொல்ஸ்ட்ரப் கூறுகிறார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :