சீனா குறித்து ஏமாற்றம் அடைந்துள்ள டிரம்ப்

  • 30 ஜூலை 2017

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை நிறுத்துவதற்கு, சீனா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் "மிகவும் ஏமாற்றம்" அடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஏவுகணை சோதனையை பெரிய திரையில் பார்க்கும் வட கொரிய மக்கள்

தனித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வட கொரியா குறித்து சீனா "ஒன்றும் செய்யாமல்" இருக்க நாங்கள் விட மாட்டோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கண்டங்களுக்கிடையே பாய்ந்து தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்திய பிறகு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று, கொரிய தீபகற்பத்தில் தென் கொரியா மற்றும் ஜப்பானிய விமானங்களுடன் சேர்ந்து இரண்டு அமெரிக்க குண்டு வீசும் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன; இது கூட்டணிகளுக்கான அமெரிக்காவின் உறுதியான ஒரு பகுதி என அமெரிக்க பசிபிக் கமாண்ட் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

ஏவுகணை சோதனைக்கு பிறகு, ஒட்டுமொத்த அமெரிக்காவும் தங்களின் தாக்குதல் வரம்பில்தான் உள்ளது என வட கொரியா தெரிவித்தது.

சனிக்கிழமையன்று ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து தரப்பிலும் அமைதி காக்கும்படி சீனா வலியுறுத்தியது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஏவுகணை சோதனையை கொண்டாடிய கிம் ஜாங் உன்

வட கொரியாவுடன் வர்த்தக கொள்கையை கடைபிடிக்கும் சீனா, அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் பாரபட்சம் காட்டுவதை சுட்டிக்காட்டி சீனாவின் பதில் குறித்த தனது வெறுப்பை டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

"சீனாவின் செயல் குறித்து மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். எங்களது முன்னாள் முட்டாள் தலைவர்கள், அமெரிக்காவில் சீனா ஒரு வருடத்திற்கு வர்த்தகத்தில் நூற்றுக்கணக்கான பில்லியன்களை சம்பாதிக்க வைத்துள்ளனர்" என அடுத்தடுத்த ட்வீட்டுகளில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இது மேலும் தொடர நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த பிரச்சனையை சீனா எளிதாக சரி செய்ய முடியும்."

முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் டிரம்பும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் வட கொரியா குறித்து விவாதித்தனர்.

இரண்டு நாடுகளும் வட கொரியாவை கட்டுப்படுத்த "அடுக்கடுக்கான யோசனைகளை" விவாதித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அப்போதிலிருந்து இதுவரை வட கொரியா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்திவிட்டது.

சனிக்கிழமையன்று வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்குப் பிறகு, "தொழில்நுட்பத்தில் வட கொரியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டிவிட்டது" குறித்து கவலையடைந்துள்ளதாக தெரிவித்த தென் கொரியா, ஏவுகணை சோதனை, "தொடங்கிய நேரமும் தொடங்கப்பட்ட இடமும் தனித்துவம் வாய்ந்தது" என்றும் தென் கொரியா தெரிவித்தது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது நாட்டு பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், "மிகவும் தீவிரமானது மற்றும் உண்மையானது" என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :