ஜெர்மனி: இரவு கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

  • 30 ஜூலை 2017
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற `க்ரே` இரவுநேர விடுதியின் வாசலில் நிற்கும் ஜெர்மன் காவல்துறை அதிகாரிகள். படத்தின் காப்புரிமை EPA
Image caption துப்பாக்கிச்சூடு நடைபெற்ற `க்ரே` இரவுநேர விடுதியின் வாசலில் நிற்கும் ஜெர்மன் காவல்துறை அதிகாரிகள்.

ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸ் நகரில் உள்ள இரவு நேர விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மூவர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேக்ஸ்-ஸ்ட்ரோமேயர்-ஸ்ட்ராஸ் பகுதியில் உள்ள க்ரெ விடுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இரண்டாவதாக கொல்லப்பட்ட நபர், அந்த இரவு நேர விடுதிக்கு விருந்தினராக வந்தவர் என ஜெர்மனியிலிருந்து வெளியாகும் பல செய்திகள் கூறுகின்றன.

விடுதியிலிருந்த மற்றவர்கள் அங்கிருந்து வெளியே ஓடி வந்தும்,மறைந்து கொண்டும் தங்களை காத்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதியின் வாயில் காப்பாளர், ஆயுததாரியை தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர் தானியங்கி பிஸ்டர் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர்,எஸ்.வி.ஆர் வானொலியிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption கமாண்டோ வீரர்கள் மற்றும் காவல்துறை ஹெலிகாப்டர் ஆகியவை அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது, காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். ஆனால் அவருக்கு தீவிரமான காயம் ஏதும் ஏற்படவில்லை.

ஜெர்மனி காவல்துறையும், வழக்கறிஞர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,` சிறப்பு கமாண்டோ படை மற்றும் காவல்துறை ஹெலிகாப்டர் ஆகியவை கான்ஸ்டன்ஸ் நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவருக்கு கூட்டாளிகள் யாரும் இருக்கின்றனரா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.` என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணமும் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்