பாலூட்டும் படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய அதிபரின் மகள்

பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு விவாதத்தைக் கிளப்பிய கிர்கிஸ்தான் அதிபரின் மகள் படத்தின் காப்புரிமை Aliya Shagieva
Image caption அலியா ஷகீயேவா பெண்ணின் உடலை அதீதமாகப் பாலியல்தன்மையுடன் சித்தரிக்கும் கலாசாரத்தின் விளைவே இப்பிரச்னைக்குக் காரணம் என்கிறார்

உள்ளாடைகளை அணிந்துகொண்டு தன் குழந்தைக்குப் பாலூட்டும் கிர்கிஸ்தான் நாட்டு அதிபரின் இளைய மகளின் புகைப்படம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பாலியல் ஆகியவற்றைப்பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், அலியா ஷகீயேவா "என் குழந்தைக்கு எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் பாலூட்டுவேன்," என்னும் வாசகத்துடன் சமூக ஊடகத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் அப்பதிவை நீக்கினார். பிபிசிக்கு வழங்கிய ஒரு பிரத்யேகப் பேட்டியில், பெண்ணின் உடலை அதீதமாகப் பாலியல் தன்மையுடன் சித்தரிக்கும் கலாசாரத்தின் விளைவே இப்பிரச்னைக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

"எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த உடல் கொச்சையானதல்ல. இது நன்று செயல்படக்கூடியது. இதன் நோக்கம் என் குழந்தையில் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியது. இது போகப் பொருளல்ல," என்று பிபிசி கிர்கிஸிடம் தெரிவித்தார்.

சில சமூக ஊடகப் பயனாளிகள் மட்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவரின் பெற்றோரான அதிபர் அல்மாஸ்பியேக் அடாம்பாயேஃப் மனைவி ரைசா ஆகியோரும் இச்சம்பவத்தால் மகிழ்ச்சியடையவில்லை.

"அவர்கள் உண்மையாகவே இதை விரும்பவில்லை. இளைய தலைமுறையினர் தங்கள் பெற்றோரை விடவும் குறைவாகவே பழமைவாதிகளாக உள்ளனர் என்பதால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது," என்று கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஷகீயேவா கூறினார்.

தன்னுடைய கலைப் படைப்புகள், அவரால் நுணுக்கமாக வரையப்பட்ட, பெரும்பாலும் திறந்தவெளி நிலப்பரப்புக்களை பின்புலமாகக்கொண்ட, தன்னுடைய மற்றும் தன் குழந்தை மற்றும் கணவரின் உருவப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு ஷகீயேவா சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கக்கூடியவர்.

படத்தின் காப்புரிமை Aliya Shagieva
Image caption பெரும்பாலான ஷகீயேவாவின் புகைப்படங்கள் கிர்கிஸ்தானின் பரந்த நிலப்பரப்புகளை பின்புலமாகக் கொண்டுள்ளன.

"நான் குழந்தைக்குப் பாலூட்டும்போது, என்னால் செய்ய முடிந்த சிறப்பான செயலைச் செய்வதாக உணர்கிறேன். என் குழந்தையைப் பராமரிப்பதும், அவனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் பிறர் என்னைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை விட எனக்கு முக்கியமானது," என்கிறார் ஷகீயேவா.

யார் இந்த அலியா ஷகீயேவா?

குல்னாரா கஸ்மம்பெடோவா, பிபிசி கிர்கிஸ்

தன் குழந்தை மற்றும் கணவருடன் அவர் வசிக்கும் பிஷ்கெக்கில் உள்ள ஒரு மதிப்பிற்குரிய குடியிருப்பில் அவர் நம்முடன் பேசினார்.

அவர் வரைந்த ஓவியங்களும், எடுத்த புகைப்படங்களும் அவர் வீட்டுச் சுவர்களில் தொங்குகின்றன. அவர் வீட்டின் பூந்தொட்டிகளில் மூலிகைச் செடிகள் வளர்கின்றன. பாரம்பரியமாக இறைச்சி உண்ணும் அந்த நாட்டில், அந்த இணையர் சைவ உணவே உட்கொள்கின்றனர்.

சோவியத்துக்குப் பிந்தைய இஸ்லாமியச் சூழலில் அலியா மிகவும் துணிந்தவராகவும் , மாறுபட்டவராகவும் இருக்கிறார். மனம் விட்டுப் பேசும் அலியா, மிகவும் பணிச்சுமை நிரைந்த பெற்றோரின் குழந்தையாக, தன் குழந்தைப்பருவத்தில் தனிமையை அனுபவத்தை விவரிக்கிறார்.

தலைமுறை இடைவெளியைப் பற்றியும், அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும், தன் பெற்றோருடன் அதில் சமரசம் செய்து கொள்வதையும்பற்றிப் பேசும் அவர், "என் அம்மா அவரின் 'நண்பர்களிடம்' இருந்து என்னைப்பற்றி சில குறுஞ்செய்திகளைப் பெற்றுள்ளார். இப்போது நானே ஒரு தாயாகி இருப்பதால், என்னை ஆளாக்கும்போது அவர் எப்படி உணர்ந்திருப்பார்," என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார்.

டௌன் சின்ட்ரோம் (Downs syndrome) உள்ள குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் விலங்குகள் உரிமை ஆகியவற்றை ஆதரித்து செயல்பட்டுவரும் அலியாவுக்கு வெளிப்படையான அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை.

படத்தின் காப்புரிமை Aliya Shagieva
Image caption புகைப்படக்கலை, ஓவியம் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டுள்ளார் அலியா

சமீபத்தில் இரண்டு கிர்கிஸ்தான் அதிபர்களின் வாரிசுகள் அரசியலிலும், அரசின் செயல்பாட்டிலும் தலையிட்டதை அந்நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்கள் இருவருமே பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் தற்போது பதவியில் இருக்கும் அதிபர் தன் பிள்ளைகள் அரசியலில் தலையிட மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

முன்னாள் சோவியத் நாடான கிர்கிஸ்தான், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழும் குடியரசு நாடாகும். அதன் சமூகம் பழமைவாதம் நிரம்பியாதாக இருந்தாலும், பொது இடங்களில் பாலூட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.

பொது இடங்களிலும் பூங்காக்களிலும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டினாலும், ஒரு துணியை வைத்துத் தங்கள் மார்புகளை மூடிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

ஷகீயேவாவின் படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதும், இந்த நெருக்கமான தருணத்தைப் பகிர்ந்திருக்கத் தேவையில்லை என்று சிலர் கருதினார்கள். ஆனால் அவர் அடக்கமாக நடந்துகொள்ளவில்லை என்று சிலர் கண்டித்தனர்.

அவர் பாலூட்டும் புகைப்படம் கிர்கிஸ்தானுக்கு வெளியிலும் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள செய்தித்தாள்களும், இணையதளங்களும் அதைப் பிரசுரித்தன. பெண்களின் உடல் குறித்து காலம் காலமாக நிலவும் கருத்தை உடைத்ததற்காக பலரும் அவரைச் சமூக ஊடகத்தில் பாராட்டினர்.

பொது இடங்களில் பாலூட்டுதல் இன்னும் பல நாடுகளில் விவாதத்திற்குரிய பொருளாகவே உள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிளாரிட்ஜஸ் ஹோட்டல் என்னும் உணவகத்தில், ஒரு பெண் தன் குழந்தைக்குப் பாலூட்டும்போது, மார்புகளை மறைக்குமாறு சொல்லப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பெரும் கண்டனங்களைப் பெற்றது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கடத்த மே மாதம் ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் தன் குழந்தைக்குப் பாலூட்டி முன்னாள் செனட்டர் லாரிஸ்ஸா வாட்டர்ஸ் வரலாறு படைத்தார்.

பொது இடங்களில் பாலூட்டும்போது தங்களுக்கு உண்டாகும் மன அழுத்தம் பற்றி இஸ்லாமியப் பெரும்பான்மை நாட்டுப் பெண்கள் பிபிசியிடம் இணையம் மூலம் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

"மக்கள் என்னை மிகவும் உற்றுப் பார்க்கின்றனர். என்னை முழுதாக நான் மறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது என் குழந்தையை பசியில் வாட விட வேண்டும்," என்று இரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் உள்ள ஒரு தாய் பிபிசிக்கு எழுதியுள்ளார்.

தெஹ்ரான் மெட்ரோ ரயில் நிலையங்களில் சமீபத்தில் பாலூட்டும் அறைகளை அமைக்கப்பட்டுள்ளதை சிலர் பாராட்டியுள்ளனர்.

ஆஃப்கன் தலைநகர் காபுலில் வசிக்கும் ஜரீஃபா கஃபாரி, "பிறர் முன்பு தாய்மார்கள் இங்கு பாலூட்ட முடியாது. மீறிச் செய்தால் பெரியவர்களின் கடுமையான எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் இது மெதுவாக மாறி வருகிறது," என்கிறார்.

தன் அண்ணன் மனைவி, பாலூட்ட ஒரு மறைவான இடம் வேண்டுமென்பதற்காகவே, தேவைப்படாதபோதும் ஒரு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி, அங்கு குழந்தைக்குப் பாலூட்டிய சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் இன்னொரு ஆஃப்கன் பெண்ணான நக்லீன்.ஆனால், இன்னும் சிலர் மார்பகங்களைப் பாலியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பதால், பாலூட்டும்போது அவற்றைத் தாமாகவே மறைக்க விரும்புவதாக துருக்கியைச் சேர்ந்த பேஸ்புக் பயன்பாட்டாளர் ஒருவர் கூறுகிறார்.

Image caption தெஹ்ரான் மெட்ரோ ஊழியர் ஒருவர் அனுப்பிய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்காக அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்.

டொரன்டோ பல்கலைக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பாலின ஆய்வாளர் விக்டோரியா தமாசெபி, "முதலாளித்துவக் கண்ணோட்டத்தில், பெண்களின் மார்புகள் பாலியல் தன்மை உள்ளதாகக் காட்டப்படும் வரை அவை லாபம் ஈட்டும். ஆனால் பொது இடங்களில் பாலூட்டுவது மார்புகளின் கவர்ச்சியைக் குறைக்கும். அதனால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை," என்கிறார்.

பிரச்சனையை உண்டாக்கிய அலியா ஷகீயேவாவின் படத்தைப் பொறுத்தவரை, அப்படத்தால் உண்டாக்கிய கவனம், 'அவரின் இளம் குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும்' என்று அவரின் பெற்றோர் வருத்தப்பட்டதால் அவர் அதை நீக்கிவிட்டார். ஆனால், அதைப்பற்றி அவர் பேசுவதையோ, அது உண்டாக்கிய விவாதத்தையோ அது நிறுத்தவில்லை.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :