பிலிப்பைன்ஸ் டுடெர்டேவால் குற்றம் சுமத்தப்பட்ட மேயர் சுட்டுக் கொலை

  • 30 ஜூலை 2017
பிலிப்பைன்ஸ்: அதிபர் டுடெர்டே எதிர்த்த மேயர் சுட்டுக் கொலை படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் டுடெர்டேவின் போதைப்பொருள் தொழிலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடந்த ஓராண்டில் 7,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேவால் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டின் மேயர் ஒருவர் காவல்துறையின் சோதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

மின்டனாவோ தீவிலுள்ள ஒசாமிஸ் நகரின் மேயர் ரெனால்டோ பரோஜிநோக், அவரது மனைவி மற்றும் 10 பேர் காவல் துறையினர் அவருக்கு கைது ஆணை வழங்கச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேயரின் பாதுகாவலர்கள் தங்களை நோக்கிச் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினர் கைது ஆணை வழங்கச் சென்றபோது அவர்கள் மீது பரோஜிநோகின் மெய்க் காவலர்கள் 'சரமாரியாக துப்பாக்கிச் சூடு' நடத்தியதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"பரோஜிநோக் குடும்பத்தினர், அதிபரின் சட்டவிரோதமாக போதைப்பொருள் தொழிலில் ஈடுபடுவோர் பட்டியலில் இருந்தனர்," என்று டுடெர்டேவின் செய்தித்தொடர்பாளர், எர்னஸ்டோ அபெல்லா ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

பரோஜிநோக்கின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் இரு தரப்பினரும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டனர் என்பதை மறுத்துள்ளதுடன், கொல்லப்பட்ட மேயர் தரப்பிலிருந்தது யாரும் சுடவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஒசாமிஸ் நகரில், அதிகாலையில் நடந்த இந்த சோதனையின்போது, மேயர் பரோஜிநோக்கின் சகோதரரும் கொல்லப்பட்டார். அந்நகரின் துணை மேயரான அவரது மகளும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்விடத்திலிருந்து துப்பாக்கி, பணம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதாக அம்மாகாண காவல் துறையின் தலைவர் ஜேசன் டீ கசமேன் கூறியுள்ளார்.

பரோஜிநோக், அரசு எடுத்து வரும், போதைப்பொருள் தொழிலுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளில் கொள்ளப்படும் மூன்றாவது பிலிப்பைன்ஸ் மேயோர் ஆவார். இந்நடவடிக்கைகளுக்காக அதிபர் டுடெர்டே, உள்ளூர் அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரில் குறிப்பிட்டவர்களையே தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்நடவடிக்கை பிலிப்பைன்ஸ் மக்களின் ஆதரவை அதிபருக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் மனித உரிமை அமைப்புகள் மற்றும் பிற விமர்சகர்கள் இதனைக் கண்டிக்கின்றனர்.

தனது தேர்தல் பிரசாரத்தின்போது சட்டவிரோதமான போதைப்பொருள் தொழிலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று, அதை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த டுடெர்டே சுமார் ஓராண்டுக்கு முன்னரே அதிபர் பதவியேற்றார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஊடுருவலுடன் தொடர்புள்ள வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, மின்டனாவோ மாகாணத்தில் ராணுவ சட்டங்களை நீட்டிப்பதற்கு ஆதரவாக பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.

ஊடுருவலைத் தடுக்க அந்த நீட்டிப்பு அவசியம் என்று டுடெர்டே கூறியிருந்தார். ஆனால் அவர் அதிகாரத்தை விரிவு செய்வதற்கான முயற்சி என்று அவரின் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :