பாதுகாவலர்களுக்கு எதிராக பிரசாரம் செய்த செளதி பெண் விடுதலை

  • 31 ஜூலை 2017
அல்-ஒட்டைபி படத்தின் காப்புரிமை TWITTER/@MERIAM_AL3TEEBE
Image caption பெண் செயற்பாட்டாளாரும் முகநூலில் பலரால் பின்தொடரப்படும் பிரபலமான நபரான அல்-ஒட்டைபி பாதுகாவலர்கள் விதிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஆண் பாதுகாவலர்களின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த செளதியை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் நூறு நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மர்யம் அல்-ஒட்டைபி ஆண் பாதுகாவலரின் ஈடுபாடு இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளது, பிரசாரகர்களால் குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

தனது தந்தையின் வீட்டில் இருந்து தப்பி வந்து தனித்து வாழ முயற்சி செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் செளதி அரேபியாவின் அரசர் சல்மான் பாதுகாவலர்கள் விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பித்தல், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது, திருமணம் செய்துகொள்ள மற்றும் சிறையில் இருந்து வெளிவர உள்ளிட்ட பல்வேறு அன்றாட செயல்களில் செளதி பெண்கள் ஈடுபடுவதற்கு ஆண்களின் அனுமதி தேவை என்ற முறை செளதியில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்தது.

பெண் செயற்பாட்டாளாரும் முகநூலில் பலரால் பின்தொடரப்படும் பிரபலமான நபரான அல்-ஒட்டைபி பாதுகாவலர் விதிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார். #IAmMyOwnGuardian என்ற ஹேஷ்டேக் மூலமாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. மனுக்களில் கையெழுத்திட்டும் அரசர் சல்மானுக்கு கடிதங்கள் அனுப்பியும் வைக்கப்பட்டன.

இருப்பினும் இதுபோன்ற நடவடிக்கைகளை அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் நபர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என வளைகுடாவிற்கான மனித உரிமைகள் அமைப்பு (Gulf Center for Human Rights - GCHR) தெரிவித்துள்ளது.

அல்-ஒட்டைபி தலைநகர் ரியாத்திற்கு தனியாக தப்பிச் சென்றார். ஆனால், அவரது தந்தை பாதுகாவலர்கள் விதிமுறைகளின் கீழ் காவல் துறையிடம் புகாரளித்தார். இதன் பின்னர், ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் வளைகுடாவிற்கான மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

அவர் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் "மீண்டும் நரகத்திற்கு செல்ல" தான் விரும்பவில்லை என்றும் தனது சொந்த ஊரில் இருக்கும் காவல்துறை தனது குடும்பத்துடன் சேர்ந்து எனக்கெதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டியும் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

104 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் ரியாத்தில் உள்ள அல்-மலாஷ் சிறைக்கு மாற்றப்பட்டார் என்றும் வளைகுடாவிற்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
செளதி அரேபிய பெண்கள் போராடுவது ஏன்?

ஆண் பாதுகாவலர்களின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்க சேவைகளை பெண்கள் பெறுவதற்கு அனுமதியளிக்குமாறு அரசு நிறுவனங்களுக்கு அரசர் சல்மான் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.

அதே மாதத்தில், டினா அலி லஸ்லூம் என்ற 24 வயது சவுதி பெண் தனது குடும்பத்தை விட்டு விலகி ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடுவதற்காக முயற்சித்த போது மணிலா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரது உறவினர்களால் வலுக்கட்டாயமாக ரியாத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் இதுவரை அவரைப் பற்றி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. மணிலாவில் இருக்கும் செளதி தூதரகம் அது "குடும்ப விவகாரம்" என்று தெரிவித்தது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்