755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற ரஷ்ய அதிபர் ஆணை

755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற உத்தரவு படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்த நடவடிக்கைளால் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை 455 ஆக குறையும்

ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க அமெரிக்காவின் இரு சபைகளும் ஆதரவளித்துள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள 755 அமெரிக்க தூதரக ஊழியர்கள், தூதரக பணிகளில் இருந்து கட்டாயம் வெளியேற வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க ஊழியர்களை வெளியேற்றும் முடிவு வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி கட்டாயம் வெளியேற்றப்பட உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை ரஷ்ய அதிபர் புதின் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரக ஊழியர்களுக்கு நிகராக, இனி ரஷ்யாவில் 455 அமெரிக்க ஊழியர்கள் இருப்பார்கள்.

நவீன வரலாற்றில், ஒரு நாட்டில் மிகப்பெரிய அளவில் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுவதாக வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் லாரா பிகர் கூறுகிறர்.

ரஷ்யாவில், அமெரிக்க தூதரக பணிகளில் ஈடுபட்டு வரும் ரஷ்ய நாட்டின் ஊழியர்களுக்கும் இந்த முடிவு பொருந்தும் என மாஸ்கோவில் உள்ள பிபிசி செய்தியாளர் சாரா ரைன்ஸ்ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரக மற்றும் எக்டேரின்பர்க், வால்டிவோஸ்டோக், சென்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இணைத்தூதரக ஊழியர்கள் இந்த முடிவால் பாதிக்கப்படுவார்கள் சாரா ரைன்ஸ்ஃபோர்டு கூறுகிறார்.

இதனை,``வருந்தத்தக்க, தேவையில்லாத முடிவு`` என அமெரிக்கா கூறியுள்ளது.

``இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், எப்படி இதற்குப் பதிலளிக்கப் போகிறோம் என்பதையும் ஆராய்ந்து வருகிறோம்`` என அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மாஸ்கோவில் உள்ள இந்த விடுதிக்கு அமெரிக்க தூதர்கள் செல்ல ரஷ்யா தடை விதித்துள்ளது

அமெரிக்கா மீது மேலும் பல நடவடிக்கைகளைத் திணிக்க விரும்பவில்லை என புதின் கூறியுள்ளார். ஆனால், வெகு விரைவில் உறவுகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

``அமெரிக்க தூதரங்களிலும், துணைத் தூதரங்களிலும் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், தற்போதும் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். ஆனால், அந்த 755 ஊழியர்கள் அவர்களின் பணியினை கட்டாயம் நிறுத்த வேண்டும்`` என ரஷ்ய தொலைக்காட்சியிடம் புதின் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க தூதர்கள் பயன்படுத்திய கேளிக்கை விடுதிகள் மற்றும் கிடங்குகளையும் கைப்பற்றி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இன்னும் பல நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கருத்தில் கொள்ளப்படும் என புதின் கூறியிருக்கும் நிலையில், `` தற்போது அந்த முடிவுகளை எடுக்க விரும்பவில்லை`` எனவும் கூறியுள்ளார்.

இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் என்பதற்கு, தெற்கு சிரியாவில் போர் நிறுத்த மண்டலம் உருவாக்கியதை புதின் எடுத்துக்காட்டாகக் கூறினார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption அமெரிக்க தூதரகத்தின் இந்த கிடங்கினையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது

``நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். நிலைமை ஒரு வேளை சிறப்பாக மாறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.`` எனவும் புதின் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு கிரைமியாவை தன்னுடன் இணைத்தது மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டது ஆகியவற்றுக்கு பதிலடியாக ரஷ்யா மீது இந்த புதிய தடைக்கு அமெரிக்க செனட் ஆதரவளித்தது.

ஹிலாரி கிளின்டனின் பிரசாரத் தகவல்களை, அவரது இணையதளக் கணக்கில் ஊடுருவி கள்ளத்தனமாக திரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலடியாக, ரஷ்யாவின் தூதரக எஸ்டேட் வளாகத்தைக் கைப்பற்றவும், 35 ரஷ்ய தூதர்களை வெளியேற்றவும் கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார்.

ரஷ்யா மீது புதிய தடைகளைப் பிறப்பிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், இத்தடைக்கு அமெரிக்காவின் இரண்டு சபைகளும் பெரும்பான்மை ஆதரவுடன் ஒப்புதல் தெரிவித்தன.

அமெரிக்க தேர்தலில் தலையிட்ட ரஷ்யா, ட்ரம்பிற்கு ஆதரவாக செயல்பட்டது என அமெரிக்க உளவுத்துறை நம்பும் நிலையில், தற்போது இது குறித்து பல விசாரணைகள் நடந்து வருகின்றன.

ரஷ்யா எப்போதும் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்து வருகிறது. மேலும், தனக்கும் ரஷ்யாவிற்கும் எந்தவொரு இணக்கமும் இல்லை என ட்ரம்ப் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :