மாணவியை பாலியல் வல்லுறவு செய்து, மொட்டையடித்த வழக்கில் நால்வர் கைது

பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படும் மாணவி மற்றும் அவரது தாயார் ஆகியோர் காவல்துறையினரின் பாதுகாப்போடு, உள்ளூர் மருத்துவமனையில் இருக்கும் காட்சி. படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படும் மாணவி மற்றும் அவர் தாயின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வங்கதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமில்லாமல், அவருக்கு மொட்டையடித்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பாக நால்வரை வங்கதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், வங்கதேச ஆளும் கட்சியான அவாமி லீக்கின் தொழிலாளர் பிரிவைச் சேர்ந்த டுஃபான் சர்கெரும் ஒருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட 16 வயது மாணவி மற்றும் அவரின் தாய் மீது தாக்குல் நடத்தி, அவர்கள் இருவருக்கும் மொட்டையடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சர்கெரின் மனைவியான ஆஷா காடுன் என்பவரை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் மொட்டையடிக்கப்பட்டிருப்பது போல எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து, நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அழுத்தத்திற்கு அதிகாரிகள் உள்ளாயினர்.

மாணவியை பாலியல் வல்லுறவு செய்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் 25 வயதான சர்கெரின் மீது போக்ரா மாவட்ட காவல்துறையினர் கடந்த வெள்ளியன்று வழக்குப் பதிவு செய்தனர்.

`இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் அந்த மாணவியையும், அவரது தாயையும் கொலை செய்து விடுவதாக சர்கெர் மிரட்டியுள்ளார்.` என உள்ளூர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளாரான சோனாடன் சக்ரபர்தி, ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்தில் ஆட்சிக்கு வந்துள்ள அவாமி கட்சியின் தொழிலாளர் பிரிவின் உள்ளூர் தலைவராக சர்கெர் பதவி வகிப்பதாக மற்றொரு அதிகாரி கூறுகிறார்.

இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக மற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாய் ஆகியோர் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் காவல்துறையினரின் பாதுகாப்போடு இருக்கும் புகைப்படங்கள், இணையதளத்தில் வேகமாக பரவி வங்கதேச மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.

பாதிக்கப்பட்ட, அடையாளம் வெளியிடப்படாத அந்த மாணவிக்கும் தனது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக சர்கெரின் மனைவி சந்தேகப்பட்டுள்ளார்.

`அவர்கள் என் தலையை முழுவதுமாக மொட்டையடித்தனர். நான் தொடர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை. என் தாயையும் தாக்கி, அவருடைய தலையையும் அவர்கள் மொட்டையடித்தனர்.` என பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்