பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் ஷாகித் காகான் குறித்த ஆறு முக்கிய தகவல்கள்

  • 1 ஆகஸ்ட் 2017
ஷாகித்கான் அப்பாசி படத்தின் காப்புரிமை EPA
Image caption நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான சபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளும் வரை, ஷாகித்கான் அப்பாசி தற்காலிக பிரதமராக பதவியில் நீடிக்க ஆளும் கட்சி விரும்புகிறது.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக கடந்த வாரம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரிஃபிற்கு பதிலாக, பாகிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக ஷாகித் காகான் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நவாஸ் ஷெரிஃபின் சகோதரரான சபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளும் வரை, ஷாகித் காகான் அப்பாஸி தற்காலிக பிரதமராக பதவியில் நீடிக்க ஆளும் கட்சி விரும்புகிறது.

பஞ்சாப் மாகாண முதலமைச்சராக பதவி வகித்து வரும் சபாஸ் ஷெரிஃப், நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே பிரதமர் பதவிக்கு தகுதி பெற முடியும்.

342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், ஷாகித் காகான் அப்பாஸிக்கு ஆதரவாக 221 ஓட்டுகள் கிடைத்தன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே சபாஸ் ஷெரீப்பினால் பிரதமர் பதவிக்கு தகுதி பெற முடியும்.

எதிர்கட்சிகளும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களை அறிவித்தாலும், பாகிஸ்தானின் ஆளும் கட்சியான `பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்` கட்சிக்குத்தான் பெரும்பான்மை உள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றிருந்த நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், அவரின் சகோதரரான சபாஸ் ஷெரீப் போட்டியிட உள்ளார். ஆனால் இதற்கான நடைமுறைகள் துவங்குவதற்கு 45 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த ஷாகித் காகான் அப்பாஸி?

  • பாகிஸ்தானின் புகழ்பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவரான கான் அப்பாஸி 1988-ஆம் ஆண்டு மறைந்த பின்னர், அவரது மகனான ஷாகித்கான் அப்பாசி அரசியலுக்கு வந்தார். அன்று முதல் பாகிஸ்தான் அரசியலில் ஏறுமுகத்துடன் இருக்கும் இவர், கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளார்.
  • புதிய இடைக்கால பிரதமராக பணியாற்றவுள்ள அப்பாசி, நவாஸ் ஷெரிஃப்பின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார். 1997-ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் தலைவராக, நவாஸ் ஷெரீப்பினால் இவர் நியமிக்கப்பட்டார்.
  • ஆனால், 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆட்சியில் இருந்த ஷெரிஃப்பின் அரசை ராணுவம் கவிழ்த்த போது, அப்பாஸி பதவி நீக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இயற்கை எரிவாயு இறக்குமதி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, பாகிஸ்தானின் ஊழல் கண்காணிப்பு அமைப்பான NAB-சார்பாக 2015-ஆம் ஆண்டு அப்பாஸி மீது வழக்கு தொடரப்பட்டது.
  • நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்படும் வரை, அவரது அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கைவள அமைச்சராக இவர் பணியாற்றி வந்தார்.
  • பட்டப்படிப்பை கலிஃபோர்னியா பல்கலைகழகத்திலும், பட்ட மேற்படிப்பை அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்திலும் முடித்த இவர், அரசியலுக்கு வரும் முன்னர் மின் பொறியியலாளராக அமெரிக்கா மற்றும் சவுதியில் பணியாற்றி வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்