`நாங்கள் வட கொரியாவிற்கு எதிரியல்ல': அமெரிக்காவின் நிலையில் மாற்றம்?

  • 2 ஆகஸ்ட் 2017
வடகொரியா அமெரிக்கா படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியா ஆணு ஆயுத சோதனைகளை நடத்தி அமெரிக்காவை மிரட்டி வருவதால் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில், வட கொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என அமெரிக்கா அரசு எதிர்பார்க்கவில்லை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் கூறியுள்ளார்.

``நாங்கள் வட கொரியாவிற்கு எதிரியல்ல`` என்று குறிப்பிட்ட ரெக்ஸ் டில்லெர்சன், அதே சமயம் வடகொரியாவிடம் இருந்தும் இதே போன்ற கருத்து வரவேண்டும் என அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அணு ஆயுத சோதனைகள் தொடர்ந்தால்,வட கொரியாவுடன் போரிடும் வாய்ப்பு ஏற்படும் என்று அதிபர் டிரம்ப் தன்னிடம் தெரிவித்ததாக குடியரசு கட்சியின் மூத்த செனட்டர் தெரிவித்தார்.

சமீபத்தில் தாங்கள் நடத்திய ஏவுகணை சோதனை, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் அதற்கு அப்பால் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என வட கொரியா கூறியது.

``வட கொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி கவிழ வேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் துரிதமாக மறு இணைப்பு ஏற்பட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மேலும், இரு கொரிய நாடுகளின் எல்லையான 38ஆம் அட்சக் கோட்டின் வட பகுதிக்கு, ராணுவத்தை அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நாங்கள் விரும்பவில்லை`` என ரெக்ஸ் டில்லெர்சன் கூறுகிறார்.

``நாங்கள் உங்களது எதிரியல்ல. நாங்கள் உங்களை அச்சுறுத்தவும் இல்லை. ஆனால், நீங்கள் எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தலை கொடுத்துவருவதால் நாங்கள் இதற்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது`` எனவும் டில்லெர்சன் கூறியுள்ளார்.

வட கொரியா தனது இரண்டாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வெள்ளிக்கிழமையன்று சோதனை நடத்தியதை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் கொண்டாடியுள்ளார். தங்கள் நாடு மீது அமெரிக்கா தடை விதித்தற்குப் பதிலடியாக இந்தச் சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்