ஒரே குடும்பத்தில் சிலர் இந்தியர், சிலர் பாகிஸ்தானியர் - இது எப்படி?

1971 வரை பாகிஸ்தான் கிராமம், பிறகோ இந்திய கிராமம் படத்தின் காப்புரிமை Ariel Sophia Bardi
Image caption மிகவும் விருந்தோம்பும் பண்புடைய உள்ளூர் மக்கள், வெளிநாட்டவரைக் காண மகிழ்ச்சியாக உள்ளனர்.

எல்லைகளால் நன்மையும் உண்டு, பின்னடைவும் உண்டு. ஒரு நாட்டின் எல்லையில் இருப்பதால் அதிக முக்கியத்துவம் பெறும் ஒரு இடத்தின் இருப்பு உணரப்படுவது நன்மை என்றால், மக்களை ஒருவரிடம் இருந்து மற்றவரை பிரிக்கும் எல்லைகள் வருத்தத்திற்குரியது.

எல்லைகள் கொடுத்த வேதனையை இந்தியாவைவிட உலகின் வேறு எந்த நாடும் சரியாக உணர்ந்திருக்க முடியாது. ஒரே பிராந்தியத்தின் மக்களை இருவேறு கூறுகளாக்கியது எல்லை.

நாடுகளை பிரிப்பதற்கான எல்லைகளை வரையறுக்கும் கோடு, மக்களை இரு தரப்பாக பிரிக்கிறது. ஹிந்து பிரதேசத்தில் வசித்த மக்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என இரு பிரிவானாது எல்லையாலே.

பிரிவினையின்போது, எல்லைகளின் அருகே இருந்த பல பகுதிகளுக்கு உரிமை கொண்டாடிய பங்காளிச் சண்டையும் நடந்தது. அதுபோன்ற இடங்களில் ஒன்றுதான் ஜம்மு-காஷ்மீரின் பல்திஸ்தான் மாகாணத்தில் இருக்கும் 'துர்துக்' கிராமம்.

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தான் வசம் சென்றது துர்துக். இந்த கிராமம் இரு நாடுகளின் எல்லைகளுக்கு நடுவில் இருந்தது. எனவே வெளியாட்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, வெளியுலக தொடர்புகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்த்து துர்துக். 1971இல் இரு நாடுகளுக்கும் இடையிலான போரின்போது, துர்துக் இந்தியாவுடன் இணைந்தது.

படத்தின் காப்புரிமை Ariel Sophia Bardi
Image caption இந்தப் பகுதி கரடுமுரடான சாலைகளையும், மண் நிறைந்த மலைகளையும் பாலைவனங்களையும் கொண்டுள்ளதால் இங்கு பயணிப்பது கடினமானது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் அமைந்த கிராமம்

ஜம்மு-காஷ்மீரில் புதிய எல்லைகள் உருவாகும் முன்பு பல்திஸ்தான் தனி நாடாக இருந்தது. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையிலான துர்கிஸ்தானின் யாக்பூ வம்சத்தின் ஆட்சியில் கலை மற்றும் இலக்கியத்திற்கு சிறப்பான ஊக்கமளிக்கப்பட்டது. தற்போதும் துர்துக் கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த கட்டிடங்களின் எச்சங்களை காணலாம். யாக்பூ வம்சாவளியினர் இன்னும் துர்துக்கை தங்கள் தாயகமாக கருதுகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையில் சிக்கி வெளியுலகத்தினர் உள்ளே வர முடியாத நிலையில் இருந்த அந்த கிராமத்து மக்கள் பல ஆண்டுகளாக பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தனர்.

அங்கிருந்த இயற்கை பேரழகு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் மக்களின் மனநிலையைப் பற்றி யாருக்கும் தெரியாது. விண்ணை முட்டும் காரகோர மலைகள் சூழ்ந்த இந்த கிராமத்தில் இருந்து எங்கு பார்த்தாலும் பச்சை பட்டாடை உடுத்திய மலைகளே கண்களை குளிர்விக்கும்.

ஒரு காலத்தில் சீனா, பெர்சியா மற்றும் ரோம், இந்தியா வழியிலான பண்டைய வர்த்தக பாதை 'சீன பட்டுப்பாதை'யின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது இந்த பகுதி.

படத்தின் காப்புரிமை Ariel Sophia Bardi
Image caption இந்தக் கிராமம் தற்போது இந்தியாவில் உள்ளது. ஆனால் சாலையின் கீழே செல்லும் வழியிலேயே பாகிஸ்தான் எல்லை உள்ளது

துர்துக் கிராமம் லடாக்கில் பெளத்த மதத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், முஸ்லிம்களே அதிகம் வசிக்கின்றனர். திபெத்திய பெளத்த மதத்தினரின் ஆழமான தாக்கம் கொண்ட இந்த மக்கள், திபெத் மற்றும் இந்திய-ஆர்ய வம்சாவளியினர் என்று நம்பப்படுகிறது. பால்டி மொழி பேசும் இவர்களின் உணவு மற்றும் கலாச்சாரம் பாரம்பரியம் மிக்கவை.

வளர்ச்சி குன்றிய கிராமம்

இந்தப் பகுதி எல்லைப் பிரச்சனைகளில் சிக்கித் தவித்ததால் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. சாலை போன்ற அடிப்படை வசதிகளோ, வேறு உள்கட்டமைப்பு வசதிகளும் இந்த மக்களுக்கு வாய்க்கவிலை.

கிட்டத்தட்ட முந்நூறு வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில் எதிரெதிரே வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய சாலைகளே உள்ளது. இயற்கை வஞ்சனையில்லாமல் அழகை வாரி வழங்கியிருக்கும் இந்த கிராமத்தில் வனங்கள், மலைகள், நதிகள், என பார்க்கும் இடமெல்லாம் மனதை மயக்கும் பச்சை பசேலென்ற ஆடை உடுத்தி இயற்கை ஜொலிக்கிறது.

படத்தின் காப்புரிமை Ariel Sophia Bardi
Image caption இணையதளம் இல்லாததால் பிரிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள், அஞ்சலில் காணொளி செய்திகளைப் பதிவு செய்து பகிர்ந்துகொள்கின்றனர்.

எளிமையான வாழ்க்கை வாழும் இந்த மக்கள், சிறிய அளவில் தொழில்கள் செய்து கிடைப்பதை வைத்து வாழ்கின்றனர். மின்சார வசதி பெயரளவிலேயே உள்ளது. சீன பட்டுச்சாலை காலத்தில் 'மரண நதி' என்று அழைக்கப்பட்ட 'ஷ்யோக் நதி' துர்துக் அருகே ஓடுகிறது. மக்களின் விவசாயத்தில் பார்லியே பிரதானமானது.

இந்தியாவுடன் இணைந்தது துர்துக்

இந்தியாவுக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னதாக சுதந்திரம் கிடைத்தால், 1971இல் தான் துர்துக் விடுதலை அடைந்தது. இந்தியாவுடன் இணைந்த பிறகு சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து துர்துக் கிராமத்திற்கு வந்த அப்துல் கரீம் ஹஷ்மத் ஆரம்பப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்தார். முதன்முதலில் இங்கு ஒரு தங்கும் விடுதியை திறந்த்தும் அவரே.

முதலில் அங்கிருந்த மக்கள் இந்தியாவுடன் இணைய அச்சப்பட்டதாக கரீம் ஹஷ்மத் கூறுகிறார். ஆனால் 1971இல் நடைபெற்ற போரின்போது, இங்கு வந்த இந்தியப்படைகள் ஆதரவும், ஆறுதலும் அளித்ததாக அவர் கூறுகிறார். துர்துக் கிராமத்தின் அருகில் இருந்த மற்றொரு கிராமத்தை சேர்ந்த கர்னல் ரின்சென்னின் வார்த்தைகள் நம்பிக்கையளித்தது. கர்னல் ரின்சென் கூறிய ஆலோசனையின் அடிப்படையிலே இந்தியாவுடன் இணைவதற்கு துர்துக் மக்கள் இசைந்தனர்.

படத்தின் காப்புரிமை Ariel Sophia Bardi
Image caption உள்ளூர் வாசிகள் விண்ணப்பிக்கும் வரை துர்துக் கிராமத்தில் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை.

துர்துக்கில் மசூதியில் ஒன்றில் குழந்தைகளுடன் அடைக்கலம் புகுந்திருந்த பெண்களிடம் பேசி, இந்தியாவுடன் இணைவதால் ஏற்படும் நன்மையை எடுத்துச் சொல்லி, பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்பிக்கை அளித்தார். தங்களில் ஒருவரான கர்னலின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட துர்துக் மக்கள், ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியுடன் இந்திய ராணுவத்தை வரவேற்றனர்.

1971-ஆம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தான் கிராமம், அதன்பின் இந்திய கிராமம்

1971 போருக்கு முன் துர்துக் கிராமவாசிகளில் பலர் அருகிலுள்ள நகரங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர், தொழில் செய்தனர். இளைஞர்கள் படித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவுடன் துர்துக் இணைந்த பிறகு, அங்கிருந்தவர்கள் பாகிஸ்தானிலேயே தங்க நேர்ந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் இந்தியராகவும், மற்றவர்கள் பாகிஸ்தானியராகவும் இருக்கும் நிலை துர்துக்கில் நிலவுகிறது. இந்திய அரசு, இதுபோன்ற குடும்பங்களுக்கான விசா நடைமுறையை எளிதாக்கியிருக்கிறது. இங்கிருப்பவர்கள் சுலபமாக விசா பெற்று பாகிஸ்தானில் உள்ள உறவினர்களை பார்த்து வரலாம். ஆனால், இதற்காக பணம் செலவாகும். ஆவணங்களும் அதிகம் தேவைப்படும். எனவே, சில மணித்துளிகளில் சென்றடையக்கூடிய தொலைவில் உள்ள உறவுகளை நேரில் சந்திக்கமுடியாத நிலை.

இங்குள்ள மக்களிடம் மொபைல் போன் கிடையாது, சமூக ஊடகங்களோ எட்டாக்கனி. உறவினர்களை எப்படி தொடர்பு கொள்வது? பென் டிரைவில் வீடியோ பதிவு செய்து அனுப்பிக் கொள்கின்றனர். ஆனால் நேரில் சந்திக்கும் ஆவல் அடங்கிவிடுமா? அது நீறு பூத்த நெருப்பாக கன்ன்று கொண்டேயிருக்கும்.

பிரிவின் வலி கடுமையாக இருந்தாலும், அதற்கு மருந்திடுகிறது பென் டிரைவின் வீடியோ தகவல் பரிமாற்றம். ஒருகாலத்தில் துர்துக் கிராம மக்கள் வேறு எங்குமே சென்றது கிடையாது, வெளி மனிதர்கள் இங்கு வந்த்தில்லை என்ற நிலைமாறி, இப்போது சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக மாறிவிட்டது.

இயற்கையின் தெவிட்டாத அழகை ரசிக்க மக்கள் மிகத் தொலைவில் இருந்து இங்கு வருகின்றனர். பார்க்கப்போனால், மதங்களுக்கு இடையிலான எல்லையை பெளத்த-முஸ்லிம் கலாச்சாரம் இங்கே பல காலம் முன்பே அழித்துவிட்டது. எல்லைகளால் உரிமை மாறினாலும், சுவர்களை எழுப்பியிருந்போதிலும், துர்துக் ரம்யமான இயற்கை எழில் கொஞ்சும் இந்திய கிராமம்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :