அமெரிக்க விதித்துள்ள தடை ஒரு முழு அளவிலான வணிகப் போருக்கு சமம்: ரஷ்யா

ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடை உத்தரவுகள், ரஷ்யாவுக்கு எதிரான ஒரு முழு அளவிலான வணிகப் போர் தொடுப்பதற்கு சமமானது என்று அந்நாட்டு பிரதமர் டிமிட்ரி மட்வியேடெஃப் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்தத் தடைகளையும் மீறி ரஷ்யா சத்தமின்றி தனது பொருளாதாரத்தை முன்னேற்றும் என்று டிமிட்ரி மட்வியேடெஃப் தெரிவித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்பால் கையெழுத்திடப்பட்ட தடை உத்தரவுகள் அமெரிக்க அதிபராக அவருடைய முழுமையான ஆற்றலற்ற தன்மையை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எதிராகவும், யுக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை தண்டிக்கும் நோக்கிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சட்ட மசோதாவில் அமெரிக்க நாடாளுமன்றம் அளவு கடந்து செயல்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் (புதன்கிழமை) தடை சட்டங்கள் ஊடாக அமெரிக்காவின் எதிரிகளுக்கு பதிலடி தரும் இச்சட்டத்தில் கையெழுத்திட்ட டிரம்ப், ரஷ்யாவுக்கு எதிரான இந்நடவடிக்கையில் ஆழமான குறைபாடு இருப்பதாக கூறியுள்ளார்.

ரஷ்யா மட்டுமின்றி இரான் மற்றும் வட கொரியா மீதும் தடை சட்டத்தின் காரணமாக பொருளாதார தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய தடை உத்தரவு, இரு நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகவும், அமெரிக்காவுக்கு பொருத்தமான மற்றும் ஏற்புடைய முறையில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்னா செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா பிறப்பித்துள்ள தடை குறித்து வட கொரியா இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :