'ஆபத்தான நிலையில்' அமெரிக்க - ரஷ்ய உறவுகள்: டிரம்ப்

  • 3 ஆகஸ்ட் 2017

மாஸ்கோவுக்கு எதிராக புதிய தடைகளை அமெரிக்க நாடாளுமன்றம் விதித்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான அமெரிக்க உறவு 'ஆபத்தான நிலையில்' இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

புதன்கிழமையன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை, "குறைபாடுகள் கொண்டது" என்று கூறியபோதிலும், அதற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்தார்,

புதிய தடைகள் ஒரு "முழு அளவிலான வர்த்தகப் போருக்கு வழிவகுக்கக்கூடும்" என்று ரஷ்யா கூறியது.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்காக அந்த நாட்டை தண்டிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம்.

இரான் மற்றும் வட கொரியாவிற்கு எதிரான நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய இந்த மசோதாவை முதலில் டிரம்ப் எதிர்த்தார். ஏனெனில், இந்தப் பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற ஷரத்தை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தும்.

இந்தச் சட்டத்தில் கையெழுத்திடுவது குறித்த தனது இறுதி வாதத்தின்போது, "ஒரு அதிபராக, நாடாளுமன்றத்தை விட சிறப்பான உறவுகளை வெளிநாடுகளுடன் என்னால் ஏற்படுத்த முடியும்" என்று டிரம்ப் கூறினார்.

'காங்கிரசுக்கு நன்றி தெரிவிக்கலாம்'

அமெரிக்க-ரஷ்ய உறவுகளின் தற்போதைய நிலைக்கு யார் பொறுப்பு என்ற தனது கருத்தை வியாழனன்று அதிரடியாக கூறியிருக்கிறார் டிரம்ப்.

"ரஷ்யாவுடனான உறவு முன்னெப்போதையும் விட மிகவும் மோசமாக இருக்கிறது" என்று டிவிட்டர் செய்தி மூலம் வெளியிட்டார் டிரம்ப்.

"காங்கிரசுக்கு நீங்கள் நன்றி சொல்ல்லாம். மருத்துவ பாதுகாப்புக்குகூட நமக்கு ஆதரவு கொடுக்காதவர்கள்" என்று டிரம்ப் கூறியிருக்கிறார். முந்தைய அதிபர் பராக் ஒபாமாவின் முதன்மையான சுகாதார திட்டத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தமுடியாத தனது இயலாமையை அவர் சுட்டிக்காட்டினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் அர்கன்சாசிற்கான குடியரசுக் கட்சி செனட்டர் டாம் காட்டன், MSNBC யிடம் இதுபற்றி கூறியபோது, "ரஷ்யாவுடனான எங்கள் உறவு மிகவும் மோசமாகவே உள்ளது, ஆனால் அதற்கு காரணம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்" என்றார் அவர்.

ரஷ்யா இதற்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ளது. இந்த தடைகள் பற்றி கூறும் ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வெடெவ், "புதிய அமெரிக்க நிர்வாகத்துடனான உறவுகளை மேம்படுத்தமுடியும் என்ற நம்பிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டது" என்று கூறினார்.

இந்த பொருளாதாரத் தடைகள் டிரம்பின் "ஒட்டுமொத்த பலவீனத்தை காட்டுவதாக" பேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ள மெட்வதேவ், அதனால்தான் அவர் காங்கிரசில் அவமானப்படுத்தப்பட்டார் என்றும் கூறினார்.

இந்தப் பொருளாதாரத் தடைகள் குறுகிய கண்ணோட்டம் கொண்டவை, சட்டவிரோதமானவை என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் விமர்சித்தார்.

ரஷ்யா தனது தடைகளை எதிர்கொண்டு தனது நலன்களை பாதுகாக்கும் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, ரஷ்யாவிற்கான தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 755 ஆக குறைக்க கடந்த வாரம் மாஸ்கோ உத்தரவிட்டது.

அமெரிக்காவின் புதிய சட்டம், ரஷ்ய மின்திட்டங்களில் முதலீடு செய்யக்கூடிய அமெரிக்கர்களின் முதலீட்டிற்கு அதிகபட்ச வரம்பை விதித்திருப்பதோடு, அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யாவுடன் வணிகம் செய்வதை அதிக சிக்கலாக்கியுள்ளது.

டிரம்பும் ரஷ்யாவும்

  • அதிபர் வேட்பாளராக களத்தில் இருந்த டொனால்ட் டிரம்ப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டினார், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்ல உறவுகளை அவர் விரும்புவதாகவும் கூறினார்.
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற, ரஷ்யா தலையீடு செய்ததான குற்றச்சாட்டுகள் டிரம்பை பின்தொடர்கின்றன. டிரம்பின் பிரசாரம் சரியான வழியில் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்த பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா, இது "தங்களுக்கு எதிரான மோசமான பிரசாரம்" என்று கூறுகிறது.
  • தவறான உறவுகள், ரஷ்யர்களுடனான சந்திப்புகளை வெளிப்படுத்தாமல் மறைத்தது போன்றவை அதிபர் டிரம்பின் அதிகாரிகள் மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கண்காணிப்பின்கீழ் கொண்டுவந்துள்ளது.
  • ரஷ்யாவுடன் நட்பாக உள்ள சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு விசுவாசமான படைகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களும் ரஷ்யா-அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :