ஆண்களின் பாலியல் நடத்தையை தீர்மானிக்கும் முதல் ஆபாச படம்

ஆபாச படம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ''இளம் வயதிலே ஆபாசப் படம் பார்த்த ஆண்களுக்கு, நிஜ வாழ்க்கையில் பெண்களை நெருங்குவதில் அதிக பதற்றம் இருக்கிறது''

ஒரு ஆண் முதன் முதலாக ஆபாசப் படத்தை பார்க்கும் வயதிற்கும், வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்படும் சில பாலியல் நடத்தைகளுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

இளம் வயதிலேயே முதல் முறையாக ஆபாசப் படம் பார்க்கும் ஆண்கள், பிற்காலத்தில் பெண்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள் என்றும், மூத்த வயதில் முதல் முறையாக ஆபாசப் படம் பார்ப்பவர்கள், பல பெண்களுடன் பாலியல் தொடர்பு வைக்க விரும்புவார்கள் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

சராசரியாக 20 வயதுடைய 330 பட்டதாரிகளிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் முதல் முறையாக ஆபாசப் படம் பார்த்த சராசரி வயது 13ஆக இருக்கிறது.

முதல் முறையாக ஆபாசப் படம் பார்க்கப்பட்ட மிக இளம் வயது வெறும் ஐந்து என்றும், மிக மூத்த வயது 26 என்றும் இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

எதிலும் வெளியிடப்படாத இந்த கண்டுபிடிப்புகள், வாஷிங்டனில் ஒரு மாநாட்டில் தொகுத்து வழங்கப்பட்டது.

ப்ளேபாய் வாழ்க்கை

படத்தின் காப்புரிமை Science Photo Library
Image caption இளம் வயதிலேயே ஆபாசப் படம் பார்ப்பவர்கள், ஆண் ஆதிக்கம் கொண்ட கருத்துகளுக்கு பெரும்பாலும் உடன்படுகிறார்கள்

எப்போது முதல் முறையாக ஆபாசப் படம் பார்த்தீர்கள்? வேண்டுமென்றே பார்த்தீர்களா? தற்செயலாகப் பார்த்தீர்களா? அல்லது நிர்பந்தத்திலா? என்ற கேள்விகளை முன்னணி ஆராய்ச்சியாளர் அலிஸா பிஸ்ஸ்காம் மற்றும் அவரது குழுவினர் ஆண்களிடம் கேட்டுள்ளனர். இதில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் நேர்பாலின உறவு கொண்ட வெள்ளை இன ஆண்கள்.

பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள் அல்லது ப்ளேபாய் வாழ்க்கை வாழ்பவர்கள் - இந்த இரண்டு நடத்தைப் பண்புகளில் ஒரு ஆண் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களிடம் 46 கேள்விகள் கேட்கப்பட்டன.

இளம் வயதிலேயே ஆபாசப் படம் பார்ப்பவர்கள், ஆண் ஆதிக்கம் கொண்ட கருத்துகளுக்கு பெரும்பாலும் உடன்படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மூத்த வயதில் ஆபாசப் படம் பார்ப்பதற்கும், பாலியல் துணையை அடிக்கடி மாற்ற விரும்புவது போன்ற ப்ளேபாய் வாழ்க்கை முறைக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இளம் வயதிலே அடிக்கடி ஆபாசப் படம் பார்த்து பழகியவர்களால், நிஜ வாழ்க்கையில் பாலியல் நடவடிக்கைகளை அனுபவிக்க முடியாமல் போகலாம் என ஆராய்ச்சியாளர் க்ரிஸ்டீனா ரிச்சர்ட்சன் கூறுகிறார்.

``இளம் வயதிலே ஆபாசப் படம் பார்த்த ஆண்களுக்கு, நிஜ வாழ்க்கையில் பெண்களை நெருங்குவதில் அதிக பதற்றம் இருக்கிறது. பாலியல் அனுபவங்கள் அவர்கள் திட்டமிட்டபடி இருக்காது அல்லது ஆபாசப் படங்களில் அவர்கள் உணர்ந்தது போல நிஜ வாழ்க்கை இருக்காது`` எனவும் அவர் கூறியுள்ளார்.

மாறாக,``மூத்த வயதில் ஆபாசப் படங்களை பார்த்தவர்கள், நிஜ வாழ்வில் நன்றாக பாலியல் நடவடிக்கைகளை அனுபவிக்கின்றனர். அதனால், இவர்கள் பிளேபாய் வாழ்க்கையினை வாழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது`` என்றும் கூறுகிறார்.

எத்தனை ஆபாசப் படங்களை ஆண்கள் பார்த்திருக்கிறார்கள், என்ன விதமான ஆபாசப் படம், பார்த்தவர்களின் சமுக-பொருளாதார பின்னணி குறித்தெல்லாம் இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

படத்தின் காப்புரிமை YOUTUBE

பாலியல் திறன் குறைவு

``ஆபாசப் படம், பல இளம் ஆண்களின் பாலியல் நடத்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தும்`` என்கிறார் பாலியல் சிகிச்சை நிபுணர் பீட்டர் ஸாடிங்டன்.

``இதனால், இளைஞர்களின் பாலியல் பாகுபாடு வளர்வதுடன், பாலியல் திறன் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்`` என கூறுகிறார் பீட்டர்.

``ஆபாசப் படம் ஆண்களுக்கு ஆரோக்கியமான விஷயம் அல்ல`` என ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட்சன் கூறுகிறார்.

ஆண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள இளம் ஆண்களுக்குச் சிறந்த முன்மாதிரி தேவைப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்