பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை ஐநாவிடம் தெரிவித்தது அமெரிக்கா

  • 5 ஆகஸ்ட் 2017

2015 ஆம் ஆண்டு உருவான பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை தெரிவிக்கும் முதல் எழுத்துப்பூர்வ அறிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் அவையிடம் வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உலக வெப்பமடைதலை தடுக்கின்ற சிறந்த வழிமுறையாக பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் கருதப்படுகிறது

ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வழிமுறையில் அமெரிக்கா தொடர்ந்து பங்கேற்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையிடம் தெரிவித்துள்ள அறிக்கையில் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் தெரிவித்தபோது, சர்வதேச நாடுகளின் கண்டனங்களை பெற்றார்.

இந்த பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அமெரிக்காவை தண்டிக்கிறது என்று தெரிவித்த அதிபர் டிரம்ப், இதனால் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழப்பார்கள் என்று கூறியிருந்தார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வரை இந்த பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான நோக்கம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் அறிவிக்க முடியாத நிலையில், வெள்ளிக்கிழமை அமெரிக்கா வெளியிட்ட இந்த அறிவிப்பு, அடையாள முக்கியத்துவத்தை மட்டுமே பெறுகின்ற ஒரு நிகழ்வாகிப் போனது

இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகும் வழிமுறையை தொடங்க, 2019 நவம்பருக்குப் பிறகு மேலும் ஓராண்டு பிடிக்கும். எனவே, 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த சில வாரங்களுக்குப் பின்னர்தான் இது நிறைவடையும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவு சர்வதேச நாடுகளின் கண்டனங்களை பெற்றது

எந்தவொரு புதிய அதிபரும் பின்னர் இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.

அமெரிக்காவுக்கு நியாயமானதாக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு இன்னொரு பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு தயாராக இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தில் முக்கிய உறுப்பு நாடுகளாக இருப்பவை இந்த பரிந்துரையை ஏற்கவில்லை. பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை உருவாக்க பல தசாப்தங்கள் ஆகியுள்ளன.

கடந்த மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற இருபது நாடுகள் குழு உச்ச மாநாட்டில், பருவநிலை மாற்றம் தெடர்பான அமெரிக்க நிலைப்பாடு பிரிவினைகளை உண்டாக்கியது,

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகின்ற முடிவை கவனித்துள்ளதாக உச்சி மாநாட்டின் ஒருங்கிணைந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது,

இருப்பினும், 20 நாடுகள் குழுவின் பிற உறுப்பு நாடுகள் இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க போவதில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :