இலங்கை: மாகாண சபைகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த நடவடிக்கை

  • 5 ஆகஸ்ட் 2017

இலங்கையில் அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தும் வகையில் உத்தேச அரசியல் யாப்பு 20-ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்ட மூலம் தொடர்பான அரசு வர்த்தமான ( Gazettte ) அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Image caption ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைய இரு வருடங்கள் உள்ளன.

அரசியல் யாப்பு 20-ஆவது திருத்தம் மாகாண சபைகள் தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பாக ஜுலை 25, ஆகஸ்ட் 2ம் தேதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டிருந்தது.

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற வேண்டும். அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட வேண்டிய தேதியை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என குறிப்பாக உத்தேச அரசியல் யாப்பு 20-ஆவது திருத்தம் கூறுகின்றது..

நாடாளுமன்றம் தீர்மானிக்கும் குறித்த தேதி, இறுதியாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையின் பதவிக்காலம் முடிவு தேதிக்கு பின்னராக இருக்க கூடாது .

அந்தத் தேதிக்கு முன்னதாக பதவிக் காலம் முடிவடைகின்ற மாகாண சபைகளின் பதவிக்காலம் நாடாளுமன்றம் குறிப்பிடுகின்ற தேதி வரை நீடிக்கப்பட்டதாக கருதப்படும்.

நாடாளுமன்றம் தீர்மானிக்கும் குறித்த தேதிக்குப் பின்னர் மாகாண சபையொன்றின் பதவிக் காலம் இருந்தாலும் அதே தேதியில் அந்த மாகாண சபையும் கலைக்கப்பட்டதாகவே கருதப்பட வேண்டும். என்றும் உத்தேச அரசியல் யாப்பு 20-ஆவது திருத்த சட்ட மூலத்தில் கூறப்பட்டுள்ளது.

Image caption சட்டம் நிறைவேற்றப்பட்டால் கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நீடிக்கும்

இதே வேளை இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளில் இறுதியாக 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. அதன் 5 வருட பதவிக் காலம் 2019 செப்டம்பர் மாதம் முடிவடைகின்றது. அதன் பதவிக் காலத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தினால் தேதி தீர்மானிக்க முடியாது என்பதை உத்தேச அரசியல் யாப்பு திருத்தம் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

தற்போதுள்ள தேர்தல் சட்டத்தில் ஒரு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததும் அது கலைந்ததாக கருதப்படுகின்றது. உத்தேச திருத்தம் நாடாளுமன்றத்தினால் குறித்துரைக்கப்படுகின்ற தேதியில் கலைந்ததாக கருதப்படும் என்று குறிப்பிடுகின்றது.

இந்த திருத்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பதவிக்காலம் முடிவடையவுள்ள கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலமும் குறித்த தேதி வரை நீடிக்கின்றது.

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதால் அரசு நிதி தேர்தலுக்கு கூடுதலாக செலவிடப்படுவதை தவிர்க்க முடியும் என அரசு தனது பக்க நியாயத்தை முன்வைத்தாலும் தேர்தலுக்கு முகம் கொடுக்க அரசு பயப்படுவதாக கூட்டு எதிரணி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்து தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்வது ஜனநாயக விரோத போக்கு என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன..

ஏற்கனவே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் தேர்தல் சட்டத்தில் திருத்தம் என்ற காரணத்தை முன் வைத்து தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருவதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

இலங்கையில் தற்போது 9 மாகாண சபைகள் உள்ளன. இதுவரையில் ஓரே நாளில் தேர்தல் நடந்த வரலாறு இல்லை. மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின்; பிரகாரம் மாகாண சபையொன்றின் பதவிக் காலம் 5 வருடங்களாகும்.

பதவிக் காலம் முடிந்த பின்னர் தற்போதைய தேர்தல் சட்டத்தில் அதனை நீடிப்பதற்கான வாய்ப்பு இல்லை. பதவிக் காலத்திற்கு முன்னதாக கலைப்பது என்றால் மாகாண முதலமைச்சரின் ஓப்புதல் பெறப்பட வேண்டும்.

எதிர்வரும் செப்டம்பர் 8ம் தேதி கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலமும் 28ம் தேதி சப்ரகமுவ மாகாண சபையின் பதவிக் காலமும் அக்டோபர் 1ம் தேதி வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைகின்றது.

பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையம் ஒரு வார காலத்தில் அடுத்த தேர்தலுக்கான வேட்பு கோரும் அறிவித்தலை வெளியிட வேண்டும். என தற்போதுள்ள மாகாண சபை தேர்தல் சட்டம் கூறுகின்றது.

உத்தேச திருத்தம் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல் நடை பெறாது. அதற்கு பதிலாக சபைகளின் பதவிக் காலமும் அனைத்து மாகாண சபைகளையும் கலைப்பதற்காக நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் தேதி வரை மேலும் நீடிக்கும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்