151 ஆண்டுகளுக்கு பிறகு உரிமையாளர்களிடம் திரும்பி அளிக்கப்பட்ட பைபிள்

151 ஆண்டுகள் பழமையான பைபிள்
படக்குறிப்பு,

151 ஆண்டுகள் பழமையான பைபிள்

அமெரிக்காவிலிருந்து 3,500 மைல்கள் பயணம் செய்து, 151 ஆண்டுகள் பழமையான பைபிள் ஒன்று, அதன் உரிமையாளர்களான ஸ்காட்லாந்து குடும்பத்தின் வம்சாவழியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பைபிளின் தற்போதைய உரிமையாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்ஷல் வைட்ஹெட், அதன் உண்மையான உரிமையாளர்களை கண்டுபிடித்து பைபிளை திருப்பி அளித்துள்ளார்.

சமீபத்தில் ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரைச் சேர்ந்த 66 வயதான டொனால்ட் மெக்கெக்னியிடம் இந்த பழமையான பைபிளானது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பைபிள் மெக்கெக்னியின் கொள்ளுப்பாட்டிக்கு சொந்தமானது.

ஓஹியோ மாகாணத்தின் கிளவ்லேண்ட் நகரத்தைச் சேர்ந்த பழமையான பைபிள் சேகரிப்பாளர் ஒருவர், கடந்த 2001-ஆம் ஆண்டு வைட்ஹெட்டிற்கு இந்த பைபிளை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

இந்த பைபிளில் `1 ஜனவரி 1866` என தேதியிட்டு, அலெக்சாண்டர் என்பருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது என்ற தகவல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒயின் வியாபாரி, பலசரக்கு வியாபாரி மற்றும் மாலுமியாக பணியாற்றிய, 1825-ஆம் பிறந்த மெக்டொனால்டின் தற்போதைய சந்ததியினரை தேடிக் கண்டுபிடிக்க வைட்ஹெட் முடிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட் கவுன்சிலை தொடர்பு கொண்டதன் மூலம் , ஹைலேண்ட் வரலாற்றுக் காப்பகத்தில் பணியாற்றி வரும் ,மெக்கன்சி குடும்பம் குறித்து நன்கு அறிந்த ஆனி பிரேசரின் தொடர்பு அவருக்கு கிடைத்துள்ளது.

படக்குறிப்பு,

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் பைபிளுடன் தனது வீட்டின் முன் நிற்பதை பார்த்த மெக்கெக்னி ஆச்சரியமடைந்தார்.

இதுதவிர சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் கிளாஸ்கோவில் உள்ள மெக்கெக்னியின் மகள் மைரியையும் அவர் தேடி வந்தார்.

இந்த பைபிளுக்கு நடுவில் நான்கு இதழ்கள் கொண்ட கிளவர் வடிவ இலையும் வைக்கப்பட்டிருந்தது. இத்தனை சிறப்புகள் மிக்க இந்த பைபிளானது, ஓஹியோவில் பாதிரியாராக இருப்பவரும், கிளாஸ்கோ நகரத்தை சேர்ந்தவருமான அலிஸ்டெய்ர் பெக்கிடம் அளிக்கப்பட்டது. இவர் மெக்கன்சி செல்லக் கூடிய தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினர்களை பார்க்க சமீபத்தில் கிளாஸ்கோ சென்ற போது , அந்த பழமையான பைபிளை மெக்கெக்னியிடம் ஒப்படைத்துள்ளார்.

படக்குறிப்பு,

நான்கு இலைகள் கொண்ட கிளவர் இதழ் அந்த பழங்கால பைபிளுக்குள் சருகாக இருந்தது.

`அதிர்ச்சியும் ஆனந்தமும்`

`ஒரு நாள் எனது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவை திறந்த போது வாசலில் அவர் நின்று கொண்டிருந்தார். இந்த பைபிள் எப்படி வந்தது என்பது குறித்து அவர் விவரித்த போது, நான் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் உறைந்து போனேன்.

எங்கள் குடும்பத்தின் பாரம்பரிய சொத்து ஒன்று கிடைத்ததை நினைத்து மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது.` என கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்லாந்து சர்ச்சில் எழுத்தராக பணியாற்றி வரும் மெக்கெக்னி தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு,

`இன்னும் நல்ல மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்` என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக மெக்கெக்னி கூறுகிறார்.

இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற மெக்கெக்னி , இந்த பைபிள் ஸ்காட்லாந்திற்கு வந்துள்ளது என்பது ` இன்னும் நல்ல மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்` என்பதை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட பழங்கால சேமிப்புகளிலிருந்து இந்த பைபிளை தேர்ந்தெடுத்த வைட்ஹெட், இந்த சம்பவம் எத்தேச்சையாக நடந்தது அல்ல எனவும் அந்த பைபிள் கண்டிப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட வேண்டியது எனவும் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

`வரலாற்று ஆய்வாளரான ஆனி பிரேசர் மற்றும் எனது மூத்த பாதிரியார் அலிஸ்டெய்ர் பெக் ஆகியோரின் உதவி இல்லாவிட்டால், இது நடந்திருக்காது` என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் வைட்ஹெட் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :