அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நிறுத்த வடகொரியாவை வலியுறுத்தும் கூட்டாளி சீனா

வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்த சில மணி நேரங்களில், வட கொரியா அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் செய்வதை நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர், வடகொரிய வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வட கொரிய வெளியுறவு அமைச்சருடனான பேச்சு வார்த்தை முழுமையாக இருந்ததாக கூறுகிறார் வாங் யி.

ஞாயிறன்று பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சந்திப்பின்போது, வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரீ யோங்-ஹோவிடம், ஐ.நா. தீர்மானத்தின்படி நடந்து கொள்ளுமாறு தெரிவித்ததாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். ஆனால் ரீ அதற்கு என்ன பதிலளித்தார் என்று அவர் கூறவில்லை.

வட கொரியாவின் ஏற்றுமதிகளைத் தடை செய்து, அங்கு செய்யப்படும் முதலீடுகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் சனிக்கிழமையன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தடைகள் தேவை, ஆனால் "அவையே இறுதி இலக்கல்ல" என்று கூறிய வாங், இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வட கொரியாவை அமைதியாக இருக்குமாறும்,மேற்கொண்டு ஆயுத சோதனைகள் நடத்தி, சர்வதேச சமூகத்தின் கோபத்தைத் தூண்ட வேண்டாம் என்று தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பதற்றத்தைத் தூண்ட வேண்டாம் என்று கூறிய அவர், தற்போதைய சூழல் ஒரு "நெருக்கடியான கட்டத்தை" எட்டியுள்ளதாகவும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாகவும் கூறினார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி, நிக்கி ஹேலி, தற்போதைய தலைமுறையில் வேறு எந்த நாட்டையும்விட வட கொரியா மிகவும் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார்.

ஜூலை மாதம் இரண்டு கண்டம் வீட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா, தற்போது அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு ஆயுத வல்லமை தங்கள் நாட்டிடம் உள்ளதாகக் கூறியது. எனினும், அந்த ஏவுகணைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாக்குமா என்பதை நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவால் கண்டிக்கப்பட்ட அந்த சோதனைகள், ஐ.நாவின் புதிய தடைகளுக்கு வித்திட்டன.

புதிய தடைகள் என்னென்ன?

படத்தின் காப்புரிமை AFP
  • நிலக்கரி, கடல் உணவு, இரும்பு மற்றும் இரும்புத் தாது, ஈயம் மற்றும் ஈயத் தாது ஆகியவற்றை வட கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யத் தடை.
  • வட கொரியாவைச் சேர்ந்த தொழிலாளர்களை புதிதாகப் பணியமர்த்தத் தடை.
  • வட கொரியாவின் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுடன் புதிய தொழில் கூட்டு ஏற்படுத்தத் தடை.
  • பயணத் தடை மற்றும் சொத்துகளை முடக்கும் பட்டியலில் அதிகமான வட கொரியர்களைச் சேர்த்தல்.
  • பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினர்கள், அந்தத் தடைகளை எவ்வாறு அமல்படுத்தியுள்ளன என்று 90 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

'மிகவும் கடுமையானது' என்று ஹேலி கூறும் பேச்சுவார்த்தைக்குப் பின், வட கொரியாவின் ஒரே சர்வதேசக் கூட்டாளியான, பாதுகாப்புக் கவுன்சிலில் ''வீட்டோ' அதிகாரம் பெற்ற சீனா, அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

கடந்த காலங்களில் ஆபத்தான தீர்மானங்களில் இருந்து சீனா, வட கொரியாவைக் காப்பாற்றி வந்தது. வட கொரியாவுடன் பொருளாதார உறவுகள் வைத்திருப்பதற்காக, அமெரிக்காவால் அடிக்கடி விமர்சிக்கப்படும் ரஷ்யாவும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

அமெரிக்க வெளியுறவுச் செயலர், ரெக்ஸ் டில்லர்ஸன் உள்பட, பல வெளியுறவு அதிகாரிகளும், பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் (அஸோஸியேஷன் ஆஃப் சௌத் ஏசியன் நேசன்ஸ் ) அமைப்பின் பிராந்தியக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வட கொரியாவின் அணு ஆயுத திட்டம், இக்கூட்டத்தில் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ரெக்ஸ் டில்லர்ஸன் மற்றும் அவரது வட கொரிய சகா ஆகியோரிடையே எந்த இருதரப்புக் கூட்டமும் திட்டமிடப்படவில்லை.

அமெரிக்காவிற்கு ஏன் இந்த அவசரம்? - ஓர் அலசல்

ஜோனதன் ஹெட், பிபிசி தென் கிழக்காசிய செய்தியாளர்

வட கொரியா தனது அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தி வரும் சூழலில், ஆசியாவில் அமெரிக்கா தனது ராஜாங்க உறவுகளை வலுப்படுத்த முனைவதும், ரெக்ஸ் டில்லர்ஸன், ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதும் சரியான நேரத்தில் அமைந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் வட கொரியாவை எல்லா நாடுகளும் கண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரீ யோங்-ஹோவுடன் ஒரே அறையில் கூட்டத்தில் கலந்து கொண்டாலும், அவர்கள் உரையாடிக்கொள்ளும் வாய்ப்பு குறைவு.

படத்தின் காப்புரிமை Getty Images

இக்கூட்டத்தின்போது, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுடனும் டில்லர்ஸன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். வட கொரியா மீது தரும் அழுத்தங்கள் மூலம், அதன் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறுத்துவது மட்டுமல்லாமல், அவற்றை மீண்டும் பழைய நிலைக்கே பின்னோக்கி இழுத்துச் செல்ல வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

வட கொரியா மீது டிரம்ப் நிர்வாகத்திற்கு அதிகரித்துவரும் கோபம், பதற்றத்தை அதிகரித்து, இந்தப் பிராந்தியத்தில் மோசமான சச்சரவுகளை உண்டாக்கும் என்று ஆசிய நாடுகள் அஞ்சுகின்றன. பேச்சுவார்த்தை மூலமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஆசிய நாடுகளிடையே ஒருமித்த கருத்து நிலவுவதால், வட கொரியாவை ஆசியான் அமைப்பிலிருந்து நீக்க அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பெரிய எதிர்ப்பே இருக்கும்.

பெரும் இழப்பு

இந்தத் தடைகளால் வட கொரியாவுக்கு ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பு உண்டாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் கூறியுள்ளார்.

நிலக்கரி, உலோகங்களின் தாது ஆகியவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது வட கொரியாவுக்கு ஒரு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. ஆண்டுக்கு மூன்று பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்யும் வட கொரியாவுக்கு இந்தத் தடையால் சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக இழப்பு உண்டாகும்.

படத்தின் காப்புரிமை Twitter

ஆனால், இந்தத் தடையில் சீனாவின் பங்கு முக்கியமானது. சீனா இந்தத் தடைகளை அமல்படுத்துகிறதா என்று கண்காணிக்கப்போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. வட கொரியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, நிலக்கரி இறக்குமதியை சீனா இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்தியது. எனினும், இந்தத் தடைகள் வட கொரியா தனது ஆயுத பலத்தை அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை.

அமெரிக்க நிதி உதவியுடன் தென் கொரியா ஆயுத பலத்தை வலுப்படுத்துவதை எதிர்க்கும் சீனா, அது நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறது. இது வரை இந்தத் தடைகள் பற்றி வட கொரியா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி முகமையிடம், "எல்லாம் முடிவு செய்யப்பட்டபின் எங்கள் நிலையைத் தெளிவுபடுத்துவோம்," என்று ஒரு மூத்த வட கொரிய அதிகாரி கூறினார்.

ஆனால், "கற்பனை செய்ய முடியாத அளவு நெருப்பு" அமெரிக்காவைச் சூழும் என்று முன்னதாக, வட கொரியாவின் ஆளும் கட்சி நாளேடான ரோடோங் சின்முன் கூறியிருந்தது.

பிற நாடுகள் என்ன செய்ய முடியும்?

வாய்ப்பு அமைத்தால் தனது வட கொரிய சகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

ஆசியான் பிராந்திய மாநாட்டில் 27 நாடுகள் பங்கேற்கின்றன. அதன் 10 உறுப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 'அமைதிக்குக் கடுமையான அச்சுறுத்தல் விளைவிக்கும்' வட கொரியாவின் நடவடிக்கைகள் குறித்து 'கடும் கவலை' கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :