ஆண், பெண் வேறுபாடுகளுக்கு என்ன காரணம்: சர்சையைக் கிளப்பிய கூகுள் ஊழியரின் கட்டுரை

  • 7 ஆகஸ்ட் 2017

கூகுள் நிறுவனத்தில் பன்முகத்தன்மையை அதிகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை விமர்சித்து, அந்நிறுவனத்தின் ஆண் ஊழியர் ஒருவர் வெளியிட்ட கருத்து பெரும் சலசலப்பை உண்டாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

நிறுவனத்தின் உயர் தொழில்நுட்பப் பொறுப்புகளில் பெண்கள் குறைவாக இருப்பதன் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிரியல் ரீதியான வேறுபாடுகளே என்று அந்நிறுவனத்தின் குறிப்பாணை ஒன்றில் அந்த ஆண் மென்பொருள் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பரவலாக விமர்சிக்கப்பட்ட அந்தக் குறிப்பாணையில், "ஆண்கள் மற்றும் பெண்களிடையே நிலவும் வேறுபாடுகளுக்குக் காரணம் பாலியல் பாகுபாடுகளே என்று நினைப்பதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், தனது சக கூகுள் ஊழியர்களிடம் இருந்து, தனக்கு "நன்றி தெரிவித்துப் பல தனிப்பட்ட தகவல்கள்" வந்ததாகக் கூறியுள்ளார்.

கூகுளின் உள் விவாதக் குழு ஒன்றில் பதியப்பட்ட அந்தக் கட்டுரையை, தொழில்நுட்ப இணையதளமான ஜிஸ்மோடோ (Gizmodo) வெளியிட்டுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்த ஊழியர், பொதுவாக, "பெண்கள் சமூகம் மற்றும் கலை சார்ந்த துறைகளில் பணியாற்ற விரும்புகிறார்கள்," என்றும், "பெரும்பாலான ஆண்கள் நிரல் மொழிக் குறியீடுகளை இயற்றும்" தொழில்நுட்பப் பணிகள் செய்வதையே விரும்புகிறார்கள் என்றும் எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்தக் கட்டுரைக்கு கூகுள் நிறுவனத்தின் பன்முகத்தன்மை பிரிவின் புதிய தலைவர் டேனியல் பிரௌன் பதில் அளித்துள்ளார். "இந்த விவகாரம் குறித்த காரசாரமான விவாதம், இதைப்பற்றித்தான் சில வார்த்தைகள் கூற அவசியப்படுத்தியுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

மதர்போர்ட் (Motherboard) என்னும் தொழில்நுட்ப இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், "அந்தக் கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ள கண்ணோட்டத்தைத் தானோ கூகுள் நிறுவனமோ ஆதரிக்கவோ, ஆமோதிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை," என்று கூறியுள்ளார்.

அந்த மின்னஞ்சலில், "பன்முகத்தன்மையும், அனைவரையும் உள்ளடக்கி செயல்படுவதும் நமது அடிப்படை விழுமியங்களில் ஒன்று. அந்தப் பண்பாட்டை நாம் தொடர்ந்து விதைத்து வருகிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.

"பன்முகத்தன்மையும், அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகளும், ஒரு நிறுவனமாக நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். அவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பதுடன் அவற்றை நீண்ட காலம் செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்," என்றும் டேனியல் பிரௌன் கூறியுள்ளார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :