சீன சமூகவலைதள பயன்பாட்டாளர்களின் பாராட்டை பெற்ற விஜேந்தர் சிங்

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பாக இந்தியாவும், சீனாவும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன.
இந்நிலையில், மும்பையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டயிள்யூபிஓ ஒரியண்டல் சூப்பர் மத்திய எடைப் பிரிவு போட்டியில், சீன வீரர் ஜுல்பிகர் மய்மைதியாலியை ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
ஆனால், தமது வெற்றியை இந்தியா-சீனா நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாகவும், அதன் அடையாளமாக தமது வெற்றியைக் குறிக்கும் பெல்ட்டைத் திருப்பி அளிக்க விரும்புவதாகவும் இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்தார்.
இது குறித்து சீன செய்தி வலைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
"இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே அமைதி நிலவ வேண்டும் என்று உங்கள் குத்துச் சண்டை வீரர் விரும்புவது உங்களுக்கு கேட்கவில்லையா மோதி" என க்ளோபல் டைம்ஸ் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
விஜேந்திர சிங்கின் இந்த செயல் குறித்து சீன சமூக ஊடகங்கவாசிகள் பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர்
"திறமை மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு விளையாட்டு வீரர்" என பீய்ஜிங்கைச் சேர்ந்த சமூக பயன்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், AFP
பீஜிங் ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங்
"நீங்கள் ஒரு சிறந்த மனிதர் ஆனால் உங்களைச் சுற்றி பல ரவுடிகள் உள்ளனர் அரசியல் ரவுடிகள் உட்பட" என ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
"குத்துச் சண்டை வீரருக்கு நன்றி, உங்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் நீங்கள் இந்த பதக்கத்தை மோதியிடம் கொடுத்து இந்திய படைகளை திரும்ப பெறச் செய்ய வேண்டும்" என ஹேபேய் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவின் தேசிய சொத்து மற்றும் குத்துச் சண்டை நட்சத்திரமான விஜேந்திர சிங்கின் யோசனை சரிதான்; அது பாராட்டிற்குரியது. ஆனால் சீனா சாலை அமைப்பைதை தடுத்து நிறுத்த இந்தியா எல்லை கடந்ததுதான் மொத்த பிரச்சனைக்கும் காரணம்" என ஜில்லின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
"இது எந்த வகையில் நற்செயல் அல்லது அமைதி என்று கொள்ளலாம்? இந்திய ராணுவத்தின் படையெடுப்பை நாம் அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒன்றிற்கும் உபயோகப்படாத ஒரு பதக்கத்தை அவர் வழங்கிறார். முட்டாள்கள்தான் இதை நம்புவர். நாம் படைகளை திரும்ப பெறாவிட்டால் அதை எதிர்த்து சண்டையிட தயங்க கூடாது" என்று ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்