ஐ.நா தடைக்கு காரணமான அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம்: வட கொரியா சபதம்

வட கொரியா

தென் கொரியாவின் பேச்சுவார்த்தை அழைப்பினை நிராகரித்துள்ள வட கொரியா, இந்த அழைப்பினை``நேர்மையற்ற ஒன்று`` என விமர்சித்துள்ளது. அத்துடன், தங்கள் நாடு மீது புதிய தடைகள் விதிக்க காரணமான அமெரிக்காவுக்கு பதிலடி தருவோம் எனவும் சபதம் ஏற்றுள்ளது.

ஞாயிறன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்க கூட்டத்தின் போது, தென் கொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் காங் க்யுங்-வே, வட கொரியா வெளியுறத்துறை அமைச்சர் ரி யோங் ஹோவுடன் அணு ஆயுத பிரச்சனை குறித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்காவால் தங்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டம் குறித்து எவ்வித உடன்பாட்டுக்கும் வாய்ப்பில்லை என வட கொரியாவின் அரசு ஊடகம் பின்னதாக கூறியுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் விதிக்கப்பட்ட புதிய தடைகளையும் வட கொரியா நிராகரித்துள்ளது.

இந்தத் தடைகள்,``நமது இறையாண்மை மீதான வன்முறை மீறல்`` என வட கொரியா அரசு ஊடகம் கூறியுள்ளது.

அண்மைய மாதங்களில், வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

படக்குறிப்பு,

வட கொரியா வெளியுறத்துறை அமைச்சர் ரி யோங் ஹோவும், தென் கொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் காங் க்யுங்-வேவும் சந்தித்து பேசியுள்ளனர்.

கொரிய தீபற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை முடிவுக்குக் கொண்டு வரவும், கொரிய போரின் போது பிரிந்த குடும்பங்கள் மீண்டும் இணைக்கவும் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தைக்கு என தென் கொரியா கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால், இந்த அழைப்புக்கு வட கொரியா இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் நடத்திய இரவு உணவு நிகழ்வில், முன்னேற்பாடு செய்யப்படாத சிறிய சந்திப்பாக இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேசிக்கொண்டதாக தென் கொரியா ஊடகங்கள் கூறுகின்றன.

தென் கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தச் சந்திப்பினை பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

அனால், அமைதி பேச்சுவார்த்தை அழைப்பினை வட கொரியா நிராகரித்துவிட்டதாக தென் கொரியா கூறியுள்ளது.

வட கொரியா மீது தடைகளை விதிக்கப்பட்டதன் எதிரோலியாக, பேச்சுவார்த்தை அழைப்பினை வட கொரிய அமைச்சர் ரி யோங் ஹோ நிராகரித்தாக தெரிகிறது என தென் கொரிய அமைச்சர் காங் கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

``இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு அவசரமான விஷயம். இதற்கு நீங்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என வட கொரிய அமைச்சரிடம் நான் கூறினேன்`` என தென் கொரிய செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியிருக்கிறார்.

புதிய தடைகள் என்னென்ன?

  • நிலக்கரி, கடல் உணவு, இரும்பு மற்றும் இரும்புத் தாது, ஈயம் மற்றும் ஈயத் தாது ஆகியவற்றை வட கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யத் தடை.
  • வட கொரியாவைச் சேர்ந்த தொழிலாளர்களை புதிதாகப் பணியமர்த்தத் தடை.
  • வட கொரியாவின் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுடன் புதிய தொழில் கூட்டு ஏற்படுத்தத் தடை.
  • பயணத் தடை மற்றும் சொத்துகளை முடக்கும் பட்டியலில் அதிகமான வட கொரியர்களைச் சேர்த்தல்.
  • பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினர்கள், அந்தத் தடைகளை எவ்வாறு அமல்படுத்தியுள்ளன என்று 90 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய வட கொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி,``தென் கொரியாவின் நேர்மறையான பேச்சுவார்த்தை அழைப்பினை, வட கொரியா முழுமையாக நிராகரிக்கவில்லை என்பது என் கருத்து`` என கூறியுள்ளார். மேலும், தென் கொரியாவின் முயற்சிகளுக்குச் சீனா ஆதரவளிக்கும் எனவும் கூறியுள்ளார்.

மூன்று நாட்டின் அமைச்சர்களும், மணிலாவில் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்க கூட்டத்தில் பங்குபெற்றனர்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வட கொரியா அணு ஆயுத திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் என வட கொரிய அரசு ஊடகம் கூறியுள்ளது.

தங்களது தற்காப்பு அணு ஆயுதங்கள் பற்றி பேச்சுவார்த்தையின் போது பேச முடியாது எனவும் அது தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்க கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன்னும் பங்கேற்று, வட கொரியா பற்றிப் பேசினார்.

வட கொரியா மீதான தடைக்கு ஆதரவாகச் சீனாவும், ரஷ்யாவும் வாக்களித்ததைப் பற்றி குறிப்பிட்ட ரெக்ஸ் டில்லர்சன், வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்பதில் உலக நாடுகள் ஒற்றுமையாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியாவை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் முன்பு சீனாவும், ரஷ்யாவும் முன்பு வேறுபட்டிருந்தன.

ஆனால், சமீபத்திய மாதங்களில் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்றும், அமெரிக்காவும் தென் கொரியாவும் ராணுவ பயிற்சிகளை நிறுத்த வேண்டும் என்றும் இரு நாடுகளும் கூட்டாக கோரியுள்ளன.

கடந்த திங்கட்கிழமையன்று கொரிய தீபகற்பத்தின் உறவுகள் பற்றி,அமெரிக்க அதிபர் டிரம்ப், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் தொலைப்பேசியில் பேசியிருந்தார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :