தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சை

  • 8 ஆகஸ்ட் 2017
படத்தின் காப்புரிமை STAR INDIA

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி, கடந்த ஆகஸ்ட் 5-ஆம்தேதியன்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசனின் எச்சரிக்கையுடன் தொடங்கியது.

அண்மையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மன நலன் குன்றியவர்கள் போல பங்கேற்பாளர்களை நடிக்க வைத்ததும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா, மன அழுத்தம் தாங்காமல் வெளியேறியதாகக் காட்டப்பட்டது.

அந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், நடிகருமான கமல் ஹாசன் இனி நிகழ்ச்சியில் சமூக பொறுப்பு இல்லாமல் சம்பவங்கள் நேர்ந்தால், நிகழ்ச்சி தனக்கு முக்கியமில்லை என்று குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தணிக்கை உண்டா?

மன நலம் குன்றியவர்களை காயப்படுத்தும் விதமாக நிகழ்ச்சியை அமைத்தது, ஓவியா வெளியேற காரணமாக நிகழ்வுகள் போன்றவை சமூக வலைதளங்களில் தொடர் விவாதங்களாகின. அந்த விவாதங்களின் ஒரு கட்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தணிக்கை செய்யப்படவேண்டுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

தொலைக்காட்சிகள் நடத்துவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கின்றது. செய்திகள் அல்லாத பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விதிகள் உள்ளன. ஆனால், தணிக்கை என்பது இதுவரை கிடையாது என்கிறார்கள் நிபுணர்கள்.

'சமூகத்தின் வெளிப்பாடு தொலைக்காட்சி'

பங்கேற்பாளர்களுக்கு மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற கதாப்பாத்திரம் வழங்கி, அவர்களை நகைப்புக்கு உரியவர்கள் போல காட்சிப்படுத்தியது தவறு என்கிறார் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் எஸ்.வி. சேகர்.

''பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நினைத்திருந்தால், அதுபோன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பம் இல்லை என்று தெரிவித்திருக்கலாம். மனநலம் பாதிக்கப்பட்டிருப்பவர்களைப் பற்றிய காட்சிகளே இல்லாமல் இருக்கவேண்டும் என்று சொல்லமுடியாது, அவர்களும் நம் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவர்களை சித்தரித்தவிதம் தவறு'' என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சட்ட ஆலோசகர் கூறுவது என்ன?

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியாக வழங்கப்படுகிறது என்ற அவர், ''நேயர்கள் பிடிக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியை நிராகரிக்கலாம். அல்லது தங்களது புகாரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் பதிவு செய்யமுடியும். இதன்மூலம் தங்களது எதிர்ப்புகளை ஒருவர் பதிவுசெய்ய வாய்ப்பு உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் தணிக்கை தேவை என்ற நிலை தற்போது இல்லை,'' என்றார்.

தணிக்கை விதிகள் கொண்டுவரும் அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்கிறார் வழக்கறிஞர் ராஜசேகர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திரைத்துறை தொடர்பான வழக்குகளில் வாதாடும் வழக்கறிஞர் ராஜசேகர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சட்ட ஆலோசகராக உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வலுத்துவரும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, ''இதுவரை வந்த மூன்று புகார்களுக்கு பதில் அளித்துவிட்டோம். சமீபத்திய நிகழ்ச்சியில் மனநலம் குன்றியவர்களை தவறாக சித்தரித்ததாக கூறி கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல் ஹாசன் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டார்,'' என்றார் ராஜசேகர்.

மேலும் நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒலிபரப்புக்கென அரசு வகுத்துள்ள விதிகளைப் பின்பற்றுவதாகவே உள்ளது, என்றார் ராஜசேகர்.

நேயர்களிடம் பிக் பாஸின் தாக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களிடம் பேசியபோது, அவர்கள் வெவ்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினர்.

மன உளைச்சலை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருப்பதாகக் கூறுகிறார் சென்னைவாசி கணேசன்.

''பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களை ஈர்ப்பதற்காக, தணிக்கை செய்வதற்கு பதிலாக, பரபரப்பை ஏற்படுத்த காட்சிகளை எடிட்டிங் செய்வதாக எண்ணுகிறேன்'' என்று கூறினார் கணேசன்

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption டிவிட்டர் பதிவு

''தற்போது எரிவாயு மானியம் ரத்தாகும், ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. நம் அன்றாட வாழ்கையில் ஏற்பட்டுள்ள சிரமங்களை விட இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையை ஏற்படுத்துவதாக எண்ணி, இதைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்'' என்று மேலும் தெரிவித்தார்

பிக் பாஸை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கவேண்டும்

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவருவதாகக் கூறும் அவரது மனைவி அகிலா, இந்நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சிக்குப் புதிது என்பதால் பார்க்க தொடங்கியதாகக் கூறுகிறார்.

''பிக் பாஸ் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தங்களது உண்மையான தன்மையுடன் உள்ளார்களா அல்லது தங்களை சுற்றி கேமிராக்கள் இருப்பதால் தவிக்கிறார்களா என்ற சந்தேகம் சமீபமாக ஏற்பட்டது. சமூகவலைதளங்களில் 'ஓவியா ஆர்மி' என அவருக்கு அதிகரிக்கும் ஆதரவு இதுவரை வெளியேறிய பிறருக்கு கொடுக்கப்படவில்லை, உண்மையில் அங்குள்ளவர்கள் பேசுவது எடிட் செய்யப்படாமல்தான் காண்பிக்கப்படுகிறதா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன,'' என்றார்.

''சில சமயம் அந்த நிகழ்ச்சியில் உள்ளவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது. தற்போது அதோடு ஒன்றாமல், ஒரு பொழுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று முடிவுசெய்துள்ளேன்,'' என்றார் அகிலா.

சுய தணிக்கை அவசியம்

திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தால் அதன் தாக்கம் பார்வையாளர்களிடம் இருப்பது இயல்பு என்கிறார் மன நல ஆலோசகர் ராஜராஜேஸ்வரி.

''திரைப்பட இயக்குனர் பாலச்சந்தர் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் தங்களது வாழ்க்கையை மாற்றிக்கொண்டவர்கள் பலர் உள்ளனர். அதிலும் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும் நிகழ்வுகளை எப்படி கையாளுவது என்று சரியான புரிதலை பெற்றோர் ஏற்படுத்தவேண்டும். அந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்,'' என்றார்.

தணிக்கை குறித்து பேசிய ராஜராஜேஸ்வரி, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அரசு தணிக்கை செய்யவேண்டும் என்ற வாதம் தவறானது என்றும், நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் தாங்களாகவே தேவை அல்லது தேவையில்லை என்பதை தீர்மானிப்பதே சரியானது என்றார்.

டிஆர்பி ரேட்டிங்கை மையமாக வைத்து நிகழ்ச்சி?

திரைப்படங்களில் தணிக்கை தேவையில்லை என்று வாதாடும் திரைத்துறை திறனாய்வாளர் சுப. குணராஜன், பிக் பாஸ் நிகழ்ச்சியின் வருமானத்தை அதிகரிக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தணிக்கை செய்வதாக தெரிகிறது என்கிறார்.

''தொலைக்காட்சியில் தணிக்கை வேண்டும் என்ற நிலை வந்தால், அனைத்து ஊடகங்களும் அரசு ஊடகம் போல காட்சியளிக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, ஒரு நாள் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை தொகுத்து அளிப்பதாகக் காட்டப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

''அதில் ஒரு நாள் காட்சிகளை எடிட் செய்வதில் தணிக்கை இருக்கும், அதில் என்ன விதமான காட்சிகள் தணிக்கை செய்யப்படுகின்றன, டி ஆர் பி ரேட்டிங்கை அதிகரிக்கும் எண்ணத்துடன் நிகழ்ச்சியில் காட்சிகள் காட்டப்படுகின்றனவா என்பதை பார்வையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்,'' என்று அவர் மேலும் கூறினார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்