பிரியாவிடை பெற்றது; சைகை மொழியில் பேசிய மனிதக் குரங்கு

சான்டெக் மனிதக் குரங்கு
படக்குறிப்பு,

சான்டெக் தனது கடைசி காலங்களில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது

சைகை மொழியைக் கற்றுக்கொண்ட முதல் மனிதக் குரங்குகளின் ஒன்றான, 39 வயதான ஒராங்குட்டான் வகை குரங்கு ஒன்று, அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் மரணமடைந்துள்ளது.

சான்டெக் என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ஒராங்குட்டான், டென்னசியில் உள்ள ஒரு மானுடவியாளருடன் ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தபோது அவரின் அறையைச் சுத்தம் செய்யவும், புதிய கருவிகளை உருவாக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டதோடு, அருகில் உள்ள ஒரு துரித உணவகத்தின் வழியையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தது.

அது தன் கடைசி ஆண்டுகளை, அதற்கு இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கழித்தது.

பிறருடன் மிகவும் பிணைந்திருக்கும் தன்மை கொண்ட சான்டெக் இல்லாமல் போனது தங்களுக்கு ஒரு இழப்பு என்று மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறப்புக்கான காரணம் என்ன?

"வட அமெரிக்காவின் வயது முதிர்ந்த ஒராங்குட்டான் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று", என்று மிருகக்காட்சி சாலையின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அதன் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 35 வயதைக் கடந்தாலே ஒராங்குட்டான் குரங்குகள் முதிர்ந்தவையாக கருதப்படுகின்றன.

ஜார்ஜியாவில் உள்ள எர்க்ஸ் நேஷ்னல் பிரைமேட் ரிசர்ச் சென்டரில் (Yerkes National Primate Research Center) பிறந்த சான்டெக், டென்னசி பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் லின் மைல்ஸுடன் வசிக்க அனுப்பி வைக்கப்பட்டது.

'கல்லாரிக்குச் சென்ற மனிதக் குரங்கு' (The Ape Who Went to College) என்று சான்டெக் குறித்து 2014-ஆம் ஆண்டு ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்க சைகை மொழியைக் கற்றுக்கொண்ட மிகச் சில மனிதக் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று.

பரிச்சயம் இல்லாத நபர்களுடன் சைகை மொழியில் பேச வெட்கப்பட்ட சான்டெக், தங்களிடம் பேச சத்தம் எழுப்புதல் மற்றும் கைகளில் சைகை செய்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

"தன்னை நன்கு அறிந்தவர்களிடம் பேசுவதில் சிறப்பான வழிகளைக் கையாண்ட சான்டெக் ஒரு தனித்துவம் மிக்க ஆளுமை," என்று கூறியுள்ள அந்த மிருகக்காட்சி சாலையின் துணைத் தலைவர் ஹெலே மர்ஃபி, "சான்டெக் எங்களுடன் 20 ஆண்டுகள் வாழ்ந்தது எங்களுக்கு ஒரு பெருமிதம்," என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :