ஆஸ்திரேலிய சிறுவனின் கால்களை கடித்த கடல் பூச்சிகள் எந்த வகையை சேர்த்தவை?

  • 8 ஆகஸ்ட் 2017
கடல் பூச்சி படத்தின் காப்புரிமை JARROD KANIZAY

ஆஸ்திரேலியாவின் பிரபல கடற்கரையில் கால்களை நனைத்த சிறுவனின் கால்களில் ரத்தம் வழிந்ததற்கான காரணம் என்ன?

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் காயத்தின் காட்சி நெருக்கமாக காட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னை சேர்ந்த சாம் கனிசே என்ற சிறுவனின் கால்களில் ரத்தம் வழிந்த புகைப்படம் உலகம் முழுவதிலும் கவனத்தை பெற்றது.

கால்பந்து விளையாடிய பிறகு தனது வீட்டின் அருகில் உள்ள கடற்கரையில் கால்களை நனைத்துள்ளார் சாம்.

இந்நிலையில், கால்களில் ரத்தம் வழிய ``போரில் அடிப்பட்டது போல`` தன் மகன் வீட்டுக்கு வந்ததாகக் கூறும் சாம்மின் தந்தை ஜரோட் கனிசே கூறுகிறார்.

சாமின் கால்களில் ரத்தம் கொட்டியதற்கான காரணத்தை முதலில் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சாமின் தந்தையே இதற்கான காரணத்தை கண்டுபிடிக்கக் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

சம்பவம் நடந்த அதே இடத்தில் இருந்து மணல் நிறத்திலான வித்தியாசமான பூச்சிகளை வலை மூலம் சேகரித்த அவர், அந்த பூச்சிகளை கடல் உயிரியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனை ஆராய்ந்த விக்டோரியா அருங்காட்சியகத்தின் கடல் உயிரியலாளர்கள், இந்தக் கடல் பூச்சிகள் லைசானாசிடியே கடல் உயிரின குடும்பத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை MUSEUMS VICTORIA/CAROLINE FARRELLY
Image caption கடல் பூச்சிகள் லைசானாசிடியே கடல் உயிரின குடும்பத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என்கிறது விக்டோரியா அருங்காட்சியகம்

இந்த கடல் பூச்சிகள், கடலில் இறந்து போன மீன், நண்டு போன்றவற்றை இரையாக உண்ணும்.

``கடல் பூச்சிகள் மட்டும் இல்லை என்றால், கடல் முழுவதிலும் இறந்து போன மீன்களும், பறவைகளும் மிதக்கும்`` என கடல் உயிரியல் நிபுணரான மருத்துவர் ஜெனிபோர் வால்கர்-ஸ்மித் கூறுகிறார்.

இவைகள் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

``நூற்றுக்கணக்கான கடல் பூச்சிகள் நீண்ட நேரமாக கடிக்கும் போது தான், உணர்ச்சி ஏற்படும். சாமிற்கும் சிறிது நேரம் கழித்தே உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காயங்களும் பெரிய அளவில் இருக்கும்`` என மோனாஷ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரிச்சர்ட் ரெய்னா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை JARROD KANIZAY

கால்களில் முள் குத்துவது போன்ற உணர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு, அரை மணி நேரம் கடலில் நின்றுகொண்டிருந்ததாக சாம் கூறுகிறார்.

சிறு சிறு கடிகளால் சாமின் கால் திசுக்கள் சேதமடைந்ததால், ஆரம்பத்தில் அவருக்கு ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது போன்ற சம்பவம் மிகவும் அரிதான ஒன்று என்றும் பேராசிரியர் ரிச்சர்ட் கூறியுள்ளார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்