மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றினால் சிறை: நேபாளத்தில் புதிய சட்டம்

  • 10 ஆகஸ்ட் 2017
மாதவிடாய் நேபாளம் படத்தின் காப்புரிமை AFP

மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றித் தனிமைப்படுத்தும் செயலைக் குற்றமாக கருதும் சட்டத்தை நேபாள அரசு இயற்றியுள்ளது.

பெண்களை மாதவிடாய் காலத்தில் விட்டை விட்டு வெளியேற்றுபவர்களுக்கு, மூன்று மாத சிறை தண்டனையும் முப்பது டாலர் அபராதமும் விதிக்கப்படும் என இச்சட்டம் கூறுகிறது.

அண்மைக் காலத்தில், தனிமைப்படுத்தப்படக் குடிசையில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் இறந்த பிறகு "செளபாடி" என்று அழைக்கப்படும் இந்த வழக்கம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆனால், இச்சட்டத்தால் உண்மையில் இந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியுமா? என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பண்டைய இந்து மதத்தின் படி, பெண்கள் மாதவிடாய் காலத்தின் போதும், குழந்தை பிறப்புக்கு பின்பும் அசுத்தமானவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, குடிசைகளிலும் மாட்டு தொழுவத்திலும் தங்க வைக்கப்படுகின்றனர்.

Image caption ``இந்த வழக்கத்தினை பாதுகாப்பதில் பெண்களும் ஒரு வகையில் உதவிக்கரமாக உள்ளனர்``

பெண்கள்,மாதவிடாய் காலத்தின் போது ஆண்களையும், பசுக்களையும் தொடக்கூடாது. சில உணவுகளை அவர்கள் உண்ண முடியாது. மேலும், வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையினை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும்.

இதனால், இயற்கை உபாதைகளைக் கழிக்க கிராமத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மாதவிடாய் காலத்தில் இளம் பெண்களால் பள்ளிக்குச் செல்ல முடியாது. குளிர் காலத்தில், நடுக்கத்துடன் தனிமை குடிசைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த மாதம், மாதவிடாய் காலத்தின் போது வீட்டுக்கு வெளியே உள்ள குடிசையில் தங்க வைக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை பாம்பு கடித்ததில், அவர் இறந்து போனார்.

இதற்கு முன்பாக டிசம்பர் 2016-ம் ஆண்டு குடிசையை சூடாக வைத்திருக்க வைக்கப்பட்டிருந்த தீயால், அதில் தங்கியிருந்த பதினைந்து வயது பெண் மூச்சுத்திணறி இறந்தார்

ஆழமான பிரச்சனை

பெண்களை மாதவிடாய் காலத்தின் போதும், குழந்தை பிறப்புக்கு பின்பும் செளபாடி என்ற வழக்கப்படி தனிமைப்படுத்தக் கூடாது என்றும், இது போன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு உட்படுத்தக் கூடாது என்றும் புதியதாக இயற்றப்பட்ட இச்சட்டம் கூறுகிறது.

செளபாடி வழக்கம் மக்களின் ஆழமான மத நம்பிக்கையுடன் தொடர்புடையது. மேலும், இதனைப் பாதுகாப்பதில் பெண்களும் ஒரு வகையில் உதவிக்கரமாக உள்ளதால் புதிய சட்டத்தைச் செயல்படுத்துவது கடினம்`` என பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் பெமா லஹாகி, ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

2005-ம் ஆண்டு ``செளபாடி`` வழக்கத்தைத் தடை செய்து நேபாள அரசு உத்தரவிட்ட போதிலும், இதனைத் தொடர்பவர்களுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படவில்லை. இதனால், மேற்கு கிராமப்புற பகுதிகளில் இந்த வழக்கம் இன்னும் தொடர்ந்து வருகிறது.

நேபாளம் முழுவதிலும் 15 வயது முதல் 49 வயதுடைய 19 சதவிகிதம் பெண்கள் செளபாடி வழக்கத்திற்கு உட்படுத்தப்படுவதாக 2010-ல் வெளியான அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கை கூறுகிறது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்