யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம்

facebook படத்தின் காப்புரிமை facebook

சமூக ஊடகங்களில் மிக முக்கிய நிறுவனமான ஃபேஸ்புக் அடுத்தகட்ட நகர்வாக, யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக காணொளி வெளியிடும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் பயனாளர்கள் மிக விரைவில் பல வகையான காணொளிகளை வாட்ச் டேப் மூலம் பார்க்க இயலும். இதில் சில சமூக வலைதளங்களால் நிதியுதவி செய்யப்பட்ட காணொளிகளும் அடங்கும்.

முகநூல் பயனாளர்கள் அவர்களின் நண்பர்கள் பார்க்கும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு புதிய காணொளிகளை இதன் மூலம் காண முடியும்.

நண்பர்கள் பதிவிடும் கருத்துகளையும் பயனாளர்களால் பார்க்க முடியும். மேலும், வீடியோக்களை காண்பதற்கு குழுக்களையும் உருவாக்க முடியும்.

படத்தின் காப்புரிமை lionel bonaventure

"காணொளிகளை செயலற்ற நிலையில் பார்க்க வேண்டியதில்லை" என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும், தங்களுடைய அனுபவங்களை பகிர்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பார்க்க முடிந்தாலும், அவை பெரும்பாலும் பயனற்ற பொழுதுபோக்கு காணொளியாகவோ அல்லது செய்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் சிறிய தொகுப்புகளாகவோ இருக்கின்றன.

இந்த சேவையின் மூலம், ஃபேஸ்புக் மற்றும் காணொளி தயாரிப்பவர் என இரண்டு தரப்பிற்கும் வருவாய் வருவதற்கான சாத்தியம் உள்ளது. இதனால், காணொளிகளை பார்க்கும் போது விளம்பரங்களை பயனாளர்கள் பார்க்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை நிலவரம் என்ன?

ஃபேஸ்புக் தற்போது சிக்கலான மற்றும் நெரிசல் மிகுந்த சந்தையில் நுழைகிறது. இதனால், பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் யூ ட்யூப், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணைய சேவை நிறுவனங்களுடனும் போட்டியிட வேண்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை facebook
Image caption ஃபேஸ்புக் தற்போது சிக்கலான மற்றும் நெரிசல் மிகுந்த சந்தையில் நுழைகிறது.

இதனிடையே நெட்ஃப்ளிக்ஸுடன் ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 2019-ம் ஆண்டில் இருந்து நேரடியாக தன்னுடைய நிகழ்ச்சிகளை நேயர்களுக்கு வழங்கவுள்ளதாக டிஸ்னி புதன் கிழமையன்று அறிவித்துள்ளது.

மேலும், அடுத்த ஆண்டிலிருந்து விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.

பேஸ்பால், பெண்கள் பாஸ்கெட்பால், குழந்தை பராமரிப்பு மற்றும் வன உயிரினங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை பயனாளர்களுக்கு வழங்க ஃபேஸ்புக் தயாராகியுள்ளது.

மேலும், வாக்ஸ் மீடியா, பஸ்ஃபீட், ஏடிடிஎன், க்ரூப் நைன் மீடியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்கவும் ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்