தங்கள் தூதர்களின் காது கோளாறுக்காக கியூபா தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா

கியூபாவுக்கான அமெரிக்கத் தூதர்களுக்கு மர்மமான முறையில் ஏற்பட்ட காது கோளாறுகளைத் தொடர்ந்து, தமது நாட்டில் இருந்து இரண்டு கியூபா தூதர்களை அமெரிக்கா வெளியேற்றியது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதர்களின் காது கோளாறுக்காக கியூபா தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா!
படக்குறிப்பு,

அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு இரண்டு கியூப தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உடல் நலப்பிரச்சனைக்கு காரணம் என்ன என்பது உறுதியாகத் தெரியவில்லை என அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஹீதர் நவெர்ட் கூறியுள்ளார்.

ரகசியமான ஒலி உமிழும் அல்லது பெரும் இரைச்சலை உண்டாக்கும் கருவிகளால் அத் தூதர்களின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து விசாரிப்பதாக கியூப வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டின் தூதர்களை அமெரிக்கா வெளியேற்றியது நியாயமற்றது என்று கூறிய கியூபா, அதே நேரம் என்ன நடந்தது என்ன என்பதைத் தெளிவுபடுத்த அமெரிக்காவுடன் ஒத்துழைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தூதர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ எதிரான எந்த நடவடிக்கைக்கும் தங்கள் மண்ணைப் பயன்படுத்துவதை கியூபா எப்போதும் அனுமதித்ததில்லை; இனியும் அனுமதிக்காது என்று அந் நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெறும் காதுக்குப் புலப்படாத, ஒலியை உமிழ்ந்து காதைச் செவிடாக்கும் கருவிகளோடு இத் தூதர்களின் கேட்கும் திறன் இழப்பைத் தொடர்புபடுத்த முடியும் என்று அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத் தூதர்களின் வீட்டுக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ இந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இந் நிறுவனத்திடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியா போன்ற வேறொரு நாடு இச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் வாய்ப்பு குறித்து விசாரணை அதிகாரிகள் பரிசீலிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐந்து தூதர்கள் (மற்றும் அவர்களின் இல்லத் துணைவர்கள்) இப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டனர், ஆனால், குழந்தைகள் யாரும் இதில் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தூதர்களுக்கு இந்த வினோதமான அறிகுறிகள் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்படத் தொடங்கியது. உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லாததால் அவர்களில் சிலர் அமெரிக்காவுக்குத் திருப்பி அழைக்கப்பட்டதாக நவெர்ட் கூறினார். அரசாங்கம் இதனை தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும், ஒரு விசாரணை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட இரண்டு கியூபத் தூதர்களும் மே மாதம் வெளியேறியதாக ஹவானாவில் இருந்து பி.பி.சி. செய்தியாளர் வில் கிராண்ட் கூறுகிறார்.

கியூபாவின் பாதுகாப்பு அமைப்புகள் அமெரிக்கத் தூதர்களை நெருக்கமாகக் கண்காணிக்கின்றன. அவர்களில் பலர் கியூப அரசு அளித்து, பராமரிக்கும் வீடுகளில் வசிக்கின்றனர்.

50 ஆண்டுகால மோதல்களுக்குப் பிறகு 2015-ல்தான் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.

அமெரிக்கத் தூதர்களுக்கு கியூபாவில் நிகழும் துன்புறுத்தல்களின் சமீபத்திய உதாரணம்தான் குறிப்பிடப்படும் சம்பவங்கள் என்று ஃபுளோரிடா மாகாண செனட்டர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஹவானாவில் வேலை செய்யும் அமெரிக்கர்களை கியூப அரசு பல பத்தாண்டுகளாகத் துன்புறுத்துவதாகவும், ஒபாமாவின் அமைதி நடவடிக்கைகளால் அது நிற்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படுத்திய காயங்கள், காஸ்ட்ரோ நிர்வாகம் எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும் அவர்கள் சர்வதேச விதிகளை மீறுவதையும் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

உண்மையாக இருக்கும் பட்சத்தில், பெரும் இரைச்சலை உண்டாக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தூதர்களை காயப்படுத்துவது முன்னெப்போதும் இல்லாதது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :