வட கொரியாவை எச்சரிக்கும் டிரம்ப்: `நடுக்கத்துடன் இருங்கள்'

  • 11 ஆகஸ்ட் 2017

அமெரிக்காவுக்கு ஏதேனும் ஊறு விளைவித்தால் வட கொரியா 'மிக மிக நடுக்கத்துடன் இருக்க வேண்டும்,' என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியா 'ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை' என்றால், சில நாடுகள் பிரச்னைகளைச் சந்தித்த நிலை, வட கொரிய அரசுக்கும் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கப் பிராந்தியமான குவாம் அருகே நான்கு ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிருப்பதாக வட கொரியா தெரிவித்த பின்னர் இந்தக் கருத்தை டிரம்ப் கூறியுள்ளார்.

வட கொரியாவுடனான போர் பேரழிவை உண்டாக்கும் என்று கூறியுள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ், ராஜதந்திர நடவடிக்கைகளே பலன் தரும் என்று கூறியுள்ளார்.

"அமெரிக்காவின் நடவடிக்கைகள், ராஜதந்திரத்தை முன்னிறுத்துவது. அது ராஜதந்திர ரீதியான பலன்களைப் பெற்று வருகிறது," என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா மீது வட கொரியா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டுக்கு எதிரான போரில் இணைந்துகொள்ள முழுமையாகத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

"அமெரிக்கா மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், ஆன்சுஸ் உடன்படிக்கையின்படி, ஆஸ்திரேலியா அமெரிக்காவுக்கு உதவும்," என்று ஒரு வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள அவர், "அந்த உடன்படிக்கையின்படி அத்தகைய சூழல் ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவுக்கு உதவும்," என்றார்.

கடந்த ஜூலை மாதம், இரண்டு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வட கொரியா சோதித்த பின்னர், பதற்றம் அதிகரித்தது. வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு எதிராக, ஐ.நா அவையும் அந்நாட்டுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆஃப்கனிஸ்தானில் நிலை நிறுத்தப்படவுள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை குறித்த முடிவை அறிவிக்க இருந்ததாகவும் டிரம்ப் கூறினார்.

முந்தைய அமெரிக்க நிர்வாகங்கள் வட கொரியாவை மிகவும் மென்மையாகக் கையாண்டதாகவும், அதன் நெருங்கிய கூட்டாளியான சீனாவுடன் உறவாடியதாகவும் டிரம்ப் விமர்சித்தார்.

"நாம் நேசிப்பவர்களையோ, நாம் பிரதிநித்துவப்படுத்துபவர்களையோ, நம் கூட்டாளிகளையோ, நம்மையோ வட கொரியா தாக்க நினைத்தால் கூட, அவர்கள் மிக மிக நடுக்கத்துடனேயே இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

எனினும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமேரிக்கா எப்போதுமே பரிசீலனை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :